ஆன்மிகம்

பாகுபாடுகளை அகற்றி சகோதரத்துவத்தைப் போதித்த இஸ்லாம்

Published On 2017-02-01 07:21 GMT   |   Update On 2017-02-01 07:21 GMT
சகோதரத்துவத்தால் மக்களிடையே விரோதங்களும், வேற்றுமைகளும், மனக் கசப்புகளும் அகன்றது. ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மலர்ந்தது.
“வேதத்தையுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்களிடம் நீர் ஒரு பொற் குவியலை ஒப்படைத்தாலும், அவர்கள் அதை ஒரு குறையும் இல்லாமல், கேட்கும்போது உம்மிடம் திருப்பிக் கொடுத்து விடுவார்கள். அவர்களில் இன்னும் சிலர் இருக்கிறார்கள், அவர்களிடம் ஒரு நாணயத்தை (தினாரை) ஒப்படைத்தாலும், நீர் அவர்களிடம் தொடர்ந்து நின்று கேட்டாலொழிய, அவர்கள் அதை உமக்குத் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள்; அதற்குக் காரணம், ‘பாமரர்களிடம் இருந்து நாம் எதைக் கைப்பற்றிக் கொண்டாலும் நம்மைக் குற்றம் பிடிக்க அவர்களுக்கு வழியில்லை’ என்று அவர்கள் கூறுவதுதான். மேலும், அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பேரில் பொய் கூறுகிறார்கள்” என்ற திருக்குர்ஆனின் இறை வசனத்திற்கேற்ப உள்ளத்தில் இறைநிராகரிப்பை மறைத்து வைத்திருந்த யூதர்கள் நடந்து கொண்டார்கள்.

யூதர்கள் தங்களது மார்க்கத்தைப் பரப்ப வேண்டுமென்று தீவிரம் காட்டவில்லை மாறாகப் பதவியும் பொருளும் மட்டுமே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. அதற்காகப் பலவகையான சூழ்ச்சிகளை மேற்கொண்டனர். இவர்கள் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள அப்பாவி முஸ்லிம்களையும் பயன்படுத்திக் கொண்டனர். அரேபியர்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் அவர்களிடையே ஒற்றுமை ஏற்பட்டுவிடுமென்றும் அஞ்சினர்.

யூதர்களைப் போலவே மக்காவிலுள்ள குறைஷிகளும் இஸ்லாமிற்கும் முஸ்லிம்களுக்கும் மிகப்பெரிய எதிரிகளாகத் திகழ்ந்தனர். மக்காவைவிட்டு மதீனாவிற்குத் தஞ்சம் புகுந்தவர்களின் சொத்துக்களையும், வீடுகளையும், நிலங்களையும் பறிமுதல் செய்து மக்களுக்கு நெருக்கடி தந்தனர். மதீனாவில் அவர்கள் தமக்கான ஒரு சமுதாயத்தை உருவாக்குவதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மதீனாவில் 'மஸ்ஜிதுன் நபவி'யை நிறுவிய பின் அந்தப் பள்ளிவாசலில் இறை வணக்கம் மட்டுமல்லாது, மார்க்கக் கல்வியும் போதனைகளும் நிறைந்திருந்தது, தொழுகைக்கான அழைப்பான ‘பாங்கும்’ ஒலித்த வண்ணமிருந்ததால், அவர்களால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. இதையெல்லாம் முடிவுக்குக் கொண்டுவர அவர்கள் திட்டங்களைத் தீட்டினர்.

அதற்கு நேர்மாறாக நபிகள் நாயாகம் முஹம்மது (ஸல்), ‘இனி அல்லாஹ்வுடைய வேதக் கட்டளைப்படி உங்கள் உறவினர்களில் உள்ளவர்களே ஒருவர் மற்றவருக்கு நெருக்கமானவர்கள். எவர்கள் இறைநம்பிக்கையின் காரணமாகத் தம் ஊரைத் துறந்து வந்தார்களோ, அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்’ என்ற இறை வசனத்திற்கேற்ப இறைநம்பிக்கையாளர்களுக்கிடையில் சகோதரத்துவ உடன்படிக்கையை அமைத்து அதில் உறுதியாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்தி வந்தார்கள். நபிகளாரின் சகோதரத்துவத்தின் அடிப்படை நோக்கமானது மக்கள் அறியாமைக் காலத்து பாகுபாடின்றி, குலப் பெருமை பேசாமல், செல்வந்தர் ஏழை என்று பாராமல், நிறம் இனமென்று பிரிக்காமல் அனைவரும் ஒற்றுமையாக ஓர் இனமாக இஸ்லாமை மட்டும் முன்னிறுத்தி அந்தப் பிணைப்போடு செயல்பட வேண்டுமென்பதை வலியுறுத்துவதாக இருந்தது

இந்தச் சகோதரத்துவத்தால் மக்களிடையே விரோதங்களும், வேற்றுமைகளும், மனக் கசப்புகளும் அகன்றது. ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மலர்ந்தது.

திருக்குர்ஆன் 3:75, 8:75 அர்ரஹீக் அல்மக்தூம்

- ஜெஸிலா.

Similar News