ஆன்மிகம்

இதயங்களை இணைத்த இறைநம்பிக்கை என்ற ஒற்றைப்புள்ளி

Published On 2017-01-03 03:33 GMT   |   Update On 2017-01-03 03:33 GMT
மதீனாவில் வாழும் முஸ்லிம்கள் மக்காவில் வாழும் தன் முஸ்லிம் சகோதரன் துன்புறுத்தப்படுகிறான் என்பதை அறிந்தால் அவருக்காகப் பதறினர், வேதனைப்பட்டனர்.
மதீனாவைச் சேர்ந்த கஸ்ரஜ் கிளையினருடன் இரவில் இரகசியமாக நடந்த உடன்படிக்கையைப் பற்றி அறிந்து கொண்ட மக்காவாசிகள் வேதனையடைந்தனர். அதுபோன்ற உடன்படிக்கைகள் ஏற்பட்டால் அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று அஞ்சினர். இந்த உடன்படிக்கையின் மீதான எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் மறுநாள் காலையில் மக்காவாசிகள் கூடினர்.

“எங்கள் மீது போர் தொடுக்க நீங்கள் உடன்படிக்கை செய்கின்றீர்களா?” என்று மக்காவாசிகள் நேரடியாகக் கேட்க, மதீனாவாசிகளில் இரவில் நடந்த ஒப்பந்தம் குறித்து எதுவும் அறியாத இணை வைப்பவர்கள் “அப்படி எந்த உடன்படிக்கையும் நடக்கவில்லை. நீங்கள் ஏதோ தவறான செய்தியைக் கேட்டுள்ளீர்கள்” என்று சொன்னதைக் கேட்டு மக்காவாசிகள் திரும்பினாலும், அவர்களுக்குச் சந்தேகம் இருந்துவந்தது.

இஸ்லாமைத் தழுவியவர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களைப் பிடிப்பதற்கு விரைந்தனர். ஆனால் நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் கட்டளையின்படி அவர்கள் மக்காவை விட்டுத் தங்கள் நகரத்திற்கு விரைந்து கொண்டிருந்தனர். அதில் ஸஅது (ரலி) என்பவர் மட்டும் குறைஷிகளின் பிடியில் சிக்கிக் கொண்டார். அவரை வாகனத்தின் பின் கட்டி இழுத்தபடி கொண்டுவந்து அடித்துத் துன்புறுத்தினர். குறைஷிகளில் ஒருவர், ஸஅத்துடன் நெடுங்கால வியாபார நட்பில் இருந்ததைச் சொல்லி அவரை விடுவித்து அனுப்பி வைத்தார்.

இதற்கிடையே, ஸஅதைக் காணவில்லை என்பதை அறிந்த மதீனாவாசிகள், அவரை மீட்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அடிபட்டவராக ஸஅது (ரலி) மதீனா நகரம் வந்து சேர்ந்தார்.

அகபாவின் மாபெரும் உடன்படிக்கை முஸ்லிம்களை ஒன்றிணைத்தது. மதீனாவில் வாழும் முஸ்லிம்கள் மக்காவில் வாழும் தன் முஸ்லிம் சகோதரன் துன்புறுத்தப்படுகிறான் என்பதை அறிந்தால் அவருக்காகப் பதறினர், வேதனைப்பட்டனர்.

இறைநம்பிக்கை என்ற ஒற்றைப் புள்ளி அவர்களை இணைத்தது.

-ஜெஸிலா பானு.

Similar News