ஆன்மிகம்

மனம் திருந்தி மார்க்கத்துக்குள் வந்த பெருமானாரின் மருமகன்

Published On 2017-06-20 08:55 GMT   |   Update On 2017-06-20 08:55 GMT
நபி (ஸல்) அவர்கள் மூன்று வருடம் கழித்துத் திரும்பி வந்த தமது மருமகன் அபுல் ஆஸிற்குத் தனது மகள் ஸைனபை முதல் திருமண ஒப்பந்தத்தைக் கொண்டே சேர்த்து வைத்தார்கள்.
அகழ்ப் போரின்போது ஸஅத் இப்னு முஆத்(ரலி) கை நரம்பில் தாக்கப்பட்டார். அவரை அருகிலிருந்து நோய் விசாரிப்பதற்கு ஏற்ப பள்ளிலேயே அவருக்குக் கூடாரம் ஒன்றை நபி(ஸல்) ஏற்படுத்தினார்கள். சில நாட்களில் ஸஅதின் காயம் வீங்கி உடைந்து, அதற்கு அருகில் கூடாரம் அமைந்திருந்த பனூ கிஃபார் குலத்தினரின் கூடாரம் வரை ஸஅதின் இரத்தம் பாய்ந்து அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

'கூடார வாசிகளே! உங்கள் தரப்பிலிருந்து எங்களை நோக்கிப் பாய்கின்றதென்ன?' என்று கேட்டுக் கொண்டு அங்கே பார்த்தபோது காயத்திலிருந்து இரத்தம் வடிய ஸஅத் (ரலி) இருந்தார்கள். அந்தக் காயத்தினாலேயே மரணமும் அடைந்தார்கள். ஸஅது இப்னு முஆத் (ரழி) அவர்களின் மரணத்தினால் அல்லாஹ்வின் சிம்மாசனமே குலுங்கியது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அகழ் மற்றும் குறைழா போர்களுக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் பல குழுக்களையும் படைப்பிரிவுகளையும் ஒன்றன்பின் ஒன்றாக எதிரிகளிடமிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்க அனுப்பினார்கள்.

பத்ருப் போரில் நபி (ஸல்) அவர்களுடைய மகள் ஸைனபின் கணவர் அபுல் ஆஸும் கைதியாக இருந்தபோது, கணவரை மீட்க ஸைனப் தனது தாயின் அதாவது கதீஜா (ரலி) அவர்களின் மாலையை ஈட்டுத்தொகையாக அனுப்பியதைக் கண்ட நபிகளார், தங்களது தோழர்களிடம் அபுல் ஆஸை ஈட்டுத் தொகையின்றி விடுதலை செய்ய அனுமதி கேட்டார்கள்.



தோழர்கள் அனுமதிக்கவே, மகள் ஸைனப்பை மதீனாவிற்கு அனுப்பிவிட வேண்டுமென்ற நிபந்தனையோடு அபுல் ஆஸ் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இஸ்லாம் பற்றிய புரிதல் இருந்ததால் ஸைனப் இஸ்லாத்தை ஏற்றார் ஆனால் இஸ்லாம் பற்றிப் புரிந்தும் மக்கள் தன் மனைவியின் சொல்லுக்காகத் தன் மூதாதையரின் மதத்தைத் துறந்தார் என்ற அவப்பெயர் வந்துவிடுமென்று அஞ்சி அபுல் ஆஸ் இஸ்லாத்தை ஏற்க மறுத்தார். நிபந்தனைக்குட்பட்டு ஸைனப்பை மதீனாவிற்கு அனுப்பி வைத்தார்.

அதனால் பல வருடங்களாக ஸைனபும் அவரது கணவர் அபுல் ஆஸும் பிரிந்தே இருந்தனர். அகழ் மற்றும் குறைழா போர்களுக்குப் பின் பல காலம் சென்று அபுல் ஆஸ் குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தோடு மீண்டும் பிடிபட்டார். முஸ்லிம்கள் அனைத்தையும் அவர்களிடமிருந்து கைப்பற்றினர். ஆனால், அபுல் ஆஸ் அங்கிருந்து தப்பி மதீனாவில் நபியவர்களின் மகளார் ஸைனபிடம் அடைக்கலம் தேடிச் சென்றார். அவரது பொருட்களைத் திருப்பித் தருமாறும் கேட்டுக் கொண்டார். நபிகளாரின் எந்த நிர்பந்தமுமில்லாமல் நிலையைப் புரிந்து கொண்ட மக்கள் அப்பொருட்களை நபிகளாரின் மகளுக்காக விடுவித்து அபுல் ஆஸையும் விடுவித்தனர்.

அபுல் ஆஸ் அப்பொருட்களை எடுத்துக் கொண்டு மக்கா சென்று அப்பொருட்களுக்குரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, இஸ்லாமை ஏற்று மதீனா திரும்பினார். நபி (ஸல்) அவர்கள் மூன்று வருடம் கழித்துத் திரும்பி வந்த தமது மருமகன் அபுல் ஆஸிற்குத் தனது மகள் ஸைனபை முதல் திருமண ஒப்பந்தத்தைக் கொண்டே சேர்த்து வைத்தார்கள்.

ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 1:7:463, 4:63:3804, அர்ரஹீக் அல்மக்தூம்

-ஜெஸிலா பானு.
Tags:    

Similar News