ஆன்மிகம்

இறைத்தூதருக்காக இறைவன் வழங்கிய அருட்கொடை

Published On 2017-05-22 04:17 GMT   |   Update On 2017-05-22 04:17 GMT
நபி முஹம்மது(ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் “கடனுக்குப் பகரமாக ஜாபிர் தோட்டத்தின் பேரீச்சம் பழங்களைச் சிறிது ஏற்றுக் கொண்டு மீதிக் கடனைத் தள்ளுபடி செய்து விடும்படி கேட்டுக் கொண்டார்கள்.
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களின் தந்தையார் உஹுத் போரின்போது கொல்லப்பட்டுவிட்டார்கள். அவர்கள் மீது கடன் சுமை இருந்தது. ஜாபிர் மட்டுமின்றி வேறு ஆறு பெண் மக்களும் அவர்களுக்கு இருந்தனர்.

ஜாபிர்(ரலி) அவர்களின் தந்தை அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஹராம்(ரலி)தான் கடன்பட்ட நிலையில் மரணித்துவிட்டதால் கடன் கொடுத்தவர்கள் தம் உரிமைகளைக் கேட்டு ஜாபிரை நெருக்கடிக்குள்ளாக்கினர், கடுமை காட்டினர். ஜாபிர்(ரலி) உடனே நபி முஹம்மது(ஸல்) அவர்களிடம் சென்று விஷயத்தைக் கூறினார்.

ஜாபிர்(ரலி) அவர்களிடம் “கடனை திருப்பிச் செலுத்த உன்னிடம் என்ன உள்ளது?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க, அதற்கு ஜாபிர்(ரலி), கொஞ்சம் பேரீச்சம் பழங்கள் மட்டுமே என்று பதில் அளித்தார்கள்.

நபி முஹம்மது(ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் “கடனுக்குப் பகரமாக ஜாபிர் தோட்டத்தின் பேரீச்சம் பழங்களைச் சிறிது ஏற்றுக் கொண்டு மீதிக் கடனைத் தள்ளுபடி செய்து விடும்படி கேட்டுக் கொண்டார்கள். ஆனால் கடன் தந்தவர்கள் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டனர். பாதித் தொகைக்கு ஈடாகப் பேரீச்சம்பழங்களை வாங்காமல், முழுக் கடன் தொகைக்கு ஈடாகப் பேசீச்சம்பழங்களைக் கேட்டனர். அவர்களின் கடனை விரைவில் அடைப்பதாகச் சொல்லி கடன்காரர்களை அனுப்பி வைத்தார்கள் நபி (ஸல்).



மறுநாள் காலை வருவதாக ஜாபிர்(ரலி) அவர்களிடம் சொல்லிவிட்டுச் சென்றார்கள் நபி(ஸல்). கொடுத்த வாக்கின்படி மறுநாள் காலையில் ஜாபிரிடம் சென்று, பேரீச்ச மரங்களிடையே சுற்றி வந்து, அவற்றின் கனிகளில் பரக்கத்துக்காக அதாவது அருள் வளத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பிறகு, ஜாபிர்(ரலி) அவர்களிடம் ‘கடன்காரர்களுக்குப் பறித்துக் கொடு.

அவர்களுக்குச் சேர வேண்டியதை நிறைவாகக் கொடு’ என்றார்கள். ஜாபிர(ரலி) அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. நபி(ஸல்) அவர்கள் ஜாபிர்(ரலி) அவர்களிடம் “உங்கள் பேரீச்சங்கனிகளின் ஒவ்வொரு வகையையும் தனித் தனியாகப் பிரித்து வையுங்கள். 'இத்க் இப்னு ஸைத்' என்னும் உயர் ரகப் பேரீச்சம் பழத்தை ஒரு பக்கமும் 'லீன்' என்னும் மற்றொரு ரகப் பேரீச்சம் பழத்தை ஒரு பக்கமும் 'அஜ்வா' என்னும் சிறப்பு ரகப் பேரீச்சம் பழத்தை இன்னொரு பக்கமும் தனித்தனியாக எடுத்து வையுங்கள். பின்னர் கடன் காரர்களை வரவழையுங்கள்” என்றார்கள்.

ஜாபிர்(ரலி) அவர்களும் நபிகளார் கூறியபடியே செய்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் வந்து பேரீச்ச குவியல்களின் அருகே அமர்ந்து கொண்டு கடன்காரர் ஒவ்வொருவருக்கும் அளந்து கொடுக்கலானார்கள். நிறைவாக அனைவருக்கும் கொடுத்து முடித்தார்கள். பேரீச்சம் பழக்குவியல் யாருடைய கரமும் படாததைப் போன்று முன்பிருந்ததைப் போன்றே சற்றும் குறையாமல் அப்படியே இருந்தது.

இவ்விஷயத்தைப் பற்றி ஜாபிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் ஆச்சர்யத்தோடு தெரிவிக்க, அதற்கு உமர்(ரலி), 'இறைத்தூதர் அந்தப் பேரீச்ச மரங்களுக்கிடையே நடந்து சென்றபோதே, அவற்றில் பரக்கத்து (அருள் வளம்) வழங்கப்படும் என்று அறிந்து கொண்டேன்' என்று கூறினார்கள்

ஸஹீஹ் புகாரி 2:34:2127, 2:43:2395-2396, 2:43:2405, 3:55:2781

- ஜெஸிலா பானு.
Tags:    

Similar News