ஆன்மிகம்

மதீனா வரையிலும் தொடர்ந்த துன்பங்கள்

Published On 2017-01-17 03:44 GMT   |   Update On 2017-01-17 03:44 GMT
நபி முஹம்மது (ஸல்) அவர்களைக் கொல்வதற்காக, குறைஷிகள் அலைந்து கொண்டிருந்தனர். இறைவன் நபிகளாரையும் அவர்களுடைய தோழரையும் பார்க்க முடியாமல் செய்தார்.
நபி முஹம்மது (ஸல்) அவர்களைக் கொல்வதற்காக, குறைஷிகள் அலைந்து கொண்டிருந்தனர். நபிகளார் மறைந்திருந்த குகைக்கு மிக அருகில் வந்தும், நபிகளாரையும் அவர்களுடைய தோழரையும் பார்க்க முடியாமல் இறைவன் செய்தமையால் அவர்கள் திரும்பி விட்டனர். குறைஷிகள் தேடித் தேடி சோர்வடைந்தனர். தேடும் வேட்கையும் தணிந்தது. இதனை அறிந்து கொண்ட நபி (ஸல்) அவர்கள் தமது தோழர் அபூ பக்கருடன் அங்கிருந்து புறப்பட்டார்கள்.

போகும் பாதையில் வெப்பம் அதிகரிக்கவே, நிழல் படர்ந்த இடத்தைத் தேடினர். அப்படியான ஒரிடத்தில் அபூ பக்கர் (ரலி) ஒரு தோலை விரித்து, அதில் நபிகளாரை உறங்கி ஓய்வெடுக்கச் சொன்னார்கள். நபிகளார் உறங்கும்போது கண்காணித்த வண்ணம் இருந்தார்கள். அங்கு ஆட்டிடையன் ஒருவன் தன் ஆடுகளுடன் ஓய்வெடுக்க அதே பாறைக்கு அருகில் வந்தான்.

அபூ பக்கர் (ரலி) அவர்கள் அந்த ஆட்டிடையனிடம் “உன் ஆடுகளிடம் பால் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அவன் "பால்  இருக்கிறது"   என்று தெரிவித்தவுடன் அபூ பக்கர் (ரலி), ஆட்டின் மடியிலிருந்து மண்ணையும், முடியையும், தூசுகளையும் நீக்கி உதறிவிட்டு பால் கறக்க உத்தரவிட்டார்கள். அதன்படியே கறந்த பாலை அருந்தி, தாகத்தைத் தணித்துக் கொண்டு, நபி முஹம்மது (ஸல்) உறக்கத்திலிருந்து எழுந்து வரும்வரை காத்திருந்து அப்பாலை தந்தார்கள். நபிகளாரும் திருப்தியடையும் வரை பருகினார்கள். அதன்பின் பயணம் தொடர்ந்தது.

குறைஷிகளில் ஒருவரான சுராக்கா இப்னு மாலிக் இப்னி நபிகளாரையும் அவர்களது தோழரையும் குதிரையில் பின்தொடர்ந்து வந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அக்குதிரை வீரரை திரும்பிப் பார்த்துவிட்டு, 'இறைவா! அவரைக் கீழே விழச் செய்!' என்று பிரார்த்தித்தார்கள். உடனே குதிரை அவரைக் கீழே தள்ளிவிட்டது. பிறகு குதிரை கனைத்துக் கொண்டே எழுந்து நின்றது. நபிகளாரின் பிரார்த்தனையின் சக்தியைப் புரிந்து கொண்ட சுராக்கா உடனே மனம் திருந்தியவராக, "இறைத்தூதர் அவர்களே! நீங்கள் விரும்பியதை எனக்கு உத்தரவிடுங்கள்" என்று கூறினார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், “இங்கேயே நின்று கண்காணியுங்கள். எங்களை யாரும் பின் தொடராமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்கள். சுராக்கா முற்பகலில் இறைத்தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு எதிராகப் போரிடுபவராக இருந்தார். பிற்பகலில் நபியைக் காக்கும் ஆயுதமாக மாறினார். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கருங்கற்கள் நிறைந்த 'ஹர்ரா' பகுதியில் தங்கினார்கள். ஹர்ராவின் பொதுப் பெயர்தான் குபா.  பின்னாட்களில் குபாவில்தான் ஒரு பள்ளி வாசலை நபி முஹம்மது (ஸல்) கட்டச் செய்தார்கள். பிறகு, குபாவிலிருந்து கொண்டு மதீனாவாசிகளான அன்சாரிகளிடம் ஆளனுப்பினார்கள்.

அன்சாரிகள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமும், அபூ பக்ர்(ரலி) அவர்களிடமும் வந்தடைந்தனர். 'இப்போது நீங்கள் இருவரும் அச்சமற்றவர்களாகவும், ஆணையிடும் அதிகாரம் படைத்தவர்களாவும் பயணம் செய்யலாம்' என்று அன்சாரிகள் கூறினர். இறைத்தூதர்(ஸல்) அவர்களும், அபூ பக்ர்(ரலி) அவர்களும் மதீனா நோக்கிப் பயணமாயினர்.

ஸஹீஹ் புகாரி 4:61:3615, 4:63:3906, 4:63:3911

- ஜெஸிலா பானு.

Similar News