ஆன்மிகம்
ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம்.

ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2017-08-04 02:38 GMT   |   Update On 2017-08-04 02:38 GMT
புகழ்வாய்ந்த ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடிஏற்றம் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் அடக்கமாகி உள்ள மகான் குத்புசுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லாவின் 843-வது வருட உரூஸ் என்ற சந்தனக்கூடு திருவிழா வருகிற 15-ந் தேதி மாலை தொடங்கி 16-ந் தேதி அதிகாலை நடைபெறுகிறது. இதன் தொடக்கமாக கடந்த 24-ந் தேதி புனித மவுலீது ஓதும் நிகழ்ச்சி தொடங்கி தினமும் மாலை தர்காவில் மகானின் புகழ் பாடப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி கொடிஏற்றத்திற்காக தர்காவின் முன்புறம் அடிமரம் ஏற்றப்பட்டது. சந்தனக்கூடு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடிஏற்றம் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக, ஏர்வாடியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்துடன் அனைத்து சமுதாய மக்கள் ஊர்வலமாக வந்தனர். அலங்கரிக்கப்பட்ட யானையில் இளம்பச்சை வண்ண நிறத்திலான கொடி எடுத்து வரப்பட்டது.

ஊர்வலத்தில் குதிரைகள் முன்னால் அணிவகுத்து சென்றன. வாண வேடிக்கைகள், தாரைதப்பட்டைகள் முழங்க கொடி ஊர்வலம் தர்காவை வந்தடைந்தது. இந்த ஊர்வலம் தர்காவை 3 முறை வலம்வந்தபின் உலக அமைதிக்காக ராமநாதபுரம் மாவட்ட அரசு ஹாஜி சலாகுதீன் ஆலிம் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

இதனை தொடர்ந்து தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்காக கோர்ட்டு மூலம் நியமிக்கப்பட்டுள்ள ஆணையாளர் தேவதாஸ், ஆணைய உதவியாளர் தமிழரசு ஆகியோர் மேற்பார்வையில், தர்கா ஹக்தார்கள் முன்னிலையில் கொடிஏற்றப்பட்டது.
Tags:    

Similar News