ஆன்மிகம்

இறை வேதம் அருளப்பட்ட ஆரம்ப நிமிடங்கள்

Published On 2016-10-04 08:30 GMT   |   Update On 2016-10-05 05:08 GMT
சினைமுட்டையில் இருந்துதான் உயிர் உண்டாகுகிறது என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுவிட்டது.
ஒரு ரமதான் மாதத்தில் மக்காவிலிருந்து சிறிது தொலைவிலுள்ள நூர் மலையில் ஹிரா குகையில் தனிமையில் நபி முஹம்மது (ஸல்) இப்பிரபஞ்சத்தை ஆளும் சக்தியைப் பற்றிச் சிந்திந்தவர்களாக  இவ்வுலகத்தை இயக்கும் மறைபொருளை குறித்த தேடலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்கள்.

அப்போது வானவர் ஜிப்ரீல், முஹம்மது (ஸல்) அவர்கள் முன் தோன்றி அவர்களிடம் “ஓதுவீராக” என்றார்கள்.

அதற்கு நபி முஹம்மது (ஸல்) “எனக்கு ஓதத் தெரியாது” என்றார்கள். உடனே முஹம்மது (ஸல்) அவர்களைச் சிரமப்படும் வகையில் வானவர் இறுகக் கட்டிப்பிடித்து, விட்டுவிட்டு “இப்போது ஓதுவீராக” என்றார்கள்.

ஓத முயன்ற நபி முஹம்மது (ஸல்), தமக்கு ஓதத் தெரியவில்லை என்று வானவரிடம் தெளிவுப்படுத்தினார்கள். ஜிப்ரீல் (அலை) மீண்டும் இன்னும் இறுகக் கட்டியணைத்துவிட்டு “ஓதுவீராக” என்றார்கள்.

நபி (ஸல்) அவர்களோ “நான் ஓதத் தெரிந்தவனில்லை” என்றார்கள். வானவர் ஜிப்ரீல் (அலை), நபி முஹம்மது (ஸல்) அவர்களை மூன்றாவது முறையாக இறுகக் கட்டியணைத்துவிட்டு, “நபியே, எல்லாவற்றையும் படைத்த இறைவனின் திருப்பெயரால் ஓதுங்கள். அவனே மனிதனைக் கருவிலிருந்து படைக்கின்றான். நீங்கள் ஓதுங்கள். இறைவன் மாபெரும் கொடையாளி” என்று சொல்லி திருக்குர்ஆனின் ‘சூரத்துல் அலக்’ என்ற வசனங்களை ஓதிக் காட்டினார்கள். ‘அலக்’ என்றால் கருவுற்ற சினைமுட்டை என்று பொருள். சினைமுட்டையில் இருந்து தான் உயிர் உண்டாகிறது என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுவிட்டது.

நபி முஹம்மது (ஸல்) அவர்களால் ஓத முடிந்தது. தம்மால் ஓத முடிந்ததை அவர்களுக்கே நம்ப முடியாமல் இருந்தது. அவர்கள் பயந்து குகையைவிட்டு வெளியேறி வீட்டுக்குச் சென்றார்கள்.

திருக்குர்ஆன் 96:1-6

- ஜெஸிலா பானு.

Similar News