ஆன்மிகம்

ஐயப்பன் விரதத்தின் போது சபரிமலையில் செய்ய வேண்டிய வழிபாடுகள்

Published On 2016-11-18 09:08 GMT   |   Update On 2016-11-18 09:08 GMT
சபரிமலையில் ஐயப்பனுக்கு விரதம் மேற்கொள்ளும் போது செய்ய வேண்டிய வழிபாடுகளை கீழே பார்க்கலாம்.
1. பதினெட்டு படி நெருங்கியதும், படிக்கு வலதுபுறம் சுவரில் சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். உடன் நமது மனதில் ஐயனிடம் பிரார்த்திப்பதை மனதில் வேண்டிக்கொண்டு 18 படிகளையும் தொட்டு வணங்கிக்கொண்டே 18 படி ஏற வேண்டும்.

2. தீபஸ்தம்பம் (கொடிமரத்தை) வணங்கி பின் நிதானமாக வரிசையில் நின்று அகிலாண்ட கோடி நாயகன் ஐயன் ஐயப்பனை திவ்ய தரிசனம் செய்து மனமுருக வேண்ட வேண்டும். நமது குறைகளை கூறி நிவர்த்திக்க வேண்ட வேண்டும்.

3. சன்னிதானத்தின் மேலேயுள்ள கன்னிமூல கணபதியை வலம் வந்து கபற்பூரம் ஏற்றி வணங்க வேண்டும்.

4. வேண்டுதல் இருந்தால் மணி கட்ட வேண்டும்.

5. கணபதி கோவிலுக்கு அருகில் உள்ள நாகராஜா (ஸ்ரீசண்முக சுவாமி சன்னதியை) வணங்கி பன்னீர் சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம் போன்றவற்றை வைத்து சுவாமியை வணங்க வேண்டும்.

6. சன்னிதானத்தில் இருந்தே நடைமேடை வழியாக மஞ்சமாதா கோவில் அடைந்து முதலில் கருப்ப சாமியை வணங்கி, அவல், நெல் போரி, வெல்லம், பழம், தேங்காய், வறுத்த பொரி காணிக்கை இங்கு வைக்க வேண்டும். கருப்பசுவாமிக்கு திராட்சை பழம், கற்கண்டு, கற்பூரம் காணிக்கை வைத்து வணங்க வேண்டும்.

7. சர்ப்ப தோஷம் சத்ரு தோஷம் ஏற்படாமல் இருக்க அங்குள்ள புள்ளுவன்களிடம் அமர்ந்து பாட்டு படிக்க வேண்டும்.

8. மணிமண்டபம் சுற்றி வந்து வணங்க வேண்டும்.

9. அடுத்து நாகராஜா,, நாகயட்சி ஆகிய தெய்வங்களுக்கு கற்பூரம் கொளுத்தி வணங்க வேண்டும்.

10. நவக்கிரகங்களை 9 முறை சுற்றி வந்து கற்பூரம் கொளுத்தி வணங்க வேண்டும்.

11. மலை தெய்வங்களை (காட்டு தேவதைகளை) மஞ்சள் பொடி தூவி வணங்கி வலம் வர வேண்டும்.

12. மஞ்சமாதா எழுந்தருளியுள்ள கோவிலை முழுத் தேங்காயை கீழே உருட்டி கோவிலை வலம் வர வேண்டும். இந்த மாளிகைப்புரத்தம்மா சன்னதியில் அம்மனுக்கு பட்டு துண்டு, மஞ்சள் பொடி, குங்குமம், வெற்றிலை பாக்கு வைத்து வணங்க வேண்டும். வணங்கிய பின் அம்மனை தொழுதபடியே முதுகை கோவில் பின் பக்கம் பார்த்த நிலையில் படி இறங்கி தங்குமிடம் செல்ல வேண்டும்.

13. வாபர் கோவிலில் சென்று நெல் மிளகு ஊதுபத்தி வைத்து வணங்க வேண்டும்.

14. அவரவர் இருமுடி கட்டுப் பிரித்து குருசாமி மூலம் நெய் தேங்காய் உடைத்து மஞ்சமாதா கோவிலுக்கு அருகில் கிடைக்கும் நெய் அபிஷேக சீட்டு பெற்று ஐயன் பூதநாதனுக்கு நம் நெய்யை அபிஷேகம் செய்து தரும் நெய்யை பெற்று வர வேண்டும். டப்பாவில் நெய்யை அடைத்துக் கொள்ள வேண்டும்.

15. அரவணப்பாயாசம் அப்பம் வாங்கிக் கொள்ள வேண்டும்.

16. திரும்ப செல்லும் போது (அனுமதித்தால் 18 படி ஐயப்பனை பார்த்தபடி இறங்கலாம்). 18 படிக்கு அருகில் சிதறு தேங்காய் உடைக்க வேண்டும்.

17. ஓமகுண்டத்தில் ஒரு தேங்காய் மூடி போட வேண்டும்.

18. பம்பை திரும்ப வேண்டும்.

- ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News