ஆன்மிகம்
இஸ்லாம் வழிபாடு

தீயவற்றில் இருந்து விலகி இருப்போம்

Published On 2021-05-07 03:56 GMT   |   Update On 2021-05-07 03:56 GMT
‘நோன்பு (மட்டரகமானவற்றிலிருந்து காக்கும்) ஒரு கேடயம் ஆகும். எனவே ஒரு நோன்பாளி கெட்ட பேச்சுக்களைப் பேச வேண்டாம்; மடத்தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
புனித ரமலானுக்கு ‘ஷஹ்ருத் தம்ஹுஸ்’ - ‘மட்டரகமான காரியங்களில் இருந்து மனிதனை விடுவிக்கும் மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.

முதலில் மட்டரகமான காரியங்கள் என்றால் என்ன? என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

கஞ்சத்தனம், பொறாமை, தற்பெருமை, புறம், கோள், கோழைத்தனம், மடமைத்தனம், பேராசை, கடின உள்ளம், முகஸ்துதி, பொய், திட்டுவது, பழிப்பது, அவதூறு பரப்புவது, மோசடி, பித்தலாட்டம், உறவை முறிப்பது, பெற்றோரை நோவினைப்படுத்துவது, குறைகளைத் துருவி துருவி விசாரிப்பது, குழப்பத்தை ஏற்படுத்துவது, பரிகாசம் செய்வது, நயவஞ்சகத்தன்மை, வெறுப்பை விதைப்பது, நன்றிகெட்டத்தனம், அநீதம் இழைப்பது, மனோ இச்சைக்கு கட்டுப்படுவது, குரோத மனப்பான்மை இன்னும் இதுபோன்ற கீழ்த்தரமான காரியங்கள் அனைத்தும் மட்ட ரகமானவைகள் தாம்.

இவைகளில் இருந்து நோன்பாளியை ரமலான் மாத நோன்பு பாதுகாக்கிறது. இதுகுறித்து நபி (ஸல்) அவர்களின் தெளிவான வழிகாட்டுதலையும், விரிவான விளக்கத்தையும் இனி காண்போம்.

‘நோன்பு ஒரு கேடயம் ஆகும்; அதனை உடைக்காமல் இருக்கும் வரை.... என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவிமடுத்தேன் என ஆபூஉபைதா (ரலி) கூறுகிறார்’. (அறிவிப்பாளர்: இப்னுமாஜா, நூல்: நஸயீ)

‘நோன்பு (மட்டரகமானவற்றிலிருந்து காக்கும்) ஒரு கேடயம் ஆகும். எனவே ஒரு நோன்பாளி கெட்ட பேச்சுக்களைப் பேச வேண்டாம்; மடத்தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

‘உங்களில் யார் திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்தி பெற்றிருக்கிறாரோ, அவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில் திருமணம் (அன்னியப்பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ, அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் (ரலி), நூல்: புகாரி)

போர் வீரர்களின் உயிர்களையும், உடல்களையும் கேடயம் பாதுகாப்பது போன்றே, ரமலான் மாத நோன்பும் நோன்பாளிகளை மட்டரகமான அனைத்து செயல்களிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது.

‘ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே, நோன்பு எதனால் முறிந்துவிடுகிறது என்று கேட்டார்?’. ‘பொய், புறம் பேசுவதினால்’ என நபி (ஸல்) விடையளித்தார்கள்’.

‘யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ, அவர் தமது பானத்தையும், உணவையும் விட்டுவிடுவதில் இறைவனுக்கு எந்தத் தேவையுமில்லை என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

நோன்பு என்பது பசித்திருப்பது, தாகித்திருப்பது மட்டுமே அல்ல. தகாத காரியங்களிலிருந்து தவிர்ந்திருப்பதும், மட்டரகமான காரியங்களிலிருந்து விட்டு விலகியிருப்பதும் தான் உண்மையான நோன்பு.

இதற்கு ஏற்ப இந்த புனிதமான ரமலான் மாதத்தில் மட்டரகமான செயல்களில் இருந்து நாம் விலகி இருப்போம், அதுபோன்ற செயல்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்படி இறைவனிடம் வேண்டுவோம். நற்செயல்கள் செய்து இறையருள் பெறுவோம், ஆமின்.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

இப்தார்: மாலை 6.40 மணி

நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.23 மணி
Tags:    

Similar News