ஆன்மிகம்

இஸ்லாத்தை முதன் முதலில் ஏற்றுக் கொண்ட அன்னை கதீஜா(ரலி)

Published On 2016-10-11 05:54 GMT   |   Update On 2016-10-11 05:54 GMT
இப்ராஹீம் (அலை) அவர்களின் மறைவுக்குப்பின், அவர்களது வழிகாட்டுதலைப் பின்பற்றி அல்லாஹ்வை மட்டுமே வணங்கி வந்த மக்கள், காலங்கள் செல்லச் செல்ல அந்தப் போதனைகளை மறக்க ஆரம்பித்தனர்.
இப்ராஹீம் (அலை) அவர்களின் மறைவுக்குப்பின், அவர்களது வழிகாட்டுதலைப் பின்பற்றி அல்லாஹ்வை மட்டுமே வணங்கி வந்த மக்கள், காலங்கள் செல்லச் செல்ல அந்தப் போதனைகளை மறக்க ஆரம்பித்தனர். வானவர்களையும், அற்புதங்களை வெளிப்படுத்திய நபிமார்களையும், அல்லாஹ்வைப் பின்பற்றிய நல்லடியார்களையும் இறைவனுக்கு நெருக்கமானவர்களாக மக்கள் நம்பினார்கள்.

இறைவனுக்கு நெருக்கமான சான்றோர்களை, மக்கள் தங்களது வேண்டுதல்கள் விரைவில் நிறைவேற தங்களுக்கான சிபாரிசுகளாக்கிக் கொண்டனர். அச்சான்றோர்களின் நினைவாக அவர்களின் உருவத்தை வரைந்தும், சிலைகள் செய்தும் வைத்துக் கொண்டனர். அப்படியே அவர்கள் மதிக்கும் தமது முன்னோர்களுக்கும் உருவங்கள் செய்து அவர்களின் நினைவாக வைத்துக் கொண்டனர்.

நாளடைவில் வழிபாட்டிற்குரியவன் ஒருவன் என்பதை மறந்து அச்சிலைகளை வணங்கத் தொடங்கிவிட்டனர். சிலர் தமது முன்னோர்கள் புதைக்கப்பட்ட அடக்கத்தலங்களுக்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டு இறந்தவர்களைத் தரிசிக்கத் தொடங்கினர். இன்னும் சிலர் அத்தலங்களைப் புனிதமானதாகக் கருதி காணிக்கையும் செலுத்தி வந்தனர். காலம் செல்லச் செல்ல காரணமே இல்லாமல் விதவிதமான சிலைகளை, தங்களது கற்பனைக்கேற்றவாறு உருவாக்கி வழிப்படத் தொடங்கி இருந்தனர்.

இப்படியான தருணத்தில், முஹம்மது (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த நபித்துவத்தைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்தால் மக்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அத்தோடு மக்கள் பல காலமாக நம்பி வந்த கொள்கைகளையும் வழிமுறைகளையும் தமக்காக மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்றும் மூடப்பழக்கவழக்கத்தைக் கைவிடமாட்டார்கள் என்றும் முஹம்மது (ஸல்) தெரிந்து வைத்திருந்தார்கள். அத்தோடு நபி அவர்களது உறவினர் வரகா சொன்ன எதிர்வினைகளையும் விளைவுகளையும் புரிந்தவர்களாகத் தமது இறை அழைப்பு பணியைத் தனது வீட்டில் இருந்து தொடங்க எண்ணினார்கள் முஹம்மது நபி (ஸல்).

தம்மை முழுமையாக நம்பிய தமது துணைவியார் கதீஜா (ரலி) அவர்களுக்கு ஏகத்துவத்தை முஹம்மது நபி (ஸல்) எடுத்துரைத்தார்கள். கதீஜா (ரலி) இஸ்லாமை முழு மனதாக ஏற்றார்கள். அதன் பிறகு நபி முஹம்மது (ஸல்) தமது நெருங்கிய குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடம் இஸ்லாமை அறிமுகப்படுத்தினார்கள். நபிகளாரின் தந்தையின் சகோதரனின் மகன் அலி (ரலி), உற்ற நண்பர் அபூ பக்ர் (ரலி), நபிகளாரின் அடிமை ஸைது (ரலி) ஆகியோர் இரகசிய அழைப்பின்போதே இஸ்லாமை உடன் ஏற்றவர்கள்.

(ஆதாரம்: சீறா இப்னு ஹிஷாம்)

-ஜெஸிலா பானு.

Similar News