ஆன்மிகம்

நயவஞ்சகர்களின் வதந்திகளும் ஆயிஷா(ரலி) அவர்களின் கண்ணீரும்

Published On 2017-08-03 02:21 GMT   |   Update On 2017-08-03 02:21 GMT
அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப்படாமலேயே இருந்து வந்தது. தான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான், அதை அறிவிப்பான் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்கள் ஆயிஷா(ரலி).
முஹம்மது நபி (ஸல்) மற்றும் படையினர் மதீனா திரும்பிய பிறகும் ஆயிஷா(ரலி) அவர்களைப் பற்றிய அவதூறு அடங்கியபாடில்லை. தீயவன் அப்துல்லாஹ் இப்னு உபை கதைகள் புனைந்தபடி இருந்தான்.

ஆனால் வதந்திகளைப் பற்றிய செய்தி எதுவுமே ஆயிஷா(ரலி) அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஒரு மாத காலம் நோயுற்று இருந்தார். ஆயிஷா(ரலி) அவர்களிடம் நபிகளார் வழக்கமாகக் காட்டுகிற பரிவைக் காட்டத் தவறியிருந்தார்கள். அதனை நன்கு உணர்ந்திருந்த போதும்,  ஆயிஷா(ரலி) அவர்களுக்கு அதற்கான காரணம் மட்டும் விளங்கவில்லை. முஹம்மது நபி(ஸல்) ஆயிஷா அவர்களிடம் செல்வார்கள், சலாம் சொல்வார்கள், நலம் விசாரிப்பார்கள், பிறகு போய்விடுவார்கள்.

அந்தக் காலகட்டத்தில் வீடுகளுக்கு அருகில் கழிப்பிடங்களை அமைத்துக் கொள்ள மாட்டார்கள். அப்படி அமைப்பதை தொந்தரவாகக் கருதி வந்தனர். அதனால் இதற்காகவென்று இரவு நேரங்களில் ‘மனாஸிஉ’ எனப்படும் புறநகர்ப் பகுதிக்குச் செல்வார்கள். நோயிலிருந்து குணமடைந்து ஆயிஷா(ரலி), கழிப்பிடமிருக்கும் புறநகர்ப் பகுதிக்கு மிஸ்தஹின் தாயாரின் துணையுடன் சென்றார்கள்.

ஆயிஷா(ரலி) அவர்களின் தந்தை அபூ பக்ர்(ரலி) அவர்களின் தாயின் சகோதரியின் மகள்தான் மிஸ்தஹின் தாயார். அவருடன் உரையாடிக் கொண்டே செல்லும்போது அவர் ‘மிஸ்தஹ் நாசமாகட்டும்’ என்று தன் மகனையே சபித்தார். உடனே ஆயிஷா(ரலி) மறுத்து “மிக மோசமான சொல்லை சொல்லி ஏசுகிறீர்கள்” என்றார்.

அதற்கு மிஸ்தஹின் தாயார் “மக்கள் பேசும் அவதூறுகளை நீங்கள் கேள்விப்படவில்லையா? என் மகன் என்ன கூறினார் என்று தெரியாதா?” என்று வினவினார். அதன்பிறகு அவரே அத்தனை அபாண்டத்தையும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் எடுத்துரைத்தார். அதைக் கேட்டு கதிகலங்கிய ஆயிஷா(ரலி) அவர்களின் உடல்நிலை இன்னும் மோசமானது. தமது தாய் தந்தையரிடம் செல்ல அனுமதி கேட்டார்கள் ஆயிஷா(ரலி). நபிகளார் அனுமதி தரவே, தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்ற ஆயிஷா(ரலி) நேராகத் தன் தாயாரிடம் சென்று “அம்மா! மக்கள் என்னைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அவருடைய தாயார் தன் மகளைச் சமாதானப்படுத்தும் விதமாக “அன்பு மகளே! இதையெல்லாம் பெரிதுபடுத்தாதே, சக்களத்திகள் பலரும் இருக்க, உன் கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகொளிரும் பெண்ணொருத்தியைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக வதந்திகள் பேசத்தான் செய்வார்கள். அவ்வாறு பேசமாலிருந்தால்தான் வியப்பு” என்று கூறி மழுப்பினார்கள். இருப்பினும் ஆயிஷா(ரலி) அவர்களுடைய மனம் ஒப்பவில்லை. மக்கள் தன்னைப் பற்றித் தவறாகப் பேசுவதை எண்ணி அழுதார்கள், கண்ணீர் வடித்தார்கள். இரவு முழுக்க உறங்காமல் அழுதார்கள்.

அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப்படாமலேயே இருந்து வந்தது. தான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான், அதை அறிவிப்பான் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்கள் ஆயிஷா(ரலி).

(தொடரும்).

ஸஹீஹ் புகாரி 3:52:2661, 4:64:4141                        

- ஜெஸிலா பானு.
Tags:    

Similar News