ஆன்மிகம்

நாளை வைகுண்ட ஏகாதசிக்கு விரதம் இருப்பது எப்படி?

Published On 2017-01-07 05:48 GMT   |   Update On 2017-01-07 05:48 GMT
விஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் முதன்மையானதாக இருப்பது ‘ஏகாதசி விரதம்’. நாளை எப்படி விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட வேண்டும் என்பதை பார்க்கலாம்.
வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளான தசமி அன்று, ஒரு வேளை உணவு மட்டுமே உண்ண வேண்டும். அடுத்த நாள் ஏகாதசி அன்று முழு நாளும் உபவாசம் இருந்து விஷ்ணுவை நினைத்து தியானிக்க வேண்டும். அவர் புகழ்பாடும் கீர்த்தனைகளை பாராயணம் செய்ய வேண்டும்.

அன்றைய தினம் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து இறைவனை துதி செய்ய வேண்டும். பிறகு மறுநாள் காலை துவாதசி அன்று, பகவானின் நாமத்தைச் சொல்லியபடி துளசி தீர்த்தத்தை அருந்தி, உபவாசத்தை முடித்துக் கொள்ளலாம். தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய மூன்று நாட்களும் விரதம் இருப்ப வர்களின் சிந்தனையில், இறைவனின் நினைப்பு மட்டுமே இருக்க வேண்டும்.

விரதம் இருப்பவர்கள் தங்கள் பணி களைச் செய்யும் வேளைத் தவிர மற்ற நேரங்களில் இறைவனின் புகழை பாடியபடியே இருக்க வேண்டும். ஏகாதசி அன்று விஷ்ணு ஆலயங்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு இறைவனை வழிபடலாம். அல்லது வீட்டில் இருந்தபடியே இறைவனின் திருவுருவ படத்திற்கு மலர் அலங்காரம் செய்து வழிபாடு செய்யலாம்.

இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அகலும், சகல செல்வங்களும் உண்டாகும். பகைவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆவார்கள். மேலும் முக்திக்கான வழியை அடைவீர்கள்.

Similar News