ஆன்மிகம்

ஏக இறைவனின் தூதர் எல்லாமும் தெரிந்தவர்

Published On 2018-01-08 07:04 GMT   |   Update On 2018-01-08 07:04 GMT
‘யாருக்குமே தெரியாத விஷயத்தைப் பற்றி இவருக்குத் தெரிகிறது என்றால் நிச்சயமாக இவர் அல்லாஹ்வின் தூதர்தான்’ என்று அறிந்து கொண்டார் அதீ இப்னு ஹாதிம்.
நபி முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்கள் ‘ஹாத்திம்’ குடும்பத்தினரிடம் சண்டையிட்டு நிறையக் கால்நடைகளைக் கைப்பற்றி அவர்களில் பலரைக் கைது செய்தனர். அங்கு, 'தய்ம்' கிளையினரின் தலைவராக இருந்த அதீ இப்னு ஹாதிம் தப்பித்து ஷாம் நாட்டை அதாவது சிரியாவை நோக்கி ஓடிவிட்டார். 

அவருடைய சகோதரி நபி(ஸல்) அவர்களைச் சந்தித்துப் பேசியபோது, நபி(ஸல்) அவர்களின் நற்பண்புகள் அவருக்கு விளங்கியதால், அப்பெண்மணி தனது சகோதரரைச் சந்திக்க நபி(ஸல்) அவர்களிடமே வாகனத்தை ஏற்பாடு செய்து தரும்படி கேட்டார். நபி(ஸல்) அவர்களும் ஏற்பாடு செய்து தந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் பெருந்தன்மையைப் பற்றி, தமது சகோதரர் அதீ இப்னு ஹாதிமுக்கு விளக்கினார். 

அவரும் எந்தப் பாதுகாப்புமின்றித் தனியாகத் துணிவுடன் நபியவர்களைச் சந்திக்க வந்தார். நபி(ஸல்) அவர்களை நபியின் இல்லத்திலேயே வந்து சந்தித்தார். அவருடைய அருகில் அமர்ந்த நபி(ஸல்) அவர்கள் அவர்தான் அதீ என்பதை அறிந்துக் கொண்டார்கள். அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு தமது பேச்சைத் தொடங்கினார்கள். 

“அதீய்யே! நீ இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாமல் ஓடுவதற்குரிய காரணம் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அதீ, “நானும் ஒரு மார்க்கத்தைப் பின்பற்றுபவன்தான்” என்று பதிலளித்தார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “லா இலாஹ் இல்லல்லாஹ் – வழிப்பாட்டிற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று கூறுவதற்குப் பயந்தா நீ ஓடிவிட்டாய்? உனது மார்க்கத்தை உன்னைவிட நான் நன்கறிவேன்” என்று சொல்லிவிட்டு, “நீ ‘ரகூஸி’யாக இருப்பவன் அல்லவா?” என்றார்கள். ரகூஸி என்பது கிறிஸ்தவம் மற்றும் நட்சத்திரங்களை வணங்குபவர்கள். 

‘தம்மைப் பற்றி இவருக்குத் தெரிகிறதே’ என்ற ஆச்சர்யப்பட்டார் அதீ இப்னு ஹாதிம். தொடர்ந்து நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ்வைத் தவிர வேறோர் இறைவன் இருக்கிறான் என்று உன் அறிவுக்கு எட்டுகிறதா?” என்றும், “உமது கூட்டத்தினருக்குச் சொந்தமான கனீமா (போரில் கிடைத்த பொருட்கள்) பொருட்களின் 1/4 பங்கை அனுபவித்து வந்தீர்கள் அல்லவா? உமது இந்தச் செயல் உமது மார்க்கத்தில் ஆகுமானதில்லையே?” என்றும் வினவினார்கள். 

‘யாருக்குமே தெரியாத விஷயத்தைப் பற்றி இவருக்குத் தெரிகிறது என்றால் நிச்சயமாக இவர் அல்லாஹ்வின் தூதர்தான்’ என்று அறிந்து கொண்டார் அதீ இப்னு ஹாதிம்.

தன் முன்பு இருப்பது இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) என்பதை உணர்ந்தவராக அதீ, “நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை. வழிப்பாட்டிற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை” என்று சொல்லி ஓர் இறைக் கொள்கையான இஸ்லாமில் மனமுவந்து இணைந்தார்.

ஆதாரம்: இப்னு ஹிஷாம், முஸ்னது அஹ்மத், அர்ரஹீக் அல்மக்தூம்

- ஜெஸிலா பானு.

Tags:    

Similar News