ஆன்மிகம்

புனித கஅபாவில் போருக்குத் தடை விதித்த பெருமானார்

Published On 2017-11-15 07:36 GMT   |   Update On 2017-11-15 07:36 GMT
நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹானியிடம், “நீங்கள் பாதுகாப்புத் தந்தவர்களுக்கு நாமும் பாதுகாப்பை வழங்குகிறோம்” என்று கூறிவிட்டார்கள்.
நபி முஹம்மது(ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட பின் கஅபாவின் சாவியை உஸ்மானிடம் ஒப்படைத்தார்கள். தொழுகை நேரம் வந்ததும் பிலால்(ரலி) அவர்களை, 'பாங்கு' அதாவது தொழுகைக்கான அழைப்பு விடுக்கும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். மக்காவின் வெற்றிக்கு இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் நபி(ஸல்) ‘நன்றி தொழுகை’ நடத்தினார்கள்.

நபி(ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூதாலிபின் மகள் உம்மு ஹானி வீட்டிற்குச் சென்றபோது, உம்மு ஹானி அவர்கள், தனது கணவன் மற்றும் இரண்டு சகோதர்களுக்காக நபி(ஸல்) அவர்களிடம் பாதுகாப்பு கேட்டார். அலீ(ரலி) அவர்களைக் கொல்ல விரும்பினார். ஆனால் நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹானியிடம், “நீங்கள் பாதுகாப்புத் தந்தவர்களுக்கு நாமும் பாதுகாப்பை வழங்குகிறோம்” என்று கூறிவிட்டார்கள்.

இப்படிச் சிலரை மன்னித்து விடுவித்தும், சிலரைச் சிறைப்பிடித்தும் வந்தனர். ஸஃப்வான் இப்னு உமய்யா என்பவர் குறைஷிகளின் பெருந்தலைவர்களில் ஒருவர். அவர் கைது செய்யப்படுவார் என்று பயந்து மக்காவைவிட்டு ஓட ஆயுத்தமாகும்போது அவருக்காக உமைர் இப்னு வஹப் என்பவர் நபி(ஸல்) அவர்களிடம் ஸஃப்வானின் பாதுகாப்புக் குறித்துப் பேசினார். நபி(ஸல்) அவர்களைச் சந்தித்த ஸஃப்வான் தான் இஸ்லாமை அறிந்து கொண்டு ஏற்க, தனக்கு இரண்டு மாத கால அவகாசம் வேண்டுமெனக் கோரினார். அதற்கு நபி (ஸல்) நான்கு மாத கால அவகாசம் தருவதாக மொழிந்தார்கள். சில நாட்களிலேயே ஸஃப்வான் இஸ்லாமைத் தழுவினார்.

குறைஷிகளின் மற்றொரு தலைவரான ஃபழாலா இப்னு உமைய்யா என்பவர் நபி (ஸல்) அவர்களைக் கொல்வதற்காக நபியவர்களின் அருகில் சென்றார். ஃபழாலா தம்மைக் கொலை செய்யும் எண்ணத்தில்தான் வந்துள்ளார் என்பதை நபி(ஸல்) அவர்கள் ஃபழாலாவிடமே வெளிப்படையாகக் கேட்டவுடன், ஃபழாலா, நபி(ஸல்) உண்மையான திருத்தூதர்தான் எனப் புரிந்து கொண்டு, இஸ்லாமை ஏற்றார்.

மக்காவின் வெற்றிக்கு மறுநாள் நபி(ஸல்) அவர்கள் மக்களிடையே உரையாற்றினார்கள். அவ்வுரையில் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, “இந்த மக்கா நகரை மனிதர்களில் யாரும் புனிதமாக்கவில்லை. அல்லாஹ்தான் இதனைப் புனித நகரமாக்கினான். எனவே, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியிருக்கும் யாரும் இங்கு கொலை புரிவதோ, இரத்தம் சிந்துவதோ, மரம், செடி, கொடிகளை வெட்டுவதோ கூடாது.

இறைத்தூதர் இங்கு ஒரு சிறு போரிட்டதை ஆதாரமாகக் கொண்டு எவராவது அவ்வாறு இங்கே போரிடுவது அனுமதிக்கப்பட்டது என்று கருதினால், நீங்கள் அவருக்குச் சொல்லுங்கள், நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு மட்டுமே அனுமதியளித்தான்; உங்களுக்கு அவன் அனுமதிக்கவில்லை என்று அவரிடம் கூறுங்கள். எனக்குக் கூட அவன் அனுமதியளித்தது பகல் பொழுதின் சிறிது நேரத்திற்கு மட்டும் தான். பின்னர் இன்று அதன் புனிதம் நேற்றுள்ள அதன் புனிதம் போல் வந்துவிட்டது. இச்செய்தியை இங்கே வராதிருப்பவர்களுக்கு வந்திருப்பவர்கள் தெரிவித்து விடட்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

ஸஹீஹ் புகாரி 1:3:104, அர்ரஹீக் அல்மக்தூம்

- ஜெஸிலா பானு.
Tags:    

Similar News