ஆன்மிகம்

முகம்மது நபி (ஸல்) அவர்களின் முன்னோர்கள்

Published On 2016-09-16 04:15 GMT   |   Update On 2016-09-16 04:15 GMT
அப்துல் முத்தலிபின் மகன்களில் ஒருவரான அப்துல்லாஹ்வின் மகனாக நபி முஹம்மது (ஸல்) அவர்களை மனிதகுலத்தின் விடிவெள்ளியாக இறைவன் அனுப்பி வைத்தான்.
அல்லாஹ்வின் கட்டளையின்படி இப்ராஹீம் (அலை) அவர்களும் இஸ்மாயீல் (அலை) அவர்களும் இணைந்து இறை இல்லத்தைக் கட்டினார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஜுர்ஹும் கோத்திரத்தாரிடம் அரபி மொழியைக் கற்றார்கள். ஜுர்ஹும் கோத்திரத்தார் தங்கள் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை இஸ்மாயீலுக்கு மணமுடித்து வைத்தார்கள். அவர்களுக்கு, பன்னிரெண்டு ஆண் மகன்கள் பிறந்தனர். நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் மகன்களில் ஒருவரான கைதாரின் சந்ததியில் வந்தவர்கள் அத்னானிய அரபியர்கள். நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வம்ச தலைமுறையில் அத்னான் என்பவர் இருபத்தியோராவது தலைமுறை பாட்டனாராவார். 

இஸ்மாயீல் (அலை) அவர்கள் வாழ்ந்த காலம் வரை மக்கா நகரத்தின் தலைவராக இருந்து கஅபாவை நிர்வகித்து வந்தார்கள். அவருடைய மரணத்திற்குப் பிறகு, இஸ்மாயீல் (அலை) அவர்களின் மகன்கள் நிர்வகித்து வந்தாலும், இஸ்மாயீல் (அலை) அவர்களின் மனைவியின் தந்தை அதாவது ஜுர்ஹும் கோத்திரத்தினர் தலைமை வகித்தனர். 

நபி ஈஸா (அலை), நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் இளைய சகோதரன் இஸ்ஹாக் (அலை) அவர்களின் வழியில் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றியவர். அப்படிப் பார்த்தால் அதுவரை ஜுர்ஹும் கோத்திரத்தினர் கிட்டத்தட்ட இரண்டாயிரத்து நூறு ஆண்டுகள் மக்காவில் இறை இல்லத்தை, தமது ஆதிக்கத்தில் வைத்திருந்தனர். ஜுர்ஹும் கோத்திரத்தினரின் நிலைமை மக்காவில் பொருளாதாரத்தில் மோசமடைந்ததால் கஅபாவை வழிபட வந்தவர்களிடம் வழிப்பறிச் செய்ய ஆரம்பித்தனர். இச்செயல் அத்னானியர்களுக்கு மிகுந்த வெறுப்பை உண்டாக்கியதால் அவர்கள் மீது போர் தொடுத்து அவர்களை மக்காவிலிருந்தே வெளியேற்றினர். மீண்டும் மக்காவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 

ஜுர்ஹும் கோத்திரத்தினர் யமன் நாட்டுக்குக் குடிபெயர்ந்தனர். அவர்கள் போகும் முன்பு ஸம்ஸம் கிணற்றில் தங்க மான் சிலைகளையும், அஸ்வத் கல்லையும் போட்டு அது இருந்த இடம் தெரியாமல் மூடிவிட்டனர். 

அத்னான் குடும்பத்தில் வந்த மஅதின் மகன் நஜார் என்பவரின் மகன்களான ரபீஆ மற்றும் முழர் மூலமாகப் பல குடும்பங்களும் கோத்திரங்களும் கிளைகளாக விரிந்தன. அதில் கினான குடும்பத்தில் குறைஷியர்களில் ஹாஷிம் குடும்பத்தை இறைவன் தேர்வு செய்தான். ஹாஷிமின் மகன் தான் அப்துல் முத்தலிப், கொடுங்கோல் ஆட்சியாளர் அப்ரஹா யானைப் படையுடன் வந்தபோது சலனமில்லாமல் இறைவனிடம் பிரார்த்தித்தவர். இறைவன் கஅபாவைக் காத்து அப்ரஹாவை அழித்தான். 

ஹுபுல் சிலையை இறைவனாக வணங்கி வந்த அப்துல் முத்தலிப்தான் மக்காவின் தலைவர்களில் ஒருவராக இருந்தார். அவருக்கு பத்து மகன்களும் ஆறு மகள்களும் இருந்தனர். 

அப்துல் முத்தலிபின் மகன்களில் ஒருவரான அப்துல்லாஹ்வின் மகனாக நபி முஹம்மது (ஸல்) அவர்களை மனிதகுலத்தின் விடிவெள்ளியாக இறைவன் அனுப்பி வைத்தான்.

(ஆதாரம்: சீறா இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்)

- ஜெஸிலா பானு.

Similar News