ஆன்மிகம்

இறைவழியில் கொலை செய்யப்பட்ட யஹ்யா (அலை)

Published On 2016-08-23 08:55 IST   |   Update On 2016-08-23 08:55:00 IST
‘யஹ்யா’ என்றால் வாழ்பவர் என்று பொருள். யஹ்யா (அலை) இறைவழியில் கொல்லப்பட்டிருந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்தார்கள். அவருடைய உபதேசங்களை மதிக்காதவர்கள் மடிந்து அழிந்தனர்.
நபி ஜக்கரிய்யா (அலை) அவர்களுக்கு மகன் பிறக்கிறான். இறைவனின் கட்டளையின் படி அந்தக் குழந்தைக்கு யஹ்யா என்று பெயர் வைத்தார்கள்.

யஹ்யாவை நல்லமுறையில் வளர்க்கிறார் ஜக்கரிய்யா (அலை). மக்களுக்குப் போதனை செய்வதையும் நல்லுபதேசம் செய்வதையும் யஹ்யா (அலை) பார்த்தே வளர்ந்தார்கள். மர்யம் (அலை) அவர்களின் நற்செயல்களையும், அவர்கள் பள்ளியில் தங்கியிருந்து ஆற்றும் பணிகளையும் பார்த்து வளரும் யஹ்யா (அலை) அவர்கள் மற்ற குழந்தைகளைப் போல் விளையாடுவது, மிருகங்களைச் சீண்டுவது என்றில்லாமல் ஆழ்ந்து 'தவ்ராத்' வேதத்தைப் படித்துக் கற்றார்கள்.

மிகவும் இரக்க சிந்தனை கொண்ட யஹ்யா (அலை) தம் உணவை பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் தந்துவிட்டு இலை தழைகளைச் சாப்பிட்டு வாழ்ந்தார்கள். வாலிப வயதில் இயல்பாகப் பெண்கள் மீதிருக்கும் ஈர்ப்பைத் தவிர்த்து பரிசுத்த தன்மையை அடைந்தார்கள். தம்மைக் காத்துக் கொள்ள மிகவும் பயபக்தியுடையவராக இறைச்சிந்தனை மட்டும் உள்ளவராகத் திகழ்ந்தார்கள். கண்ணியமானவராக அவரது பெற்றோருக்கு நன்றி செலுத்துபவராக இருந்தார்கள். அவர் பெருமை அடிப்பவராகவோ, அல்லாஹ்வுக்கு மாறு செய்பவராகவோ இருக்கவில்லை.

அல்லாஹ்வின் அருளின்படி யஹ்யா (அலை) அவர்களும் நபித்துவத்தைப் பெற்றார். தந்தை மகன் இருவரும் நபியாக எந்நேரமும் இறைவனுக்கு நன்றி செலுத்துபவராகவும், மக்களுக்கு நல்லுபதேசம் செய்பவராகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். காலையிலும் மாலையிலும் தொழுது அல்லாஹ்வை ஆசையோடு வணங்கி, உள்ளச்சம் கொண்டவர்களாக பாவ மன்னிப்பு கோரி அழுபவராக இருந்ததோடு, பனீ இஸ்ராயீலர்களை நல்வழிப்படுத்த முற்பட்டார்கள்.

இறைவழியில் கொல்லப்பட்டார் ஜக்கரிய்யா (அலை). ஆனாலும் யஹ்யா (அலை) அவருடைய உபதேசங்களை நிறுத்தவில்லை. ஏக இறைவனை மட்டும் வணங்கும்படியும் அவனுக்கு இணை வைக்காமல் இருப்பது குறித்தும் போதித்தார். “இறைவன் எல்லாவித பாவங்களையும் மன்னித்தாலும் மன்னிப்பான் ஆனால் இணை வைத்தலை மன்னிக்கவே மாட்டான்” என்று சொன்னதோடு தொழுகை, நோன்பு, தர்மம் பற்றியெல்லாம் போதித்து அல்லாஹ்வை எந்நேரமும் நினைக்கும்படியும், புகழும்படியும், நன்றி செலுத்தும்படியும் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

அவர் வாழ்ந்த இடத்தின் மன்னர், அவருடைய சகோதரனின் மகளை விரும்பி மண முடிக்க இருந்தார். ஆனால் தவ்ராத்தின்படி, இறைவனின் கட்டளையின்படி தமது சகோதரனின் மகளைத் திருமணம் செய்து கொள்வது தவறான உறவுமுறையென்று யஹ்யா (அலை) செய்த பிரச்சாரம் மன்னரையும் அவர் மணம் முடிக்க விரும்பிய பெண்ணையும் எட்டியது. அப்பெண் தன்னுடைய இச்சைக்கு மன்னரை உற்படுத்தி யஹ்யா (அலை) அவர்களின் தலையை வேண்டுகிறாள். மன்னரும் தான் அடையவேண்டிய பெண்ணின் வாக்குக்கிணங்க யஹ்யா (அலை) அவர்களின் தலையை வெட்டி பாவத்தில் மூழ்கிவிடுகின்றனர்.

‘யஹ்யா’ என்றால் வாழ்பவர் என்று பொருள். யஹ்யா (அலை) இறைவழியில் கொல்லப்பட்டிருந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்தார்கள். அவருடைய உபதேசங்களை மதிக்காதவர்கள் மடிந்து அழிந்தனர்.

அவர் பிறந்த நாளிலும், அவர் இறந்த நாளிலும், மறுமையில் அவர் உயிர் பெற்றெழும் நாளிலும் அவர் மீது ஸலாம் (சாந்தி) நிலைத்திருக்கும்.

“எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும் நீதமின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டும் மனிதர்களிடத்தில் நியாயமாக நடக்கவேண்டும் என்று ஏவுவோரையும் கொலை செய்து கொண்டும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு. அவர்கள் புரிந்த செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் பயனற்றவையாக அழிந்துவிடும். அவர்களுக்கு உதவியாளர்கள் எவருமில்லை”

திருக்குர்ஆன் 21:90, 19:7-15, 3:21-22

- ஜெஸிலா பானு.

Similar News