ஆன்மிகம்

உறுதிமொழியில் உறுதியாய் நின்ற நபி

Published On 2016-12-19 08:39 GMT   |   Update On 2016-12-19 09:12 GMT
யமன் நாட்டைச் சேர்ந்தவர் மக்காவிற்கு வந்திருந்தபோது அங்குள்ள சில விஷமிகள் அவரிடம் சென்று “இங்கு ஒரு பைத்தியக்காரர், பித்துப் பிடித்தவர் இருக்கிறார். அவர் பெயர் முஹம்மது” என்று சொல்லி வைத்தனர்.
லிமாத் அஸ்தீ என்பவர் மந்திரித்துப் பார்ப்பவர். யமன் நாட்டைச் சேர்ந்தவர். அவர் மக்காவிற்கு வந்திருந்தபோது அங்குள்ள சில விஷமிகள் அவரிடம் சென்று “இங்கு ஒரு பைத்தியக்காரர், பித்துப் பிடித்தவர் இருக்கிறார். அவர் பெயர் முஹம்மது” என்று சொல்லி வைத்தனர்.

அதனை நம்பி லிமாத் அஸ்தீயும் முஹம்மது (ஸல்) அவர்களைத் தேடிச் சென்றார். நபிகளாரை சந்தித்து “முஹம்மதே, நான் ஷைத்தானின் சேட்டைகளை நீக்க மந்திரிப்பவன். உனக்கு மந்திரித்துப் பார்க்கவா?” என்று கேட்டார்.

அதற்கு நபி முஹம்மது (ஸல்) “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்விடமே உதவி  தேடுவோம், அவனே நேர்வழி காட்டுபவன். அவன் நேர்வழி காட்டியோரை யாரும் வழி கெடுக்க முடியாது. அவன் வழிகேட்டில் விட்டவனை யாரும் நேர்வழிப்படுத்திட இயலாது. வழிப்பாட்டிற்குரியவன். அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவனுக்கு நிகரானவர் எவருமில்லை என்று நான் சாட்சி அளிக்கிறேன். நிச்சயமாக முஹம்மதாகிய நான் அவனது அடிமையும் அவனது தூதருமென்று சாட்சி கூறுகிறேன்” என்று மொழிந்ததைப் பார்த்து லிமாத் அஸ்தீ வாயடைத்துப் போனார்.

“நீங்கள் சொன்னதைத் திரும்பச் சொல்லுங்கள்” என்று லிமாத் அஸ்தீ கேட்டார். நபி முஹம்மது (ஸல்) அவர்களும் மூன்று முறை இதையே வார்த்தை மாறாமல் சொன்னார்கள். அதைக் கேட்ட லிமாத் அஸ்தீ “நான் பித்துப் பிடித்தவன், ஜோசியக்காரன், சூனியக்காரன், ஏன் கவிஞர்களின் பேச்சையெல்லாமும் கேட்டிருக்கிறேன்.

ஆனால் நீங்கள் கூறியது போல் இதற்கு முன் நான் கேட்டதே இல்லை. இவை கருத்தாழமிக்கவை, இதனை சராசரியானவர் மொழியவே முடியாது. உங்களது கையைக் கொடுங்கள் நான் இஸ்லாமை ஏற்கிறேன் என்று நான் இப்போதே ஒப்பந்தம் செய்கிறேன்” என்று ஆச்சர்யம் மாறாமல் கூறி, அந்த நொடியே இஸ்லாமை ஏற்றார்.

இதைப் போன்றே வெவ்வேறு தருணங்களில். மக்கள் இஸ்லாத்தைத் தழுவினர்

(ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம், சீறா இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்)

- ஜெஸிலா பானு.

Similar News