ஆன்மிகம்

இடர்பாடுகளைக் கடந்து உம்ராவை வெற்றிகரமாக நிறைவேற்றிய நபிகள் நாயகம்

Published On 2017-10-11 09:12 GMT   |   Update On 2017-10-11 09:12 GMT
உம்ரா பயணிகள் பாதுகாப்புக்காக வைத்திருக்கும் உறையிலிடப்பட்ட வாட்களை மட்டும் எடுத்துக் கொண்டு மக்காவிற்குப் புறப்பட்டனர்.
நபித் தோழர்கள் பல படைப் பிரிவுகளாகப் பிரிந்து பல இடங்களுக்குச் சென்றிருந்தவர்களெல்லாம் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை முடித்துவிட்டு மதீனா திரும்பினர். நபி(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவில் கலந்து கொண்ட அனைவரும் உம்ராவிற்குச் செல்ல தயாராகும்படி கட்டளையிட்டார்கள்.

நபி(ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க மிக ஆர்வமாக மக்கள் உம்ரா செய்யப் புறப்பட்டனர். தங்களுடன் குர்பானிக்காக ஒட்டகங்களையும் ஓட்டிச் சென்றனர். குறைஷிகள் ஒப்பந்தத்தை மீறலாம் அல்லது ஏதேனும் மோசடி செய்யலாம் அதனால் போர் வீரர்களுடன் ஆயுதங்களையும் தயாராக எடுத்துச் சென்றனர். ஆனால் மக்காவில் நுழைவதற்கு முன்பே ஆயுதங்களை ஓர் இடத்தில் வைத்து அதற்குக் காவலாளிகளை நியமித்துவிட்டு, உம்ரா பயணிகள் பாதுகாப்புக்காக வைத்திருக்கும் உறையிலிடப்பட்ட வாட்களை மட்டும் எடுத்துக் கொண்டு மக்காவிற்குப் புறப்பட்டனர்.

இறைவனைப் புகழ்ந்தவார்களாகத் தல்பியாவை முழங்கிக் கொண்டு முஸ்லிம்கள் மக்காவிற்குள் நுழைந்தார்கள். இணைவைப்பாளர்கள் மலையின் மீது ஏறி நின்று முஸ்லிம்களை வேடிக்கைப் பார்த்தவர்களாக ‘மதீனாவில் தோன்றிய காய்ச்சலால் பலவீனப்பட்ட நிலையில் ஒரு குழு நம்மிடம் வந்துள்ளது’ என்று கிண்டலாகப் பேசிக் கொண்டனர்.

அப்போது பலவீனப்படவில்லை எனக் காட்டுவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களது தோழர்களிடம் ‘வலது தோள்பட்டை வெளியில் தெரியும்படி இஹ்ராமுடைய ஆடையை அணிந்து, கஅபாவை வலம்வருகையில் மூன்று சுற்றுகள் தோள்களைக் குலுக்கியவாறு ஓடுங்கள், நம் பலத்தை இணை வைப்போர் பார்க்கட்டும்’ என்று கூறினார்கள். அதன்படி முஸ்லிம்களும் முதல் மூன்று சுற்றுகள் ஓடியும், மற்ற நான்கு சுற்றுகள் சாதாரணமாக நடந்தும் சுற்றினர். இதைப் பார்த்து இணைவைப்பாளர்கள் ஆச்சர்யப்பட்டனர் “இவர்கள் வீரமுள்ளவர்களாகவே இருக்கின்றனர், பலவீனப்படவில்லை” என்றும் கிசுகிசுத்துக் கொண்டனர்.

நபி(ஸல்) மற்றும் தோழர்கள் தவாஃபை அதாவது கஅபாவை வலம் வந்த பிறகு ‘ஸஃபா, மர்வா’ என்ற இரு மலைகளுக்கு மத்தியில் ‘ஸயீ’ செய்தனர். ஹாஜர்(அலை) தண்ணீருக்காக இந்த இரு மலைகளுக்கு இடையே ஓடியதை நினைவு கூறும் வகையில் இங்கு ‘ஸயீ’ செய்தனர். அதன்பின் அந்த இடத்தில் குர்பானிக்குக் கொண்டு வந்திருந்த பிராணியை அறுத்தனர். அதற்குப் பின் நபி(ஸல்) தங்களது தலைமுடியை சிரைத்து மொட்டை அடித்துக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி முஸ்லிம்களும் அவ்வாறே செய்தனர்.

ஆயுதங்களைப் பாதுகாப்பதில் ஈடுபட்டிருந்தவர்களை நபிகளாரின் கட்டளைக்கேற்ப உம்ரா செய்ய அனுப்புவதற்காக, உம்ரா நிறைவேற்றியவர்கள் மக்காவிற்கு வெளியில் சென்று பாதுகாவலர்களை உம்ராவை நிறைவேற்ற அனுப்பி வைத்தனர்.

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள். குறைஷிகள் நான்காவது நாள் காலையில் அலீயிடம் வந்து, “தவணை முடிந்துவிட்டது. உமது தோழரை வெளியேறும்படி சொல்” என்று கூறினர். நபியவர்கள் மக்காவிலிருந்து வெளியேறினார்கள்.

ஸஹீஹ் புகாரி 4:64:4256, 2:25:1602

- ஜெஸிலா பானு.
Tags:    

Similar News