ஆன்மிகம்

பெரியபட்டிணத்தில் மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா

Published On 2016-09-22 05:06 GMT   |   Update On 2016-09-22 05:06 GMT
பெரியபட்டினத்தில் மகான்செய்யது அலி ஒலியுல்லா தர்காவின் மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் உள்ள மகான் செய்யதுஅலி ஒலியுல்லா தர்காவின் 115–ம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கடந்த 9–ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பெரியபட்டினம் ஜலால்ஜமால் பள்ளிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ரதம் ஊர்வலமாக புறப்பட்டு தர்காவை வந்தடைந்தது.

இதில் மாவட்டம் முழுவதும் இருந்து அனைத்து சமுதாய பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்ற முக்கிய வீதிகளில் ஏராளமான திருவிழா கடைகள், உணவகங்கள், குழந்தைகள் விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்கள், கலைநிகழ்ச்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. விழாவையொட்டி இசைக்கச்சேரியும், கிராமிய நகைச்சுவை தெம்மாங்கு பாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவிற்கான ஏற்பாடுகளை விழாகமிட்டியினர் மற்றும் சுல்த்தானியா சங்கத்தின் சார்பில் செய்யது இப்ராம்சா தலைமையில் இணை தலைவர்கள் சிராஜ்தீன், சாகுல்ஹமீது, செயலாளர் அபிபுல்லா, அமைப்பாளர் தி.மு.க. ஊராட்சி செயலாளர் அப்துல்மஜீது, தொழிலதிபர் சிங்கம்பசீர், தி.மு.க. துணை செயலாளர் எம்.எஸ்.இஸ்மாயில், பெரியபட்டினம் ஊராட்சி தலைவர் கபீர், என்ஜினீயர் அக்கர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

வருகிற 30–ந் தேதி கொடி இறக்கத்துடன் சந்தனக்கூடு திருவிழா நிறைவடைகிறது. விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் இருந்து பெரியபட்டிணத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Similar News