ஆன்மிகம்

போரில் வெற்றியும் பரிசுப்‌பொருட்கள் பகிர்தலும்

Published On 2017-12-19 13:38 IST   |   Update On 2017-12-19 13:38:00 IST
ஹுனைன் போரில் முஸ்லிம்களுக்கு அபார வெற்றி கிடைத்ததால், - கனீமத்துப் பொருட்கள் - அதாவது போரில் கிடைத்த பொருட்கள் ஏராளமாகக் குவிந்தன.
ஹுனைன் போரில் முஸ்லிம்களுக்கு அபார வெற்றி கிடைத்ததால், - கனீமத்துப் பொருட்கள் - அதாவது போரில் கிடைத்த பொருட்கள் ஏராளமாகக் குவிந்தன. 

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி “போரில் நீங்கள் வீரத்தோடு போர் புரிந்து ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருட்கள் உரியவை” என்று கூறினார்கள். அப்போது அபூ கத்தாத் (ரலி) மூன்று முறை எழுந்து நின்று எனக்காக சாட்சி சொல்ல முன் வாருங்கள் என்று கேட்டுக் கொண்டார். 

நபி(ஸல்) அவர்கள் நடந்தை விளக்குமாறு அபூ கத்தாதாவிடம் கேட்டபோது, இணைவைப்பவன் ஒருவன் ஒரு முஸ்லிமின் மீது ஏறி உட்கார்ந்து கொல்ல முயன்றதையும், அதனை அவர்கள் காத்துத் தடுத்து, தன் உயிரைப் பணயம் வைத்து அவனைக் கொன்று வென்றதையும் விளக்கினார். அவர் உண்மையைத்தான் சொன்னார் என்று மற்றவர் சாட்சி சொன்னார்.

வேறொருவர் எழுந்து நின்று, “இறைத்தூதர் அவர்களே! இவர் உண்மையைத்தான் சொன்னார். இவரால் கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் என்னிடம் உள்ளன. எனக்காக அவருக்கு வேறு ஏதையாவது கொடுத்துத் திருப்திப்படுத்தி விடுங்கள்” என்றார். அப்போது அபூ பக்ர் சித்திக்(ரலி), “இல்லை. அல்லாஹ்வின் சிங்கங்களில் ஒரு சிங்கம் அல்லாஹ்வின் சார்பாகவும் போரிட்டு, தன்னால் கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து எடுத்த பொருளை உனக்குக் கொடுக்க இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்” என்று நபி(ஸல்) அவர்களின் மனதறிந்து கூறினார்கள். 

உடனே நபி(ஸல்) அவர்கள், 'அபூ பக்ர் சொல்வது சரி' என்று கூறினார்கள். கனீமத்துப் பொருட்கள் பிரிப்பதிலும் நபி(ஸல்) அவர்கள் நேர்மையையும் நியாயத்தையும் கடைப்பிடித்தார்கள்.

அபூ கத்தாதா(ரலி) அவர்களுக்குரிய பொருள் வந்து சேர்ந்தது. அந்தப் போர்க் கவசத்தை விற்றுவிட்டு பனூ ஸலமா குலத்தார் வாழும் பகுதியில் ஒரு பேரீச்சந் தோட்டத்தை வாங்கியதாகவும், அதுதான் தாம் இஸ்லாத்தைத் தழுவிய பிறகு சேகரித்த முதல் சொத்தென்றும் அபூ கத்தாதா(ரலி) அவர்கள் வேறொரு குறிப்பில் சாட்சியம் அளித்துள்ளார்கள்.

ஸஹீஹ் புகாரி 3:57:3142

- ஜெஸிலா பானு.

Similar News