ஆன்மிகம்

மரிக்கும் முன்னரும் இறைநம்பிக்கை காத்த நபித்தோழர்

Published On 2017-05-24 04:49 GMT   |   Update On 2017-05-24 04:50 GMT
அல்லாஹ் நம்பிக்கை கொண்ட தன் அடியானை உயிருடன் இருக்கும் போது பாதுகாத்தது போன்று அவரின் மரணத்திற்குப் பின்னும் பாதுகாக்கிறான்.
உஹுத் போரில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பின்னடைவால் பிரச்சனைகள் அதிகரித்தன அனைத்து திசைகளிலிருந்தும் மதீனாவை ஆபத்துகள் சூழ்ந்தன. வெவ்வேறு பிரச்சனைகளையும் நபி முஹம்மது(ஸல்) மிகச் சிறப்பாகக் கையாண்டு எல்லாவற்றையும் முறியடித்தார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பத்துப் பேர்கள் கொண்ட ஒரு குழுவினரை உளவுப்படையாக அனுப்பி வைத்தார்கள். ஆஸிம் இப்னு ஸாபித் அல் அன்சாரியை உளவுப் படைக்குத் தலைவராக்கினார்கள். அவர்கள் புறப்பட்டு, உஸ்ஃபானுக்கும் மக்காவுக்கும் இடையிலுள்ள 'ஹத்ஆ' என்னுமிடத்திற்கு வந்தபோது வேறொரு கிளையினருக்கு இந்த உளவுப் படையினர் வரும் விவரம் தெரிந்துவிட்டது. உடனே அக்கிளையினர் அவர்களைப் பிடிப்பதற்காக அம்பெய்வதில் தேர்ச்சி பெற்ற வீரர்களைத் திரட்டிக் கொண்டு இந்த உளவுப் படையினரின் சுவடுகளைப் பின்பற்றி, மதீனாவிலிருந்து பயண உணவாகக் கொண்டு வந்திருந்த பேரீச்சம் பழங்களைத் தின்று அவற்றின் கொட்டைகளைப் போட்டுவிட்டுச் சென்ற இடத்தைக் கண்டு, அவர்களின் கால் சுவடுகளைப் பின்பற்றி ஆஸிம்(ரலி) மற்றும் குழுவினரைச் சூழ்ந்தனர்.

அக்கிளையினர், உளவுப் படையினரிடம், 'நீங்கள் இறங்கி வந்து எங்களிடம் சரணடைந்து விடுங்கள். உங்களில் எவரையும் நாங்கள் கொல்லமாட்டோம் என்று உறுதிமொழியும் வாக்கும் அளிக்கிறோம்' என்று கூறினர். அப்போது ஆஸிம் இப்னு ஸாபித் அவர்கள், தம் சகாக்களை நோக்கி, 'என் சமூகத்தாரே! நான் ஓர் இறை மறுப்பாளனின் வாக்குறுதியை நம்பி அவனுடைய பொறுப்பில் இறங்கிச் செல்ல மாட்டேன்' என்று கூறிவிட்டு, 'இறைவா! எங்கள் நிலை பற்றிய செய்தியை உன் தூதருக்குத் தெரிவித்து விடு' என்று பிரார்த்தித்தார்கள். ஆஸிம் நினைத்ததுபோலவே இறைநிராகரிப்பாளர்கள் வாக்குறுதியைக் காப்பாற்றாமல் முஸ்லிம்களின் மீது அம்பெய்து ஆஸிம் உட்பட ஏழு பேரைக் கொன்றனர்.

உளவுப் படையினரில் எஞ்சியிருந்த மூன்று பேரை அதாவது குபைப் அவர்களையும், இப்னு தசினா அவர்களையும் மற்றொருவரையும் அவர்கள் கைது செய்து தம் விற்களின் நாண்களை அவிழ்த்து அவர்களைக் கட்டினார்கள். அந்த மூன்றாமவர் அந்த இறைமறுப்பாளர்களை நோக்கி, 'இது முதலாவது நம்பிக்கை துரோகம். நான் உங்களுடன் வர மாட்டேன். கொல்லப்பட்ட இவர்கள் எனக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளனர்' என்று கூறினார். உடனே, அவர்கள் அவரை இழுத்துச் செல்ல நிர்பந்தித்தார்கள். அதற்கு அவர் மறுத்து விடவே அவரைக் கொலை செய்தனர். பிறகு குபைப் அவர்களையும் இப்னு தசினா அவர்களையும் பிடித்துச் சென்று மக்காவில் விற்றுவிட்டனர்.

