ஆன்மிகம்

அகந்தை இன்றி வாழ்ந்திடுவோம்

Published On 2017-01-19 14:10 IST   |   Update On 2017-01-19 14:10:00 IST
இறை நெருக்கத்திற்கு தடையாகவும், சகோதரத்துவ வாழ்க்கைக்கு இடையூறாகவும் பல்வேறு துன்பங்களுக்கு காரணமாகவும் உள்ள ‘நான்’ என்ற அகந்தையை நீக்கி வாழப்பழகுவோம்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உம்மி நபியாக இருந்தார்கள். ‘உம்மி’ என்றால் ‘எழுதப்படிக்கத் தெரியாதவர்’ என்பது பொருளாகும்.

இறைவன் அருளிய ‘இதய வெளிச்சம்’ என்ற உள்ளுணர்வு ஆற்றல் காரணமாக எதையும் எளிதில் அறிந்துகொள்ளும் தன்மையை நபிகளார் பெற்றிருந்தார்கள். அதனால் நபிகளார் யாரிடமும் சென்று கல்வி பயில வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

தனிமையில் சில காலம் இறை தியானம் செய்வது என்பது - இறைத்தூதர்கள், ஞானிகளின் வழக்கமான செயலாக இருந்துள்ளது. மக்களின் சீர்கேட்டையும், அவநம்பிக்கைகளையும், இனபேதம், குலபேதம் போன்ற முரண்பாடுகளை விட்டும் மனித குலத்தை மீட்டெடுத்து, ‘எல்லோருக்கும் இறைவன் ஒருவனே’, என்ற பொது தத்துவத்தை உலகில் நிலை நாட்டிட வேண்டி நபிகளார் மக்காவில் உள்ள ‘ஹீரா’ என்ற குகையில் இறை தியானத்தில் ஈடுபட்டார்கள்.

அவர்களது 40-ம் வயது முதல் அவர்களுக்கு திருக்குர்ஆன் அருளப்பட்டது. திருக்குர்ஆன் அருளப்பட்ட முதல் நிகழ்வின் போது வானவர் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபிகளார் முன் தோன்றி, ‘ஓதுவீராக’ என்று கூறியபோது, ‘எனக்கு ஓதத்தெரியாதே’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். இறைவனின் அருள்துணையின்றி எனக்கு சுயமாக எதுவும் ஓதத்தெரியாதே என்பதைத் தான் நபிகளார் ‘எனக்கு ஓதத்தெரியாதே’ என்றார்கள்.

அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் கீழ்கண்ட வசனத்தை கூறியதும் நபிகளார் ஓதத் தொடங்கினார்கள். அதனைத் தொடர்ந்து 23 ஆண்டுகள், சூழ்நிலைக்கும் தேவைகளுக்கும் ஏற்ப திருக்குர்ஆன் இறங்கிக் கொண்டே இருந்தது.

ஜிப்ரில் (அலை) முதலில் ஓதிக்காட்டிய வசனம் இதுதான்: ‘(நபியே!) உம்முடைய இரட்சகனான (ரப்பின்) திருநாமத்தை (துணைக்) கொண்டு ஓதுவீராக! அவன் எத்தகைய (ஆற்றல் மிக்க)வன் என்றால் (யாவற்றையும் (அவன்) படைத்தவன் (ஆவான்)’ (96-01).

‘எனக்கு ஓதத்தெரியாதே’ என்று நபிகளார் கூறியது அறியாமையினால் ஏற்பட்ட வார்த்தை அல்ல. அது இதயப்பூர்வமாக, உண்மையின் உணர்வு நிலையில் சொல்லப்பட்ட புனித வார்த்தையாகும். ‘தெரியாதே’ என்று கூறிய நபிகளாருக்கு, யுக முடிவு நாள் வரை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து வாழ்வியல் முறைகளும், வழிகாட்டுதலும் கொண்ட திருக்குர்ஆன் அருளப்பட்டது.

அகந்தையை நீக்கி உண்மையை உணர்ந்து கொள்ள நபிகளார் இவ்வாறு கூறினார்கள்: ‘இறப்பு வருவதற்கு முன் இறந்து விடுங்கள்’.

மரணமடைந்த ஒரு உடல் எப்படி ‘நான்’ என்று கூற முடியாதோ அப்படி. எப்படி அதே சடலம் எதையும், என்னுடையது என்று உரிமை கொண்டாட முடியாதோ அப்படி.

எப்படி அந்த உயிரற்ற உடல் தனது மாட்சிமை குறித்து பெருமை பேச முடியாதோ அப்படி. உங்கள் இறப்பு வருவதற்கு முன் உங்களுடைய ‘நான்’ என்ற அகம்பாவம் இறந்து போகட்டும், சுயநலம் சாகட்டும், தற்பெருமை போன்ற இழிகுணங்கள் மரணமடையட்டும் என்பதே ‘இறப்புக்கு முன் இறந்து விடுங்கள்’ என்ற வார்த்தையின் பொருளாகும்.

இன்று நம் சமுதாயத்தின் நிலை என்ன? நம் சமுதாயம் இவ்வளவு பெரிய இக்கட்டான சூழலில் மாட்டி தவிப்பதற்கு என்ன காரணம்? நம்மிடையே ஒற்றுமை சீர்குலைவு எதனால் ஏற்படுகின்றது? என்பதற்கான ஒரே விடை, நம்மிடமுள்ள ‘நான் என்ற அகம்பாவமே’ ஆகும்.

அத்தகைய அகந்தை, போலித்தனமாக செயல்படவும், விளம்பரத்தை தேடிக்கொள்ளவுமே ஆசையை தூண்டிவிடுகின்றது. சமுதாயமும் மக்களும் எப்படி போனால் நமக்கு என்ன? தனக்கு சாதகமாக எதையாவது அப்படி இப்படி பேசி தனது புகழுக்கு பெருமை சேர்க்க நம்மை பொய் சொல்ல வைக்கிறது. ‘தற்பெருமை’ என்ற அகந்தை பொய்யான அடக்கத்தையும், பணிவையும் காட்டி மக்களை ஏமாற்றுகின்றது. தன்னை பெரும் தலைவனாக காட்டிக் கொள்ள தூண்டுகிறது.

இத்தகைய போலித்தனமான அறிஞர்கள் எப்படி செயல்படுவார்கள், அவர்களின் நிலை என்ன என்பது குறித்து திருக்குர்ஆன் (9-34) இவ்வாறு அடையாளப்படுத்துகிறது:

‘இறை விசுவாசிகளே! அறிஞர்களிலும் துறவிகளிலும் நிச்சயமாக பெரும்பாலானவர்கள் மக்களின் பொருட்களை தவறாக (வழி) முறையில் புசிக்கின்றனர். இன்னும் (அம்மக்களை) இறைவனின் (நேரான) பாதையை விட்டும் தடுக்கின்றனர். இன்றும் எவர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் (கொண்டு) அதனை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யவில்லையோ! அவர்களுக்கு நீர் நோவினை தரும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக’.

இறை நெருக்கத்திற்கு தடையாகவும், சகோதரத்துவ வாழ்க்கைக்கு இடையூறாகவும் பல்வேறு துன்பங்களுக்கு காரணமாகவும் உள்ள ‘நான்’ என்ற அகந்தையை நீக்கி வாழப்பழகுவோம். அப்போது தான் இறைவனின் பேரருள் என்றென்றும் நம் மீது உண்டாகும். எல்லாம் வல்ல இறைவன் அதற்கு பேரருள் புரிவானாக. ஆமீன்.

மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, திருநெல்வேலி மாவட்டம்.

Similar News