ஆன்மிகம்

வெட்கமது கைவிடேல்

Published On 2016-09-23 08:23 GMT   |   Update On 2016-09-23 08:23 GMT
நபிகளார் நவின்றார்கள்: ‘வெட்கம் அது எப்போதுமே நன்மையைத்தான் கொண்டு வரும்’ (நூல்: புஹாரி). இந்த நபிமொழி என்றும் நம்நினைவில் இருக்க வேண்டிய ஒரு பொன்மொழி.
‘ஹயா’ என்ற அரபுச்சொல்லிற்கு ‘வெட்கம்’ என்பது பொருளாகும். ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு பாலைவன நகரத்தில் வெட்கம் குறித்து நபிகளார் பேசியிருக்கிறார்கள் என்றால் அது எவ்வளவு முக்கியத்துவத்திற்குரியது. இன்றைக்கும் நம் தேசம் இந்த வெட்கப்பண்புக்காகத் தானே விடியவிடிய போராடிக் கொண்டிருக்கிறது.

நபிகளார் நவின்றார்கள்: ‘ஒவ்வொரு மார்க்கத்திற்கும் தனியே ஒரு சிறப்பு குணமுண்டு. இஸ்லாமிய மார்க்கத்தின் சிறப்பு குணம் வெட்கம் ஆகும்’. (நூல்: இப்னுமாஜா, தப்ரானி)

இந்நபிமொழி கூறுவதை நன்கு கவனித்துப் பாருங்கள். ‘வெட்கம்’ என்பது ஒற்றைச்சொல் தான் என்றாலும் ஆழ்ந்த அர்த்தமுள்ளது. இஸ்லாம் சொல்லும் அந்த சிறப்பு குணம் இன்று நம்மிடையே இருக்கிறதா? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

வெட்கம் அது என்னவிலை.? என்று கேட்கும் காலமிது. எத்திசை நோக்கினும் ஆபாசமே வெட்கப்பட்டு போகும் அளவுக்கு தீஞ்செயல்கள் தலைவிரித்தாடுகின்றன. அந்நிய ஆண்களும், அந்நியப் பெண்களும் பொதுஜன நடைமுறைகளை மீறுவதும், அதன் வரைமுறைகளை தம் கண்ணுக்கு முன்னேயே விட்டுவிட்டுச் செல்வதும் முற்றிலும் வேதனைக்குரியது.

பொது வெளியில் அரங்கேறும் அரைகுறை ஆடைக்காட்சிகளும், அதீத ஆபாச கொஞ்சல்களும் ஒரு சாமானியனின் மனதை வெகுசுலபமாக சஞ்சலத்தில் ஆழ்த்தி விடுகிறது. ‘என்னுடல் என்னுரிமை, என்னுடை என்னுரிமை’ என்று சொல்வதெல்லாம் ஒரு ஆரோக்கியமான சமூகத்திற்கு நல்லதல்ல.

முன்னர் வாழ்ந்து சென்ற இறைத் தூதர்கள் அனைவரும் தம் மக்களுக்கு முதன்முதலாகச் சொன்ன செய்தியே ‘நீ வெட்கப்படாவிட்டால், நீ எதையும் செய்து கொள்’ என்பது தான். (நூல்: புஹாரி, அஹ்மது)

எனவே வெட்கம் என்பது இன்றோ, நேற்றோ தோன்றிய ஒரு குணமல்ல. தொன்றுதொட்டு பண்படுத்தப்பட்டு வாழையடி வாழையாக வந்த ஒரு நற்குணம் அது. அதை நாம் விடாபிடியாய் பிடித்துக் கொள்ளவேண்டும்.

வெட்கம் ஒருவனிடம் இல்லாமல் போய்விட்டால் அவனது வாழ்வு உண்மையிலேயே பரிதாபத்திற்குரியது தான். அதனால் தான் ‘அவன் விரும்பியதை செய்து கொள்ளட்டும்’ என முன்னர் சென்ற இறைத்தூதர்கள் சொல்லிச் சென்றிருக்கின்றனர்.

