ஆன்மிகம்

போரில் வென்ற செல்வங்களைப் பகிர்வதில் நேர்மை

Published On 2017-10-03 04:43 GMT   |   Update On 2017-10-03 04:44 GMT
கைபர் போரில் பொன்னையோ வெள்ளியையோ போர்ச் செல்வமாகப் பெறாதவர்கள் கால்நடைச் செல்வங்கள், ஆடைகள், உபயோகப் பொருடகள் ஆகியவற்றையே பெற்றிருந்தனர்.
கைபர் வெற்றி கொண்டபின் நபி(ஸல்) அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு ‘வாதில் குரா’ எனும் இடத்திற்குச் சென்றார்கள். அங்கு, தமது அடிமைகளில் ஒருவரான ‘மித்அம்’ என்பவரை எங்கிருந்தோ வந்த அம்பு தாக்கிக் கொன்றது. இதைக் கண்ட மக்கள் அவருக்குச் சொர்க்கம் கிடைத்துவிட்டதாகப் பேசி வாழ்த்தினர். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இல்லை, இவர் போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும் முன்பே அதிலிருந்து ஒரு போர்வையை எடுத்துக் கொண்டிருக்கிறார். இப்போது அந்தப் போர்வை அவரின் மீது நரக நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது’ என்றார்கள்.

இதைக் கேட்ட மக்கள் பீதியடைந்தனர். கைபர் போரில் பொன்னையோ வெள்ளியையோ போர்ச் செல்வமாகப் பெறாதவர்கள் கால்நடைச் செல்வங்கள், ஆடைகள், உபயோகப் பொருடகள் ஆகியவற்றையே பெற்றிருந்தனர். சிறிய பொருள்தானே என்று அலட்சியமாக எடுக்கப்பட்ட பொருட்களையெல்லாம் நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையைக் கேட்டதும் மக்கள் கொண்டு வந்து கொட்டினர்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் ஒரு செருப்பு வாரைக் கொண்டு வந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால் இது சாதாரணச் செருப்பு வாராக இருந்திராது. மாறாக, நெருப்பு வாராக மாறியிருக்கும்' என்று கூறினார்கள்.

வாதில் குரா என்ற இடத்தில் உள்ள மக்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்துக் கூறி அல்லாஹ்வின் பக்கம் அழைத்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அதனால் யூதர்களும் ஆயுதங்களைப் போட்டுவிட்டுச் சரணடைந்தார்கள். நிலங்களையும் பேரீத்தம் தோட்டங்களையும் யூதர்களிடமே கொடுத்து கைபர் யூதர்களிடம் செய்து கொண்டதைப் போன்று ஒப்பந்தம் செய்து கொண்டார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அதாவது நிலங்களில் பயிரிட்டு உழைத்துக் கொள்ளலாம். விளைச்சலில் பாதி உழைப்புக்குரியவர்களும் மீதி அரசுக்கு நிலவரியாகச் செலுத்தப்பட வேண்டுமென்றும் ஒப்பந்தமானது.

ஒப்பந்தத்திற்குப் பின் நபி(ஸல்) மதீனாவிற்குத் திரும்பும்போது ஒரு பள்ளத்தாக்கில் உள்ள மேடான பகுதியில் ஏறும்போது, 'லா இலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' என்றும் 'அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்' என்றும் மக்கள் குரலை உயர்த்திக் கூறினர்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள். ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கிறான். அவன் செவியேற்பவன்; அருகிலிருப்பவன் இறைவனான அவனுடைய திருப்பெயர் நிறைவானது. அவனுடைய மதிப்பு உயர்ந்தது” என்று கூறினார்கள்.

மக்களும் நபி(ஸல்) அவர்களின் அறிவுரையின்படி தங்களது குரலைத் தாழ்த்தி கொண்டனர்.

ஸஹீஹ் புகாரி 7:83:6707, 3:56:2992

- ஜெஸிலா பானு.
Tags:    

Similar News