ஆன்மிகம்

ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடந்தது

Published On 2016-08-29 08:07 IST   |   Update On 2016-08-29 08:07:00 IST
ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நேற்று அதிகாலை வரை நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ளது, முஸ்லிம்களின் புண்ணியதலமான ஏர்வாடி தர்கா. இங்கு புகழ்வாய்ந்த சந்தனக்கூடு திருவிழா நேற்றுமுன்தினம் நள்ளிரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை நடைபெற்றது. விழாவையொட்டி முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர் கொண்டு வந்த தண்ணீரால் தர்கா முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. சந்தனக்கூட்டின் அடித்தளத்தை ஆசாரி சமூகத்தினர் செய்து கொடுத்தனர். அடிக்கூடு, நடுக்கூடு, மேல்கூடு ஆகியவற்றை யாதவர்களும், ஆதிதிராவிடர்களும் அலங்கரித்தனர்.

அதைத்தொடர்ந்து தீப்பந்தங்களுக்காக சலவை தொழிலாளர்கள் கொண்டு வந்த துணிகளில் ஆதிதிராவிடர்கள் வழங்கிய நேர்ச்சை எண்ணெய் ஊற்றி சந்தனக் கூடுக்கு வழிகாட்டியாக தீப்பந்தம் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு அழகுபடுத்தப்பட்ட சந்தனக்கூடு நேற்று முன்தினம் இரவு ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் குடியிருக்கும் தைக்கா பகுதியில் இருந்து யானை, குதிரைகளில் இளம்பச்சை கொடிகள் ஏந்தி வர தர்காவை நோக்கி புறப்பட்டது.

ஊர்வலத்தில் மேளதாளம் முழங்க அனைத்து மத பக்தர்களின் ஆட்டம், பாட்டத்துடன் சந்தனக்கூடு வந்தது. மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த சந்தனக்கூடு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து தர்காவை வந்தடைந்தது. தொடர்ந்து வெள்ளிப்பேழையில் வைத்து எடுத்து வரப்பட்ட புனித சந்தனம் மகானின் சமாதியில் பூசப்பட்டது.

Similar News