ஆன்மிகம்

அறப்போர் செய்யத் தயாரான நபித்தோழர்கள்

Published On 2017-05-31 04:29 GMT   |   Update On 2017-05-31 04:29 GMT
நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மதிநுட்பத்தால் முஸ்லிம்கள் பாதுகாப்போடு இருந்ததோடு நிலைமையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வளர்ச்சியை யூதர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நேரடியாக முஸ்லிம்களை எதிர்க்க முடியாதவர்கள் சூழ்ச்சியாலும் சதித்திட்டத்தாலும் முஸ்லிம்களுக்குப் பலவகையான இடையூறுகளை தந்தனர்.

அழைப்புப் பணிக்காக அனுப்பப்படும் முஸ்லிம் குழுக்களை வஞ்சகமாகக் கொன்று குவித்தனர். இருப்பினும் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மதிநுட்பத்தால் முஸ்லிம்கள் பாதுகாப்போடு இருந்ததோடு நிலைமையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மதீனாவில் இருந்து கொண்டே முஸ்லிம்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய நழீர் குலத்தவர்களை முஸ்லிம்கள் மதீனாவிலிருந்து முற்றிலுமாக நாடு கடத்தினர்.

முஸ்லிம்களுக்கு எதிரான குறைஷிகளும், யூதர்களும் மற்ற குலத்தவர்களும் ஒன்று திரண்டனர். கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் திரண்டனர். இது பற்றிய செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த உடன், ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழுவைக் கூட்டி மதீனாவையும் முஸ்லிம்களையும் எப்படித் தற்காத்துக் கொள்வது என்பதைப் பற்றி நபிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

பெரும்படையாகத் திரண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மிகவும் மதிநுட்ப மிக்கதாகவும், அரபியர்களுக்குத் தெரியாத ஒரு புதிய திட்டமாகவும் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் ஸல்மான் ஃபார்ஸி (ரலி) முன் வைத்த கருத்து ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.



மதீனாவைச் சுற்றி மலைகளும், பேரீச்சை மரத்தோட்டங்களும், விவசாய அறுவடைகளை உலர வைக்கத் தேவையான களங்களும் சூழ்ந்திருந்தன. ஆனால், மதீனாவின் வடக்குப் பகுதி மட்டும் போக்குவரத்திற்குரிய வழியாக இருந்தது. ஆகையால் அப்பெரும் படை வருவதற்கு வடக்குப் பகுதி மட்டுமே வழியாக அமைய முடியும். அந்த வழியில் அவர்கள் வர இயலாதபடி செய்வதற்கான திட்டத்தையே ஆமோதித்தனர்.

அப்பெரும்படை மதீனாவை வந்தடையாதவாறு அகழை வடக்குப் பகுதியில் தோண்ட வேண்டும். நாற்பது முழம் அகழ் தோண்ட வேண்டும். இத்திட்டத்தை நிறைவேற்ற நபி (ஸல்) அவர்கள் ஆர்வத்தோடு பத்து நபர்கள் கொண்ட குழுக்களை அமைத்தார்கள். ஒவ்வொரு குழுவினரும் நாற்பது முழம் அகழ் தோண்ட வேண்டுமென்று பணித்தார்கள். முஸ்லிம்கள் மிகுந்த உற்சாகத்துடன் அகழ் தோண்டுவதில் ஈடுபட்டார்கள். நபி(ஸல்) முஸ்லிம்களுக்கு ஆர்வமூட்டினார்கள்.

பணி ஆரம்பித்தது. மண்ணைத் தோளில் சுமந்து சென்று வெளியில் போட்டுக் கொண்டே இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “அல்லாஹ்வே! நிச்சயமாக வாழ்க்கை என்பது மறு உலக வாழ்க்கையே! அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் நீ மன்னித்தருள்வாயாக! இறைவா! நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம்" என்று பிரார்த்தித்தபடி பணியைத் தொடங்கினார்கள். அதற்குப் பதில் தரும் வண்ணமாக நபித்தோழர்கள் “நாங்கள் வாழும் காலமெல்லாம் அறப்போர் புரிவோமென்று முஹம்மது (ஸல்) அவர்களிடம் வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தவர்கள்” என்றனர்.

ஸஹீஹ் புகாரி 3:56:2834, 2836

- ஜெஸிலா பானு
Tags:    

Similar News