ஆன்மிகம்

திருக்குர்ஆனில் ரமலான் மாதத்தின் சிறப்பு

Published On 2017-05-26 06:21 GMT   |   Update On 2017-05-26 06:21 GMT
அரபு மாதங்களில் ரமலான் மாதம் ஒன்பதாவது மாதம். ‘ரமலான்’ என்பதற்கு கரித்தல், பொசுக்குதல், சாம்பலாக்குதல் என்று பொருள். திருக்குர்ஆனில் ரமலான் மாதத்தின் சிறப்பு குறித்து இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தமிழ், ஆங்கில மாதங்களைப் போல இஸ்லாமிய மாதங்களும் 12 தான். அரபு மாதங்களில் ரமலான் மாதம் ஒன்பதாவது மாதம். ‘ரமலான்’ என்பதற்கு கரித்தல், பொசுக்குதல், சாம்பலாக்குதல் என்று பொருள். அதாவது நமது குற்றங்குறைகளை, பாவங்களை இந்நோன்பு போக்கி விடுவதால் இதற்கு ரமலான் என்ற பெயர் மிகப்பொருத்தமே.

இந்த மாதத்தில்தான் உலகப்பொது மறையாம் திருக்குர்ஆன் அருளப்பெற்றது. திருக்குர்ஆனில் ரமலான் மாதத்தின் சிறப்பு குறித்து இவ்வாறு கூறப்பட்டுள்ளது:

‘ரமலான் மாதம் எத்தகையதென்றால், அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான திருக்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்தில் இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன்மூலம் நாடுகிறான்)’. (திருக்குர்ஆன் 2:185)

இந்த வசனத்தின் மூலம் ரமலான் நோன்பின் மதிப்பை, அதன் சட்ட திட்டத்தை, திருக்குர்ஆனின் மகத்துவத்தை, நமது நன்றியின் வெளிப்பாட்டை நாம் நன்கு தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

திருக்குர்ஆன் இறங்கிய மாதம் இது என்பதால் இந்த மாதத்தில் நாம் இயன்றவரை குர்ஆன் முழுவதையும் முழுமையாக ஓதி முடிக்க வேண்டும். திருக்குர்ஆன் முப்பது சிறிய பகுதிகளைக் கொண்டது. எனவே, தினமும் நாம் தவறாமல் நாள் ஒன்றுக்கு ஒருபகுதி என்று ஓதினால் கூட ரமலானின் முப்பது நாட்களில் அதன் முப்பது பகுதிகளை மிக இலகுவாக, உறுதியாக ஓதி முடித்து விட முடியும்.

இப்புனித மாதத்தில் நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு குர்ஆனியச் சொற்களுக்கும் ஒன்றுக்கு எழுபது நன்மைகள் வழங்கப்படுகின்றன. அப்படியானால் நாம் திருக்குர்ஆனை ஒரு முறை முழுமையாக ஓதி முடித்தால் அது எழுபது முறை குர்ஆன் ஓதி முடித்ததற்குச் சமம் என்று பொருள்.

இன்னொரு இறைவசனம் நோன்பு நமக்குத் தரும் பயன்கள் குறித்துப்பேசுகிறது இப்படி:



‘ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்களின் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டது. இதன் மூலம் நீங்கள் இறை அச்சமுள்ளவர்களாய் ஆவீர்கள். (திருக்குர்ஆன் 2:183)

நோன்பு கடமையாக்கப்பட்டதற்கு உண்மையான காரணம் என்ன என்பதை இந்த வசனம் மிகஅழகாகத் தெளிவுபடுத்துகிறது. ‘தக்வா’ எனும் இறையச்சத்தை நம் உள்ளத்தில் ஏற்படுத்துகிறது என்பது தான் அது.

நோன்பு நோற்கும் ஒருவன் நிச்சயம் இறையச்சத்தைப் பெற்றுக்கொள்வான் என்பதில் எவ்வித சந்தேகமும் அறவே இல்லை. ஆம்! அல்லாஹ்விற்காக நோன்பு வைக்கும் ஒருவன், தன் வீடு அல்லது வீட்டுக்கு வெளியில் தனித்திருக்கும் போது, அவன் நினைத்தால் எதையும் சாப்பிடலாம். ஆனால் அவன் அப்படிச் செய்வதில்லை. காரணம்- ‘அல்லாஹ் நம்மைப்பார்க்கிறான்’ என்ற ஒரே இறையச்சம் தான்.

இப்படிப்பட்ட இறைபயம் அவனுக்குள் வருவதற்கு மூலகாரணமாக இருப்பது இந்த ரமலான் நோன்பு தானே!

அல்லாஹ்வை அஞ்சி வாழ எதுவெல்லாம் உதவுகிறதோ அதுவெல்லாம் இம்மனித குலத்திற்கு அவசியமான ஒன்றுதான். அதில் இந்த நோன்பு முதலிடம் வகிக்கிறது என்றால் அது மிகையல்ல. இதனால் தான் ‘இறையச்சம் உள்ளவர்களுக்குத் தான் இக்குர்ஆன் நேர்வழிகாட்டும்’ (2:2) என்று இறைமறைக் குர்ஆன் அதன் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறது.

அடுத்து, இரவில் தொழுகை, பகலில் தான, தர்மம், சொல்லில் உண்மை, செயலில் நேர்மை என நம்மை நாமே மாற்றிக்கொள்வதற்கு அருமையானதொரு பயிற்சிக்காலம் தான் இந்த இனிய ரமலான். நோன்பு வெறுமனே பசியும், பட்டினியுமாய் கிடப்பதல்ல.

நம்மைச் சுற்றியுள்ள ஏழை, எளியவர்களின் பசியை உணர்ந்து இதர நாட்களில் அவர்களையும் நாம் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று உணர்வது தான் நோன்பின் அசல் தத்துவம்.

‘எத்தனையோ பேர் நோன்பு நோற்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பசி, பட்டினியைத் தவிர வேறொன்றும் கிடைப்பதில்லை’ என்று நபிகளார் எச்சரித்துக்கூறினார்கள். (புகாரி)

இம்மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள் ‘ரஹ்மத்’ எனும் இறையருள் நிறைந்தநாட்கள். எனவே, இந்நாட்களில் அதிகமதிகம் இறையருளை அல்லாஹ்விடம் கேட்டு நாம் பிரார்த்தனை செய்யவேண்டும். அடுத்த நடுப்பத்து நாட்கள் ‘மஃபிரத்’ எனும் பாவ மன்னிப்பிற்குரிய நாட்கள். எனவே, இந்நாட்களில் அதிகமதிகம் நாம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேட வேண்டும். இறுதி பத்துநாட்கள் ‘இத்க்’ எனும் நரக விடுதலைக்குரிய நாட்கள். எனவே, இந்நாட்களில் நரக வேதனைகளை விட்டும் அதிகமதிகம் நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேட வேண்டும்.

இந்த புனித ரமலானில் இறைவன் வகுத்த வழியில் நோன்பு நோற்று, இறையருளைப்பெற நாம் அனைவரும் முயற்சிசெய்வோம்.

மவுலவி எஸ். என். ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
Tags:    

Similar News