ஆன்மிகம்

நல்லதை செய்வோம், தீயதை தடுப்போம்

Published On 2017-05-04 07:46 GMT   |   Update On 2017-05-04 07:46 GMT
மனிதர்களிடம் இருக்க வேண்டிய முக்கிய பண்புகளில் ஒன்று, ‘நன்மைகளை ஏவுவது, தீமைகளைத் தடுப்பது’. ஆனால் இன்று நல்லதை சொல்வோரும் இல்லை; கெட்டதை தடுப்போரும் இல்லை.
மனிதர்களிடம் இருக்க வேண்டிய முக்கிய பண்புகளில் ஒன்று, ‘நன்மைகளை ஏவுவது, தீமைகளைத் தடுப்பது’. ஆனால் இன்று நல்லதை சொல்வோரும் இல்லை; கெட்டதை தடுப்போரும் இல்லை.

அல்லாஹ் திருக்குர்ஆனில் இதுபற்றி கூறியிருப்பதாவது: ‘உங்களில் இருந்து ஒரு கூட்டத்தார் (மக்களை) நன்மையின் பக்கம் அழைக்கின்றவர்களாகவும், நல்லதைக் கொண்டு ஏவுகிறவர்களாகவும், தீயதை விட்டும் விலக்குபவர்களாகவும் இருக்கட்டும். மேலும் இவர்கள்தான் வெற்றியாளர்கள்’. (3:104)

‘இறை நம்பிக்கை கொண்ட ஆண்களும், இறை நம்பிக்கை கொண்ட பெண்களும், அவர்களில் சிலர், சிலருக்கு உதவியாளர் களாய் இருக்கின்றனர்; நன்மையை அவர்கள் ஏவுகின்றனர்; தீமையை தடுக்கின்றனர்; தொழுகையை நிலை நிறுத்தி, ஜகாத்தைக் கொடுத்து, அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றனர்; இத்தகையோர்- விரைவில் இவர்களுக்கு அல்லாஹ் அருள் செய்வான். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன்; ஞானமுள்ளவன்’. (9:71)

இந்த இருவசனங்களில் முதல் வசனம் வெற்றிக்கு என்ன வழி என்பதைச் சொல்லிக் காட்டுகிறது. மறுவசனம் ஐம்பெரும் கடமைகளுக்கு முன் ‘ஏவல் விலக்கல்’ தான் மிகமிக முக்கியம் என்பதை மிக அழகாகச் சுட்டிக் காட்டுகிறது. இது நபிமார்கள், நல்லோர்களின் நற்பண்பு. குறிப்பாக ஒரு நோன்பாளியிடம் இருக்க வேண்டிய பண்பு.

நபிகளார் நவின்றார்கள்: ‘என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக... நிச்சயமாக நீங்கள் நல்லதை ஏவுங்கள். நிச்சயமாக நீங்கள் தீயதை தடுங்கள். அல்லது நிச்சயமாக அல்லாஹ் தன்புறத்திலிருந்து வேதனையை விரைவாக அனுப்புவதை எதிர்பாருங்கள். பிறகு நிச்சயமாக நீங்கள் அவனை அழைத்தாலும் உங்களுக்கு பதில் அளிக்கப்படமாட்டாது’. (நூல்: திர்மிதி)

நாம் இப்புனிதப் பணியை சாதாரணமான ஒன்றாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதை நாம் நமது வீட்டிலிருந்தே கூடஆரம்பிக்கலாம். நம்மைச் சுற்றி நல்லவை நடக்கிறதோ இல்லையோ தீமைகள் பலதும் நடக்கின்றன. அவற்றைத் தடுப்பதும் அவசியம் தானே.

நபிகளார் நவின்றார்கள்: ‘உங்களில் எவர் ஏதேனும் ஒரு தீமையைக் கண்டால் தமது கையால் அதை தடுக்கட்டும். அதற்கு சக்தி பெறாவிட்டால், தமது நாவால் தடுக்கட்டும். அதற்கும் சக்தி பெறாவிட்டால், தமது மனதால் வருத்தப்படட்டும்’. (நூல்: முஸ்லிம்)

தீமைகளை தடுப்பதற்கான மூன்று வழி முறைகளை நபிகளார் நமக்கு வெகு அழகாகச் சொல்லி இருக்கிறார்கள். அதற்கும் கூட அல்லாஹ்விடத்தில் அங்கீகாரம் பெற்ற நன்மை நிச்சயம் இருக்கிறது. அவற்றை நாம் ஏன் வீணாகத் தவற விட வேண்டும்?

நமது வாழ்வில், அதிகமாய் நன்மைகளை ஏவி, தீமைகளை தடுத்திடுவோம்.
Tags:    

Similar News