ஆன்மிகம்

ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது: 3-ந்தேதி கொடியேற்றம்

Published On 2017-07-26 02:50 GMT   |   Update On 2017-07-26 02:50 GMT
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ‌ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்காவில் 843-வது ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ‌ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்காவில் 843-வது ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது.

ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ‌ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்காவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

நேற்று தொடக்க நிகழ்ச்சியாக தர்கா மண்டபத்தில் மவுலீது (புகழ்மாலை) ஓதப்பட்டு விழா தொடங்கியது. பின்னர் உலக மக்களின் நல்லிணக்கத்திற்காகவும், அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சந்தனக்கூடு திருவிழா தொடங்கி 30 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

வருகிற 2-ந் தேதி மாலை 5 மணியளவில் தர்கா வளாகத்தில் அடிமரம் ஏற்றப்பட்டு, 3-ந்தேதி மாலை 3 மணியளவில் ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுராகிம் லெப்வை மாகாலில் இருந்து கொடி ஊர்வலம் புறப்படும். முக்கிய வீதிகளின் வழியாக தர்கா வந்தடைந்து மாலை 6 மணியளவில் பக்தர்களின் நாரே தக்பீர் முழக்கத்துடன் கொடி ஏற்றப்படும்.

ஆகஸ்டு 15-ந்தேதி சந்தனக்கூடு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தர்காவை மூன்று முறை வலம் வந்த பின் சந்தனக் கூடு தர்கா எதிரில் இறக்கி வைக்கப்படும். இதை தொடர்ந்து மகானின் மக்பிராவில் (சமாதியில்) சந்தனம் பூசப்படும். ஆகஸ்டு 23-ந்தேதி மாலை 6.30 மணியளவில் கொடி இறக்கப்பட்டு ஆயிரக்கணக் கானவர்களுக்கு நெய்சோறு நேர்ச்சையாக வழங்கப்பட்டு விழா நிறைவுபெறும்.
Tags:    

Similar News