ஆன்மிகம்

மன்னிப்பது வீரச் செயல்

Published On 2018-06-10 04:32 GMT   |   Update On 2018-06-10 04:32 GMT
தவறிழைத்தவர்கள் மன்னிப்புக் கோர வேண்டும். மனம் திருந்தி மன்னிப்பு கோருபவர்களை பாதிக்கப்பட்டவர்கள் மன்னிக்க வேண்டும். இவ்விரண்டும் மனிதனின் உயர்ந்த பண்புகளாகும்.

தவறிழைத்தவர்கள் மன்னிப்புக் கோர வேண்டும். மனம் திருந்தி மன்னிப்பு கோருபவர்களை பாதிக்கப்பட்டவர்கள் மன்னிக்க வேண்டும். இவ்விரண்டும் மனிதனின் உயர்ந்த பண்புகளாகும்.

பலவீனமான ஒருவன் மன்னிப்பது பெரிய விஷயமல்ல. ஆனால் வலிமை மிக்கவர்கள், தண்டிக்கும் அதிகாரம், ஆற்றல் பெற்றவர்கள் மன்னிப்பது மிகவும் உயர்ந்த செயலாகும்.

“(தண்டிக்கும்) சக்தி பெற்ற நிலையிலும் மன்னிப்பவரே இறைவனிடத்தில் கண்ணியத்திற்குரியவர்” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (நூல் : பைஹகி)

அவர் சொன்ன சொல்லுக்கு அவரே முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியவர்.

13 ஆண்டு காலம் மக்காவில் குறைஷிகள் நபிகளாருக்கு, சொல்ல முடியாத தாக்குதல்களையும் அவமானங்களையும், கொடுமைகளையும் இழைத்தார்கள். தமது தாயகமான மக்காவைத் துறந்து மதீனாவில் குடியேறும் நிலையை உருவாக்கினார்கள். 10 ஆண்டுகள் கழித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெற்றி வீரராக 10 ஆயிரம் பேர் கொண்ட படையோடு மக்காவிற்குள் நுழைகிறார்கள்.

குறைஷிகள் அச்சத்துடனும் பீதியுடனும் அவரது வருகையை எதிர்நோக்குகின்றார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் குறைஷிக் கூட்டத்தினரை நோக்கி “நீங்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கின்றீர்கள்” எனக் கேட்டார்.

குறைஷிகள்: “நீங்கள் எங்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்வீர்கள். நீங்கள் எங்களுக்கு சிறந்த சகோதரராய், எங்களில் சிறந்த சகோதரரின் மகனாகவும் இருக்கின்றீர்கள்” என்றார்கள்.

பெருமானார் குறைஷிகளை நோக்கி, “இன்றைய தினம் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. இறைவன் உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவான். அவன் கருணையாளர்களில் எல்லாம் கருணையாளன்” என்ற இறைவசனத்தை ஓதி (12:92) குறைஷிகளை மன்னித்தார்கள்.

மன்னிக்க மன உறுதியும், வீரமும் தேவை. பழிவாங்குவது சாதாரண மனிதர்களின் இயல்பு. மன்னிப்பவர்களே மனிதர்களில் மாணிக்கமாகத் திகழ்கின்றார்கள்.

“யார் பொறுமையை மேற்கொள்ளவும், மன்னித்துவிடவும் செய்கின்றார்களோ அவர்களின் இந்த செயல் உறுதிமிக்க (வீரச்) செயலைச் சார்ந்ததாகும்” என்று கூறுகிறது திருக்குர்ஆன் (42:43).

மன்னிப்பு அளிப்பதால் அவர்களின் மாண்பு உயர்கின்றதே தவிர குறைவதில்லை. ஒருவன் (பிறரை) மன்னிக்கும்போது இறைவன் அவனின் கண்ணியத்தையும், மாண்பையும் அதிகரித்துவிடுகின்றான் என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (முஸ்லிம்: 5047)

தவறு செய்த அனைவரையும் மன்னித்தால் குற்றவாளிகளின் எண்ணிக்கை பெருகிவிடுமே என்ற கேள்வி எழுவது இயற்கை. இதற்கும் பெருமானார் வழிகாட்டுகிறார்கள். தனக்குத் தனிப்பட்ட முறையில் அநீதிகளை இழைத்தோரை மன்னித்தார்கள். அதே வேளையில் அரசுக்கு, பொது மக்களுக்கு எதிராக குற்றங்கள் இழைத்தோரை தண்டிக்கவும் செய்தார்கள். அவ்வாறு செய்யாவிடில் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது.

தவறு செய்பவர்களை தண்டிக்கலாம், மன்னிக்கலாம், தீமை செய்தவர்களுக்கு நன்மையும் செய்யலாம், இம்மூன்றிற்கும் மனித வாழ்வில் இடமுண்டு.
Tags:    

Similar News