ஆன்மிகம்

குறைஷிகளின் பலிக்காமல் போன தந்திரம்

Published On 2016-11-07 02:11 GMT   |   Update On 2016-11-07 02:12 GMT
நபி முஹம்மது (ஸல்) தைரியமாகக் குறைஷியர்கள் முன்னிலையிலேயே அவர்களது வணக்க வழிபாடுகளையும், இஸ்லாமிய அழைப்புப் பணியையும் தொடர்ந்தார்கள்.
நபி முஹம்மது (ஸல்) தைரியமாகக் குறைஷியர்கள் முன்னிலையிலேயே அவர்களது வணக்க வழிபாடுகளையும், இஸ்லாமிய அழைப்புப் பணியையும் தொடர்ந்தார்கள். ஆனால் இஸ்லாமை ஏற்றவர்கள் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இரகசியமாகவே வழிபாடுகளைச் செய்து வந்தனர். வெளிப்படையாகச் செய்தால் அவர்களுக்கு ஆபத்து நேரும் என்றும் அஞ்சினர். அதனால் இஸ்லாமை ஏற்றவர்களுக்கு அர்கம் இப்னு அபுல் வஅர்கம் மக்ஜூமி என்பவரின் வீட்டில் நபி (ஸல்) குர்ஆனை ஓதிக் காட்டுவதோடு, நற்பண்புகளையும் சட்டத்திட்டங்களையும் போதித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) முஸ்லிம்களைத் தமது ஊரைவிட்டு ஹபஷாவிற்கு - அதாவது தற்போதுள்ள எத்தியோபியாவிற்கு - குடிபெயரச் சொன்னார்கள். அப்படியே பல முஸ்லிம்கள் அங்கு சென்று விட்டனர்.

குர்ஆன் வசனத்தைச் செவிமடுக்கக் கூடாது என்று இருந்த குறைஷிகள் மத்தியில் திடீரென்று நபி முஹம்மது (ஸல்) குர்ஆன் வசனத்தை ஓதிக்காட்டும்போது அதன் இனிமையாலும், அது தந்த இன்பத்தாலும் மெய்மறந்து ‘அல்லாஹ்வுக்குத் தலைசாயுங்கள் அவனையே வணங்குங்கள்’ என்ற வசனத்தைக் கேட்கும்போது அவர்கள் தங்களையறியாமல் நபிகளாருடன் சேர்ந்து சிரம் பணிந்தார்கள்.

இணைவைப்பவர்கள் ஸுஜூது அதாவது சிரம்தாழ்த்தி வணங்கிவிட்டதை ‘குறைஷிகள் முஸ்லிமாகிவிட்டனர்’ என்று நம்பி ஹபஷாவிற்குச் சென்ற முஸ்லிம்கள் சிலர் மக்காவிற்குத் திரும்பினர். ஆனால் அவர்களோ முஸ்லிமாகவில்லை அந்த நொடிக்கு மட்டுமே மனம் மாறியிருந்தார்கள், அதனால் திரும்பி வந்த முஸ்லிம்கள் கடுமையாக வேதனைக்குள்ளாக்கப்பட்டார்கள். முஸ்லிம்களை மீண்டும் ஹபஷாவிற்குச் சென்றுவிடும்படி நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

முஸ்லிம்கள் நிம்மதியாக இருந்த ஹபஷாவிற்கு, குறைஷிகள் இருவரை அனுப்பி அந்த நாட்டின் மன்னரான நஜ்ஜாஷியையும் அவர்களது மத குருக்களையும் சந்தித்துப் பேசி முஸ்லிம்களைத் திரும்ப அனுப்பி வைக்கும்படி கேட்டனர். அன்பளிப்பாகக் கொடுப்பதற்கு வெகுமதிகளையும் எடுத்துச் சென்றனர்.

கிருஸ்தவ மதத்தைப் பின்பற்றிய நஜ்ஜாஷியிடம் குறைஷிகள் “உங்களது மார்க்கத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் உங்களுக்கும் எங்களுக்கும் தெரியாத ஒரு புதிய மார்க்கத்தைப் பின்பற்றுகின்றனர். இவர்களை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்” என்று கேட்டனர்.

மறுதரப்பை விசாரித்தார் நஜ்ஜாஷி, பதில் தந்தார் ஜாஃபர் “அரசே, வழி தவறி மானக்கேடான காரியங்களில் ஈடுபட்ட எங்களை நேர்வழிப்படுத்த அல்லாஹ் எங்களுக்கு இறைத்தூதரை அனுப்பினான். அவர் மூலம் உண்மையைத் தெரிந்து கொண்டோம். இப்போது நாங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குகிறோம், எங்களது மூதாதையர்கள் வணங்கி வந்த கற்சிலைகளை நாங்கள் விலக்கிவிட்டோம்.

மானக்கேடானவைகள், பொய் பேசுதல், அனாதையின் சொத்தை அபகரித்தல், பத்தினியான பெண்கள்மீது அவதூறு சுமத்துதல் போன்றவற்றிலிருந்து எங்களைத் தடுத்தார் அத்தூதர். மேலும் உறவினர்களோடு சேர்ந்து வாழவேண்டும்; அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும்; அல்லாஹ் தடைசெய்தவற்றையும் கொலைக் குற்றங்களையும் விட்டு விலகிவிடவேண்டும் என்றும் கட்டளையிட்டார்” என்று சொன்னபோது அதற்கு நஜ்ஜாஷி அல்லாஹ்விடமிருந்து அத்தாட்சியாக உங்களிடம் என்ன இருக்கிறது என்று கேட்டார்.

ஜாஃபர் (ரலி) திருக்குர்ஆனின் ‘மர்யம்’ அத்தியாயத்தின் முற்பகுதியின் வசனங்களை ஓதிக் காண்பித்தார். அதைக் கேட்டு நஜ்ஜாஷி அவரது தாடி நனையும் அளவு அழுதார். அவையில் உள்ளவர்களும் அழுதனர். “இதுவும் நபி ஈஸா (அலை) கொண்டு வந்த மார்க்கமும் ஒரே இடத்திலிருந்து வெளியானதுதான்” என்று சொல்லிவிட்டு, முஸ்லிம்களை நாடுகடத்த வந்த அந்த இரு குறைஷிகளையும்  நோக்கி “நீங்கள் செல்லலாம்! நான் இவர்களை ஒப்படைக்கமாட்டேன்” என்று கூறிவிட்டு, முஸ்லிம்களை நோக்கி “எனது பூமியில் நீங்கள் முழுப் பாதுகாப்புடன் இருக்கலாம். மலையளவு தங்கத்தைத் தந்தாலும் உங்களைத் துன்புறுத்த நான் அனுமதிக்கமாட்டேன்” என்று கூறினார். தனது அவையில் உள்ளவர்களிடம் “அவ்விருவர்கள் கொண்டு வந்த அன்பளிப்புகளை அவர்களிடமே திரும்பக் கொடுத்து விடுங்கள். எனக்கு அதில் எவ்வித தேவையும் இல்லை” என்று கூறி அந்த இருவரையும் வெளியேற்றினார்.

(ஆதாரம்: திருக்குர்ஆன் 41:26, சீறா இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்)

- ஜெஸிலா பானு.

Similar News