ஆன்மிகம்
ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா கொடி இறக்கம்

ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா கொடி இறக்கம்

Published On 2021-07-12 05:17 GMT   |   Update On 2021-07-12 05:17 GMT
ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் முன்னிலையில் கொடி இறக்கப்பட்டு இந்த ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக முடிவடைந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சுல்தான் செய்யது இபுராகிம் ஷஹீதின் 847-ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கடந்த ஜூன் மாதம் 22-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 5-ந் தேதி அதிகாலை சந்தனம் பூசும் திருவிழா மிக எளிமையான முறையில் நடைபெற்றது.

அதன் பின்னர் 5-ந்தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து தமிழ்நாடு உள்பட கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான யாத்திரீகர்கள் ஏர்வாடி தர்கா கொடி இறக்கத்தை காண்பதற்கு குவிந்தனர். நேற்று காலை குர்ஆன் ஓதப்பட்டு நேர்ச்சைகள் வழங்கப்பட்டு திருவிழா நிகழ்ச்சி நிறைவு நடைபெற்றது.

மாலை 5.45 மணி அளவில் ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் முன்னிலையில் கொடி இறக்கப்பட்டு இந்த ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக முடிவடைந்தது. முன்னதாக காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார். முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News