இம்மொழியில் பல்வேறு படிப்பினைகள் இருக்கின்றன. அவற்றை நாம் சற்றும் கண்டு கொள்ளாமலேயே பல வேளைகளில் படுவேகமாகச் சென்றுவிடுகிறோம். இது நல்ல பழக்கமல்ல.

நபிகளார் நவின்றார்கள்: ‘வெட்கம் அது எப்போதுமே நன்மையைத்தான் கொண்டு வரும்’ (நூல்: புஹாரி).

இந்த நபிமொழி என்றும் நம்நினைவில் இருக்க வேண்டிய ஒரு பொன்மொழி. சிறுவெட்கம் கூட நமக்கு சிறியதொரு நன்மையை தந்துவிட்டுச் செல்லக் கூடும்.

சாதாரணமாக முன்பெல்லாம் பெரியோர்கள் முன்னிலையில் கால்மேல்கால் போட்டு அமர்வது, கால் நீட்டி அமர்வது, மரியாதை இல்லாமல் பேசுவது, ஒழுக்கமில்லாமல் நடந்து கொள்வது என்பதெல்லாம் அறவே நடைபெறாத ஒன்றாக இருந்தது. ஆனால் அவை எல்லாம் இன்றைக்கு எங்கேபோய் ஒளிந்து கொண்டன?

இதற்கெல்லாம் மூலகாரணம் அந்த வெட்கமின்மை தான். அது இருந்தால் அவனிடம் தீய சொற்கள், தீய செயல்கள், தீய பழக்க வழக்கங்கள், தீய எண்ணங்கள் என எதுவுமே வெளிப்படாது.

வெட்கம் இல்லாததால் தான் மனிதன் மனம் போன போக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். இந்நிலை நீடிப்பது இனியும் நமக்கு நல்லதுதானா? யோசிக்க வேண்டிய ஒன்று.

வெட்கம் அது பெண்களுக்கு மட்டும் சொந்தமான குலச்சொத்தல்ல. ஆண்களுக்கும் அதில் பங்குண்டு. ‘ஒரு கன்னிப்பெண் வெட்கப்படுவது போல் நபிகளாரின் வெட்கம் இருந்தது’ என நபித்தோழர்கள் வியந்து கூறியிருப்பது நாம் நன்கு கவனிக்க வேண்டிய ஒன்று.

அதாவது வெட்கம் என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல, உள்ளம் சார்ந்ததும் கூட. அப்போதுதான் அல்லாஹ்வுக்கு, அவனது தூதருக்கு நாம் சிறு மாறு செய்ய முற்படும் போது அவனது வெட்க உணர்வு அவனை தடுத்து நிறுத்தி ‘நீ பாவம் செய்யாதே. இதோ இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான், கொஞ்சமாவது நீ வெட்கப்படு’ என்று வெட்க மனம் அவனோடு ஆத்மார்த்தமாக பேசும்.

நமது மனம் சர்வ சாதாரணமான ஒன்றல்ல, சிறுவயதில் நம் மனதில் எதை விதைக்கிறோமோ அதைத் தான் அது நமது பெருவயதில் திருப்பித்தரும் என்பது அனைவரும் அறிந்த பேருண்மை.

“ஈமான் எனும் இறைநம்பிக்கையின் 77 கிளைகளில் மிக உயர்ந்தது ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ எனும் திருச்சொற்றொடர் ஆகும், அதில் மிகத்தாழ்ந்தது ‘வீதிகளில் கிடக்கும் நோவினைப் பொருட்களை அகற்றுவதாகும். வெட்கமும் அந்தக் கிளைகளுள் ஒன்று”, என்று நபிகளார் வெகுஅழகாக இறைநம்பிக்கையின் வெவ்வேறு வடிவங்களைக் கற்றுத்தந்தார்கள்.

அவற்றுள் இந்த வெட்கத்தை மட்டும் தனியாக குறிப்பிட்டுச் சொல்லியிருப்பது மிகுந்த கவனத்திற்குரியது; கடைப்பிடிக்கப்படவேண்டியது.

மனமது செம்மையானால் வாழ்வது செம்மையாகும் என்பது எவருக்கும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

வாருங்கள் வாழ்ந்து பார்ப்போம், நாணத்துடனும், நாணயத்துடனும்!

மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு. 

Similar News