ஆன்மிகம்
இஸ்லாம் வழிபாடு

துன்பத்தை போக்கும் அழகிய ஆறுதல்

Published On 2021-08-24 04:19 GMT   |   Update On 2021-08-24 04:19 GMT
‘ஒருவர் துன்பத்தில் சிக்குண்டவருக்கு ஆறுதல் கூறினால், துன்பப்பட்டவருக்குக் கிடைக்கும் நன்மையைப் போன்றே ஆறுதல் கூறுபவருக்கும் கிடைக்கும்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: திர்மிதி).
இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் மனித வாழ்க்கை. இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கருத்து தெரிவிக்கிறது:

‘நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது’. (திருக்குர்ஆன் 94:5)

எவரும் வாழ்நாள் முழுவதும் இன்பமாகவே வாழ்ந்தார் என்று வரலாறு கிடையாது. அல்லது ஒருவர் ஆயுள் முழுவதும் துன்பமாகவே வாழ்ந்தார் என்ற சரித்திரமும் கிடையாது.

மனித வாழ்க்கை ஒரு புத்தகத்தைப் போன்றது. ஒரு பக்கம் துன்பமும், மறுபக்கம் இன்பமும் நிறைந்தது. ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்று மனிதனுக்கும் இன்பம்-துன்பம் என இரு பக்கங்கள் உண்டு.

இன்பமே இல்லாத வாழ்க்கை நரக வாழ்க்கை. துன்பமே இல்லாத வாழ்க்கை சொர்க்க வாழ்க்கை.

“சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்தபின்னர் பொது அறிவிப்பாளர் ஒருவர், ‘இனி நீங்கள் இன்பத்துடன் தான் இருப்பீர்கள்; ஒருபோதும் துன்பம் அடையமாட்டீர்கள்’ என்று அறிவிப்புச் செய்வார் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

துன்பம் என்பது ஒருவகை வலியினால் ஏற்படும் சோகமான ஒரு உணர்வலை. அது தோல்வியால் வரலாம்; நஷ்டத்தால் ஏற்படலாம்; விருப்பமானதை இழப்பதினால் கூட நடக்கலாம்.

துன்பத்தை சந்திக்கும் ஒருவர் சகஜமான நிலைக்கு அப்பாற்பட்டு யாரிடமும் பேசாமல் மவுனமாகி விடுவார். தனிமையை விரும்புவார். மனஅழுத்தம் ஏற்பட்டு இளைப்பாற ஓய்வெடுப்பார். அடக்கமுடியாமல் அழுவார்.

இவருக்கு அப்போது தேவை மன ஆறுதலான நாலு வார்த்தைகள் தான்.

துன்பத்தில் ஆறுதல் கூறும் அழகிய வார்த்தை என்பது வலி நிவாரணி போன்றது. வலிகள் இருந்தாலும் இந்த வார்த்தையால் மூளை வலியை உணராமல் செய்து விடும்.

நீ துன்பத்தில் தவிக்கும்போது ஆறுதல் கூறுபவர் நீ விரும்பும் நபராக இருக்கமாட்டார். உன்னை விரும்பும் நபராக இருப்பார்.

துன்பத்தில் கூறப்படும் அழகிய ஆறுதல் வரிகள் உள்ளன. அவை வருமாறு:

‘இறைவன் உமக்கு மகத்தான சன்மானம் வழங்கட்டுமாக! அவன் அழகிய ஆறுதலை அளிக்கட்டுமாக! மரணித்தவருக்கு மன்னிப்பை வழங்குவானாக!’ - இவை அனைத்தும் நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்திய அழகிய ஆறுதல் வரிகள்.

‘இறைவன் உமக்கு கருணை பொழியட்டும்! துன்பத்திலிருந்து உம்மை விடுவிக்கட்டும்! உமது துன்பத்தை அகற்றிவிடட்டும்! என்பது போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்த வேண்டும்.

உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்களுடைய புதல்வியரில் ஒருவருடைய (ஸைனப் (ரலி) அவர்களுடைய) தூதுவர் அங்கு வந்தார். ஸைனப் உடைய புதல்வர் இறக்கும் தறுவாயில் இருப்பதாகச் சொல்லி, ஸைனப் அழைப்பதாகத் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள், “நீ ஸைனபிடம் சென்று, “அல்லாஹ் எடுத்துக் கொண்டதும் அவனுக்குரியதே! அவன் கொடுத்ததும் அவனுக்குரியதுதான். ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. ஆகவே, (அல்லாஹ்விடம் அதற்கான) நன்மையை எதிர்பார்த்து பொறுமையாக இருக்கச்சொல்” என்று சொல்லி அனுப்பினார்கள். (நூல்: புகாரி)

‘ஒருவர் துன்பத்தில் சிக்குண்டவருக்கு ஆறுதல் கூறினால், துன்பப்பட்டவருக்குக் கிடைக்கும் நன்மையைப் போன்றே ஆறுதல் கூறுபவருக்கும் கிடைக்கும்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: திர்மிதி).

‘ஒரு இறைநம்பிக்கையாளர் துன்பத்தில் சிக்கிய தமது சகோதரருக்குப் பொறுமையும், ஆறுதலும் கூறி அவரைத் தேற்றினால், அவருக்கு மறுமைநாளில் இறைவன் சங்கை எனும் ஆடையை அணிவிப்பான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: முஹம்மத் பின் அம்ர் பின் ஹஸம் (ரலி), நூல்: இப்னுமாஜா)

துன்பத்தில் சிக்குண்டவரை சாதி, மத, இன, நிற, மொழி, தேசியம் பாராமல் அவருக்கு ஆறுதல் கூறுவது நபியின் வழிமுறையாகும். நபி (ஸல்) அவர்கள், நோய்வாய்ப்பட்டு மரண தருவாயில் இருக்கும் ஒரு யூத சிறுவனின் வீட்டுக்கே சென்று ஆறுதல் கூறிவிட்டு வந்த நிகழ்வு நெகிழ்ச்சியைத் தருகிறது.

துன்பத்திற்கு ஏது சாதி, மதம், ஆறுதலில் உள்ளது மனிதநேயம்.

துன்பத்தில் உள்ளவர்களுக்கு அழகிய வார்த்தைகளால் ஆறுதல் கூறி மனிதநேயம் வளர்ப்போம்.

அ. செய்யது அலி மஸ்லஹி, திருநெல்வேலி டவுண்.
Tags:    

Similar News