ஆன்மிகம்

இறை நிராகரிப்பாளர்களின் சவாலும் இறை நம்பிக்கையாளர்களின் பதிலும்..

Published On 2017-04-29 03:09 GMT   |   Update On 2017-04-29 03:09 GMT
நீ இறந்தவர் என்று சொன்னவர்கள் எல்லாருமே உயிரோடுதான் இருக்கிறார்கள். உனக்கு மனத் துன்பமளிக்கும் ஒரு விஷயம் மக்கா வெற்றிதான் இப்போது எஞ்சியுள்ளது” என்றார்கள்.
உஹுத் போரில் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் முன் பல் உடைக்கப்பட்டு, தலையில் ஏற்பட்ட பலமான காயத்தினால் இரத்தம் வழிந்தோடியது. அப்போது நபிகள் நாயகம் “அல்லாஹ்வின் இறைத்தூதரை காயப்படுத்தியவர்கள் எவ்வாறு வெற்றிபெற முடியும்?” என்று கூறியபோது அல்லாஹ் “நபியே, உமக்கு இவ்விஷயத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை.

அவன் அவர்களை மன்னித்து விடலாம், அல்லது அவர்களை வேதனைப்படுத்தலாம். நிச்சயமாக அவர்கள் கொடியோராக இருப்பதின் காரணமாக” என்ற திருக்குர்ஆனின் இறைவசனத்தை அருளியதன் மூலம் போரின் வெற்றி தோல்வியை இறைவன் மட்டுமே தீர்மானிக்கிறான், வானங்களிலும், பூமியிலும் உள்ளவையெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியவை. தான் நாடியவர்களை அவன் மன்னிக்கின்றான்; இன்னும் தான் நாடியவர்களை வேதனைப்படுத்தவும் செய்கின்றான் - அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், பெருங்கருணையாளன் என்பது தெளிவு.

நபிகளாரின் முகத்தில் வழிந்தோடிய இரத்தத்தை அலீ(ரலி) அவர்களின் கேடயத்தில் கொண்டு வந்த தண்ணீரை வைத்து நபி முஹம்மது(ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா(ரலி) கழுவினார். இரத்தம் நிற்காமல் இருந்ததால், ஒரு பாயை எடுத்து அது கரிக்கப்பட்டு அந்தச் சாம்பலை நபி(ஸல்) அவர்களின் காயத்தில் பூசினார்.

போரை நிறுத்திக் கொண்டு மக்காவிற்குப் புறப்பட்ட இணைவைப்பாளர்களின் ஆத்திரம் தீராதிருந்ததால் போரில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் சடலத்தின் காது, மூக்கு, பின்ன இதர உறுப்புகளை அறுத்து மகிழ்ந்தனர். வயிறுகளைக் கிழித்து இன்புற்றனர். அபூ ஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பா மக்காவிற்குத் திரும்பும் போது ஹம்ஸா(ரலி) அவர்களின் உடலைச் சிதைத்து அவரது ஈரலை அறுத்து மென்று முழுங்க முயற்சித்து, முடியாமல் அதைத் துப்பிவிட்டுச் சென்றவர், பிற முஸ்லிம் வீரர்களின் குடல்களை அறுத்துத் தனக்குக் கால் கொலுசாகவும், கழுத்து வெற்றி மாலையாகவும் அணிந்து கொண்டு சென்றாள்.

பத்ருப் போரின்போது இணைவைப்பாளர்கள் மடிந்தும் கைதிகளாகவும் பிடிப்பட்டிருந்ததற்குச் சமமாக உஹுத் போரில் முஸ்லிம்கள் இறந்து கிடந்ததைக் கண்டு சந்தோஷப்பட்ட அபூ ஸுஃப்யான் மக்காவிற்குத் திரும்புவதற்கு முன்பு களத்தில் இறங்கி, “உங்கள் கூட்டத்தில் முஹம்மது இருக்கிறாரா?” என்று மூன்று முறை கூக்குரலிட்டான்.



