ஆன்மிகம்

ஈஸா(அலை) கொலை செய்யப்படவில்லை

Published On 2016-09-07 06:01 GMT   |   Update On 2016-09-07 06:01 GMT
உண்மையில் ஈஸா (அலை) அவர்களை அவர்கள் கொல்லவுமில்லை, சிலுவையில் அறையவுமில்லை.
மர்யம் (அலை) அவர்களின் மகன் ஈஸா (அலை) அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களைக் கண்டு நம்பிக்கைக் கொண்டவர்கள் சிலரும், நிராகரித்தோர் பலரும் இருந்தனர்.

ஈஸா (அலை) அவர்கள் இறைவன் ஒருவனே, அவனையே வணங்குங்கள், அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள் என்று போதித்தபோது, தவறானவரின் மகன் என்றும், தன் தந்தை யாரென்று அறியாதவர் செய்யும் போதனைகளை ஏற்க முடியாதென்றும் யூதர்கள் அவதூறு கூறினர். தவ்ராத்தை சரிவரப் பின்பற்றாத பனீ இஸ்ராயிலர்களோ, இன்ஜீல் பற்றி ஈஸா (அலை) எடுத்துரைப்பதன் மூலம் அவர்கள் பின்பற்றிய தவ்ராத்தை பின்பற்றவிடாமல் தடுத்து வழிகொடுக்கிறார் என்று புரளியைக் கிளப்பினர். இத்தகைய நிராகரிப்பாளர்கள் மிகவும் கர்வம் கொண்டவர்களாக, போதனைகளைப் புறக்கணித்ததோடு, ஈஸா (அலை) அவர்களை, பொய்யர், சூனியக்காரர் என்று கேலி செய்து கொலை செய்யவும் திட்டம் தீட்டினர்.

ஈஸா (அலை) அவர்களை ஏற்றுக் கொண்டதாகப் பொய் சொன்ன யஹூதாவை, பனீ இஸ்ராயீலர்கள் அழைத்து, அவர்களது கொலை திட்டத்தில் சேர்த்துக் கொண்டனர். ஈஸா (அலை) அவர்களின் நடவடிக்கை பற்றி பனீ இஸ்ராயீலர்களுக்குத் தகவல் கொடுத்துக் கொண்டு இருந்தார் யஹூதா.

ஈஸா (அலை) அவர்களைச் சூழ்ந்து கொண்டு சிறைப் பிடிப்பதென்று தீர்மானித்து, யஹூதாவை முன் சென்று ஈஸா (அலை) அவர்கள் இருந்த அறையில் இருக்கிறார்களா என்று பார்க்க அனுப்பினார்கள். அந்த நொடியில் அல்லாஹ் பெருங்கருணை கொண்டு ஈஸா (அலை) அவர்களை வானத்தில் உயர்த்திக் கொண்டான். தீங்கிழைக்க நினைப்பவர்களிடமிருந்து தமது நபியை காப்பாற்றினான்.

ஈஸா (அலை) அவர்களைக் காட்டிக் கொடுக்க வந்த யஹூதாவின் முகத்தோற்றத்தை அல்லாஹ் ஈஸா (அலை) அவர்களின் தோற்றத்திற்கு ஒப்பாக மாற்றிவிட்டான். அதை உணர்ந்த யஹூதா என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து நின்றபோது அந்த அறையில் நுழைந்த பனீ இஸ்ரேயிலர்கள் ஈஸா (அலை) அவர்களின் சாயலில் இருக்கும் யஹூதாவை ஈஸா (அலை) என்று நம்பி சிறைப்பிடித்தனர். அவனை இழுத்துச் சென்று இழிவுப்படுத்தினர். மேலும் அவரைச் சிலுவையில் அறைந்து கொலையும் செய்தனர்.

உண்மையில் ஈஸா (அலை) அவர்களை அவர்கள் கொல்லவுமில்லை, சிலுவையில் அறையவுமில்லை. அல்லாஹ் ஈஸா (அலை) அவர்களை வானத்திற்கு உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வல்லமை மிக்கவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கின்றான்.

திருக்குர்ஆன் 3:54-55, 4:156-158

- ஜெஸிலா பானு.

Similar News