ஆன்மிகம்

ஆயிஷா(ரலி) அவர்களின் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்திய இறைவசனங்கள்

Published On 2017-08-05 07:04 GMT   |   Update On 2017-08-05 07:04 GMT
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மீது திருக்குர்ஆன் வசனங்கள் அருளப்படத் தொடங்கிவிட்டன. உடனே வேத வெளிப்பாடு வருகிற நேரங்களில் ஏற்படும் கடுமையான சிரம நிலை நபிகளாருக்கு ஏற்பட்டது;
ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றிய அவதூறு காரணமாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் மனைவியைப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை நடத்தினார்கள். அலீ இப்னு அபீ தாலிப் அவர்களையும், உஸாமா இப்னு ஸைத் அவர்களையும் அழைத்தார்கள்.

உஸாமா(ரலி) அவர்களிடம் கேட்டபோது நபிகளாரின் குடும்பத்தார் மீது தாம் கொண்ட பாசத்தை வைத்து, “இறைத்தூதர் அவர்களே! தங்களின் துணைவியரிடம் நல்ல குணத்தைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை' என்று உஸாமா கூறினார்கள். அலீ(ரலி) அவர்களோ, நபி(ஸல்) அவர்களின் மனவேதனையைக் குறைக்கும் விதமாக, “இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. ஆயிஷா அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர்” என்று சொல்லியதோடு,“பணிப்பெண் பரீராவைக் கேளுங்கள்” என்று ஆலோசனை வழங்கினார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பணிப்பெண் பரீராவை அழைத்துக் கேட்டபோது, “இறைவன் மீதாணையாக! அவர் குழைத்த மாவை அப்படியே போட்டுவிட்டு உறங்கிப் போய் விடுவார்; வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்று விடும்; அத்தகைய கவனக்குறைவான இளவயது பெண் என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக் கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை” என்று பதில் கூறினார்.

தனது ஈரல் பிளந்துவிடும் அளவுக்கு அழுது கொண்டிருந்த ஆயிஷா(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். ஆயிஷாவிடம் நபிகளார், “உன்னைக் குறித்து எனக்குச் சில செய்திகள் வந்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டுவிடு. பாவத்தை ஒப்புக் கொண்டு மனம் திருந்தி பாவமன்னிப்புக் கோரினால், அல்லாஹ் மன்னித்துவிடுவான்” என்று கூறினார்கள்.

அதற்கு ஆயிஷா, “நான் குற்றமற்றவள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும். எனக்கும் உங்களுக்கும், யூசுஃப்(அலை) அவர்களின் தந்தை நபி யாகூப்(அலை) அவர்களையே உவமையாகக் கருதுகிறேன். அதாவது இதைச் சகித்துக் கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்புக் கோர வேண்டும்” என்று கண்ணீர் மல்க மிகத் திடமாக திருக்குர்ஆனின் 12-ஆம் அத்தியாயத்தின் 18-வது இறைவசனத்தை நினைவுபடுத்தினார்.

அதற்குள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மீது திருக்குர்ஆன் வசனங்கள் அருளப்படத் தொடங்கிவிட்டன. உடனே வேத வெளிப்பாடு வருகிற நேரங்களில் ஏற்படும் கடுமையான சிரம நிலை நபிகளாருக்கு ஏற்பட்டது; அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து சின்னஞ்சிறு முத்துகளைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின.

அந்த நிலை அல்லாஹ்வின் தூதரைவிட்டு விலகியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே பேசிய முதல் வார்த்தையாக, 'ஆயிஷா! அல்லாஹ் உன்னைக் குற்றமற்றவள் என அறிவித்துவிட்டான்' என்று கூறினார்கள். உடனே ஆயிஷா(ரலி) அவர்களின் தாயார் ஆயிஷாவை அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்லச் சொன்னார்கள். அதற்கு ஆயிஷா(ரலி), 'மாட்டேன்; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் செல்ல மாட்டேன். அல்லாஹ்வை மட்டுமே புகழ்ந்து, அவனுக்கே நன்றி செலுத்துவேன்' என்றார்கள்.

ஆயிஷா(ரலி) அவர்களின் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் பத்து வசனங்களை அருளியிருந்தான் 24:11-20.

அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், அன்புடையோனாகவும் இருக்கின்றான்.

ஸஹீஹ் புகாரி 3:52:2661, 4:64:4141, 65:4750

- ஜெஸிலா பானு.
Tags:    

Similar News