முஸ்லிம்களைப் பதிலளிக்க வேண்டாமென்றார்கள் நபி முஹம்மது(ஸல்). மறுபடியும் அபூ ஸுஃப்யான் அபூ பக்ர் இருக்கிறாரா? என்றும், கத்தாபின் மகன் உமர் இருக்கிறாரா? என்றும் மூன்று முறை கேட்டுப் பார்த்துவிட்டு, ‘இவர்களெல்லாம் ஒழிந்தனர்’ என்று ஏளனமாகப் பேசிச் சிரித்தார். மக்காவாசிகளின் பக்கம் திரும்பி, ‘இவர்களெல்லாம் கொல்லப்பட்டுவிட்டனர்’ என்றார். இதைக் கேட்டு பொறுமை இழந்த உமர்(ரலி), தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், தைரியமாக முன்னேறி வந்து “அல்லாஹ்வின் பகைவனே! பொய் சொல்லாதே.

நீ இறந்தவர் என்று சொன்னவர்கள் எல்லாருமே உயிரோடுதான் இருக்கிறார்கள். உனக்கு மனத் துன்பமளிக்கும் ஒரு விஷயம் மக்கா வெற்றிதான் இப்போது எஞ்சியுள்ளது” என்றார்கள். உடனே அபூ ஸுஃப்யான், “ஹுபலே, உன் கட்சி மேலோங்கிவிட்டது” என்று கவிதை பாடலானார். அதற்கு பதில் தரும் வகையில் நபித்தோழர்கள் “அல்லாஹ்வே மிக உயர்ந்தவன், மிக மேலானவன்” என்றனர். தொடந்து அபூ ஸுஃப்யான், “எங்களுக்கு ‘உஸ்ஸா’ எனும் தெய்வம் இருக்கிறது, உங்களிடம் அது இல்லையே’ என்று முட்டாள்தனமான கவிதையைப் பாடினார்.

அதனை எதிர்க்கும் வகையில் “அல்லாஹ்வே எங்கள் உதவியாளன், உங்களுக்கு உதவியாளனே இல்லையே!” என்று நபிகளார் சொல்லித் தந்ததை முஸ்லிம்கள் சொன்னார்கள். உடனே அபூ ஸுஃப்யான் “இந்நாள் பத்ருப் போர் நடந்த நாளுக்குப் பதிலாகும். நமக்கிடையிலான போரில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருகிறது. உங்கள் கூட்டத்தாரில் நீங்கள் அங்கங்கள் சிதைக்கப்பட்டவர்களைக் காண்பீர்கள்.

அப்படிச் செய்யும்படி நான் கட்டளையிடவுமில்லை” என்று சொல்ல, அதற்கு உமர் (ரலி) “கண்டிப்பாக அதற்கு இது சமமாக முடியாது. எங்களில் கொல்லப்பட்டவர்கள் சுவனத்தில் இருக்கிறார்கள். உங்களில் கொல்லப்பட்டவர்கள் நரகத்தில் இருக்கிறார்கள்” என்று பதிலடி தந்தார்கள்.

அபூ ஸுஃப்யான் எதுவும் பேச முடியாமல், நபி முஹம்மது (ஸல்) உயிருடன் இருப்பதை அறிந்து கொண்டு ‘அடுத்த வருடம் பத்ர் மைதானத்தில் சந்திப்போம்’ என்று சவாலாகச் சொல்ல, “அப்படியே ஆகட்டும்” என்று நபித் தோழர்கள் பதிலுரைக்க, இணைவைப்பாளர்கள் மக்காவிற்குப் பயணமாகினர்.

ஆதாரம்: திருக்குர்ஆன் 3:128-129, ஸஹீஹ் புகாரி 1:4:243, 3:56:3039, இப்னு ஹிஷாம்

- ஜெஸிலா பானு.
Tags:    

Similar News