ஆன்மிகம்
இஸ்லாம் வழிபாடு

பாவ மன்னிப்புக்கு வழிகாட்டும் முகரம் திருநாள்

Published On 2021-08-17 05:01 GMT   |   Update On 2021-08-17 05:01 GMT
இத்தனை சிறப்பு மிக்க இந்த நாட்களில் நாம் நோன்பு நோற்று இறைவனை வணங்கி முகரம் மாதத்தை மகிமைப்படுத்துவோம். நமது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு இறைவனின் அருள்பெறுவோம். ஆமீன்.
இந்த ஆண்டு முகரம் 10 வது நாள் 20.8.2021 (வெள்ளிக்கிழைமை) அன்று வருகிறது.)

தமிழ், ஆங்கில புத்தாண்டு போல இஸ்லாமிய புத்தாண்டு ‘ஹிஜிரி’ என்ற கணக்கீட்டில் கடைப்பிடிக்கப்படுகிறது. இஸ்லாமிய ஆண்டு சந்திரனை அடிப்படையாக கொண்டது. முகரம், சபர், ரபியுல் அவ்வல், ரபியுல் ஆகிர், ஜமாதில் அவ்வல், ஜமாதில் ஆகிர், ரஜப், ஷபான், ரமலான், ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ் ஆகிய 12 மாதங்கள் இஸ்லாமிய மாதங்கள் ஆகும்.

ஒவ்வொரு மாதமும் பிறையைப்பார்த்து கணக்கிடுவார்கள். குறிப்பிட்ட நாளில் பிறை தெரியாவிட்டால் அந்த மாதம் 30 நாள் ஆக கணக்கிடப்படும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதீனாவுக்கு நாடு துறந்து (ஹிஜரத்) சென்ற காலத்தில் இருந்து இஸ்லாமிய ஆண்டு கணக்கிடப்பட்டு வருகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா சென்றிருந்த போது ஒரு நிகழ்வு அவர்கள் கவனத்திற்கு வந்தது. அதாவது, மூசா நபியை இறைத்தூதராக ஏற்றுக்கொண்ட யூதர்கள் முகரம் மாதத்தில் நோன்பு வைத்திருந்ததை அவர் அறிந்தார். இதற்கான விளக்கத்தை நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட போது சரித்திர நிகழ்வு ஒன்றை யூதர்கள் கூறினார்கள்.

மூசா நபி (அலை) அவர்கள் ஏகத்துவ பிரச்சாரம் செய்த போது எகிப்து நாட்டை பிர்அவ்ன் என்ற சர்வாதிகாரி ஆட்சி செய்து வந்தான். அவனிடம் இறைக்கொள்கையை மூசா நபி அவர்கள் எடுத்துக்கூறினார்கள். இதை அந்த மன்னன் ஏற்க மறுத்ததோடு, மூசா நபிகளுக்கு தொல்லைகள் கொடுத்து கொடுமைகள் பல செய்தான்.

மூசா நபியையும் அவரது ஆதரவாளர்களையும் காப்பாற்ற இறைவன் கட்டளை பிறப்பித்தான். உடனே எகிப்து நாட்டில் இருந்து வெளியேறும்படி இறை கட்டளை பிறந்தது. இதை ஏற்று தனது ஆதரவாளர்களுடன் மூசா நபிகள் வேறு நாட்டுக்கு இடம் பெயர்ந்தனர். இதை அறிந்த மன்னன் பிர்அவ்ன் தனது படைகளை அழைத்துக்கொண்டு அவர்களை பின்தொடர்ந்து விரட்டிச்சென்றான்.

மக்கள் சென்ற வழியில் செங்கடல் குறுக்கிட்டது. எனவே மக்கள் தப்பிக்க வழியின்றி செங்கடல் முன்பு திரண்டனர், மூசா நபிகளும் அவரது கூட்டத்தாரும். அப்போது இறைவன் உத்தரவுப்படி தனது கையில் வைத்திருந்த தடியால் கடல் நீரை ஓங்கி அடித்தார்கள். அப்போது செங்கடல் இரண்டாக பிளந்து 12 வழிகள் உருவானது. உடனே அந்த வழியாக மூசாவும் அவரது ஆதரவாளர்களும் தப்பித்து மறு கரைக்குச் சென்றனர்.

மூசா நபிகளை விரட்டி வந்த பிர்அவ்ன் மற்றும் அவனது தளபதி ஹாமான் மற்றும் படைகள் இந்த அதிசயத்தை கண்டனர். அப்போதும் இறைவனின் கட்டளைக்கு எதிராகவே செயல்பட முடிவு செய்தனர். கடலில் தெரிந்த வழிகளில் பிர்அவ்ன் படைகள், மூசாவை விரட்டிச்சென்றன. ஆனால் மூசா நபிகளும் அவருடன் வந்தவர்களும் கரைஏறியதும் கடல் நீர் வழியை மூடியது. பிர்அவ்ன் மற்றும் அவனது படைகள் மொத்தமும் கடல் நீரில் மூழ்கி அழிந்து போயினர்.

கொடுங்கோலன் பிர்அவ்ன் மன்னனிடம் இருந்து மூசா நபிகளை இறைவன் பாதுகாத்த நாள் தான் முகரம் மாதம் 9 வது நாள் ஆகும். இதை நினைவு படுத்தும் வகையிலே தான் அன்றைய தினம் நாங்கள் நோன்பு நோற்று இறைவனை வணங்குகிறோம், என்று யூதர்கள் தெரிவித்தனர்.

இதைக்கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘உங்களை விட அந்த நாளை கண்ணியப்படுத்துவதில் நாங்கள் ரொம்பவும் கடமைப்பட்டவர்கள். எனவே முகரம் மாதம் 9, 10 ஆகிய இரு நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்’ என்று கூறினார்கள்.

இந்த நோன்பை ‘ஆஷுரா நோன்பு’ என்றும் அழைப்பார்கள்.

இந்த நோன்பை ஒருவர் கடைப்பிடித்தால் அவரது ஒரு வருடத்தின் பாவங்கள் மன்னிக்கப்படும். மேலும் இந்த நாளில் தான் ஆதம் (அலை) அவர்களின் பாவமன்னிப்பை இறைவன் ஏற்றுக்கொண்டான். இறைவன் ஆதமை படைத்ததும் இந்த நாளில் தான், சொர்க்கத்தில் அவரை ஏற்றுக்கொண்டதும் இந்த நாளில் தான்.

நபி இப்ராஹீம் (அலை) பிறந்ததும், நெருப்புக்குண்டத்தில் இருந்து அவர் தப்பித்ததும், ஈசா நபி பிறந்ததும், அவரை சொர்க்கத்திற்கு உயர்த்தியதும், முதன் முதலாக உலகிற்கு மழை பொழிந்ததும் இந்த நாளில் தான். (ஆதாரம்: நூல் முகாஷஃபதுல் குலூப் இமாம் கஜ்ஜாலி)

இத்தனை சிறப்பு மிக்க இந்த நாட்களில் நாம் நோன்பு நோற்று இறைவனை வணங்கி முகரம் மாதத்தை மகிமைப்படுத்துவோம். நமது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு இறைவனின் அருள்பெறுவோம். ஆமீன்.

வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
Tags:    

Similar News