பனூஹாரிஸ் என்னும் குலத்தின் தலைவர் ஹாரிஸ் இப்னு ஆமிர் என்பவரை குபைப் அவர்கள் பத்ருப் போரில் கொன்று விட்டிருந்ததால், அதற்குப் பழிவாங்குவதற்காகக் குபைப் அவர்களைப் பனூ ஹாரிஸ் குலத்தார் வாங்கிக் கைது செய்து வைத்திருந்தனர். குபைப் அவர்களைக் கொல்வதற்காக ஹாரிஸ் குடும்பத்தார் ஒன்று கூடியபோது, குபைபின் தேவையற்ற முடிகளைக் களைவதற்காக ஒரு சவரக் கத்தி அவரிடம் தரப்பட்டது. அப்போது ஹாரிஸின் மகளின் குழந்தை குபைப்பின் பக்கம் சென்றது.



அவர் கையில் சவரக் கத்தி இருக்க, தம் மடியின் மீது அவனை உட்கார வைத்திருப்பதைக் கண்டு ஹாரிஸின் மகள் பீதியடையவே, உடனே குபைப் 'நான் இவனைக் கொன்று விடுவேன் என்று நீ பயப்படுகிறாயா? நான் அப்படிச் செய்யமாட்டேன்' என்று கூறினார். குபைப் மிகச் சிறந்த கைதி என்று சொல்லும் அளவுக்கு நடந்து கொண்டார். குபைப்பை ஹாரிஸ் குலத்தார் கொல்வதற்காக அழைத்துச் சென்றபோது குபைப் அவர்களிடம், 'என்னை இரண்டு ரக்அத்துகள் தொழ விடுங்கள்' என்று கூறினார்கள்.

தொழுது முடித்த பிறகு, 'நான் முஸ்லிமாகக் கொல்லப்படுவதால் நான் வேறு எதையும் பொருட்படுத்தப் போவதில்லை. எந்த இடத்தில் நான் இறந்தாலும் நான் இறைவனுக்காகவே கொல்லப்படுகிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. நான் கொலையுறுவது அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகத்தான் எனும்போது, அவன் நாடினால் என்னுடைய துண்டிக்கப்பட்ட உறுப்புகளின் இணைப்புகளின் மீது கூட,தன் அருள் வளத்தைப் பொழிவான்' என்று கவி பாடினார்கள். பின்னர், குபைப் அவர்களை ஹாரிஸின் மகன் உக்பா கொன்றுவிட்டார். அன்றிலிருந்து அடைத்து வைத்து அல்லது கட்டி வைத்துக் கொல்லப்பட்ட ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கொல்லப்படுவதற்கு முன் இரண்டு ரக்அத்துகள் தொழுவதை முன்மாதிரியாக்கியவர் குபைப் அவர்களே என்றாயிற்று.

ஆஸிம் இப்னு ஸாபித் அவர்கள் கொல்லப்பட்டபோது, அவர்கள் செய்த பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு அவர்களின் நிலைகுறித்துத் தன் தூதருக்குத் தெரிவித்துவிட்டான். நபி(ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களுக்கு உளவுப் படையினரின் செய்தியையும், அவர்களுக்குக் குறைஷி குல நிராகரிப்பாளர்களில் சிலருக்கு ஆஸிம் அவர்கள் கொல்லப்பட்டது குறித்துத் தெரிவிக்கப்பட்டவுடன் கொல்லப்பட்டது அவர்தான் என்று அவரை அடையாளம் தெரிந்து கொள்ள அவரின் அங்கம் எதையாவது தமக்குக் கொடுத்தனுப்பும் படி கேட்டு அவர்கள் ஆளனுப்பினார்கள்.

அப்போது ஆஸிம் அவர்களுக்காக அவர்களின் உடலுக்குப் பாதுகாப்பாக ஆண் தேனீக்களின் கூட்டம் ஒன்று நிழல் தரும் மேகத்தைப் போன்று அவரைச் சுற்றிலும் அரணாகப் படர்ந்திருக்கும் படி அனுப்பப்பட்டது. அது அவர்களைக் குறைஷிகளின் தூதுவரிடமிருந்து காப்பாற்றியது. எனவே, அவர்களின் சதையிலிருந்து அவர்களால் எதையும் துண்டித்து எடுத்துச் செல்ல முடியவில்லை.

அல்லாஹ் நம்பிக்கை கொண்ட தன் அடியானை உயிருடன் இருக்கும் போது பாதுகாத்தது போன்று அவரின் மரணத்திற்குப் பின்னும் பாதுகாக்கிறான்.

ஸஹீஹ் புகாரி 3:56:3045, 4:64:3989, 4:64:4086

- ஜெஸிலா பானு.
Tags:    

Similar News