ஆன்மிகம்
துளசி பூஜை

துன்பங்களைப் போக்கும் துளசி

Published On 2020-06-18 07:57 GMT   |   Update On 2020-06-18 07:57 GMT
மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி வீற்றிருக்கும் துளசியை வழிபட்டால், அதிர்ஷ்டத்திற்கும், ஐஸ்வரியத்திற்கும் பஞ்சம் இருக்காது என்பதே பலரின் கூற்றாக இருக்கிறது.
பெருமாளுக்குரிய வழிபாட்டில் துளசிக்கு முக்கியமான இடம் உண்டு. துளசியானது, பூமாதேவியின் அம்சமாகவே போற்றப்படுகிறது. அதனால்தான் அதை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள், அதை ஒரு செடியாகப் பார்க்காமல், அதை ஒரு பெண்ணாக பாவித்து, அதை வலம் வந்து தங்களது குறைகளை நிறைவேற்றும்படி வழிபடுகிறார்கள். துளசிச் செடியை சுற்றி வந்து வழிபடுபவர்களுக்கு, பூமாதேவியின் அம்சமாக கருதப்படும் பொறுமை, வளமை மற்றும் துன்பங்களை தாங்கும் சக்தி போன்றவை கிடைக்கும் என்பது ஐதீகம்.

‘துளசி’ என்பதற்கு ‘ஒப்பில்லாதவள்’ என்று பொருள். ஒரு காலத்தில் தேவர்களும், அசுரர்களும் ஒன்றிணைந்து பாற்கடலைக் கடைந்தனர். அப்போது அதற்குள் இருந்து கற்பகத்தரு, ஐராவதம், சந்திரன், காமதேனு, மகாலட்சுமி ஆகியன வெளிப்பட்டன. இதனைக் கண்டதும், பெருமாளின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. அதில் ஒரு துளி நீர், கடலுக்குள் விழுந்தது. பின்னர் கடலுக்குள் இருந்து பச்சை நிறத்துடன் துளசி தேவியின் உருவம் வெளிப்பட்டது.

பாற்கடலில் இருந்து கிடைத்தவற்றில் கவுஸ்துபமணி, மகாலட்சுமி, துளசி ஆகியவற்றை விஷ்ணு வைத்துக் கொண்டார். மற்றவற்றை தேவர்களுக்கு வழங்கினார். துளசி இலையில் முப்பத்து முக்கோடி தேவர்கள், 12 சூரியர்கள், அஷ்ட வசுக்கள், இரண்டு அஸ்வினி தேவர்கள் வசிப்பதாக ஐதீகம். துளசி இலையின் நுனிப் பகுதியில் பிரம்மதேவனும், மத்தியப் பகுதியில் மகாவிஷ்ணுவும் இருப்பதாக சொல்கிறார்கள். மேலும் மகாலட்சுமி, காயத்ரிதேவி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரும் கூட துளசியில் வாசம் செய்கிறார்களாம்.

துளசியானவள், எப்போதும் தனது நாயகனான மகாவிஷ்ணுவை துதித்துக் கொண்டிருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. அவளது இன்னொரு வடிவமே, பூமியில் வளரும் துளசிச் செடி என்றும் கூறப்படுகிறது. துளசிக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்து பெயர்களுமே, விஷ்ணுவோடு தொடர்புடையவையாகவே இருப்பது, அவர்களுக்கான நெருக்கமான தொடர்வை புலப்படுத்துவதாக இருக் கின்றன.

துளசிக்கு, ‘ஹரிபிரியா’ என்ற நாமமும் உண்டு. இதற்கு ‘விஷ்ணுவின் மனதிற்கு இனியவள்’ என்று பொருள். அதேபோல் ‘வைஷ்ணவி’ என்றும் துளசி போற்றப்படுகிறாள். இந்த பெயருக்கு ‘விஷ்ணுவை சொத்தாக கொண்டவள்’ என்பது பொருளாகும். பொதுவாக ஆலயங்களில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்யப்படும்போது, ‘விஷ்ணுவல்லப’ என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இந்த விஷ்ணுவல்லப என்பதும் துளசியையே குறிக்கும். இதற்கு ‘விஷ்ணுவுக்கு பிரியமானவள்’ என்று அர்த்தம்.

ஸ்ரீ துளசி என்பது, துளசியை மரியாதையாக அழைக்கும் பெயராகும். இந்தப் பெயரில் ‘ஸ்ரீ’ என்பது திருமகளான மகாலட்சுமியைக் குறிப்பதாகும். அதனால்தான் பசுமையான இலைகளைக் கொண்ட துளசியை வழிபடுபவர்களுக்கு அதிர்ஷ்டம் வந்துசேரும் என்கிறார்கள். மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி வீற்றிருக்கும் துளசியை வழிபட்டால், அதிர்ஷ்டத்திற்கும், ஐஸ்வரியத்திற்கும் பஞ்சம் இருக்காது என்பதே பலரின் கூற்றாக இருக்கிறது.

துளசிக்கு, ‘பிருந்தா’ என்ற பெயரும் உண்டு. துளசி அடர்த்தியாக வளர்ந்திருக்கிற இடம் ‘பிருந்தாவனம்’ என்று அழைக்கப்படும். கிருஷ்ணர் விளையாடிய பிருந்தாவனம் புனிதத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

பசுமையான பச்சை நிறத்தில் இருப்பது ‘ராம துளசி’ என்றும், கரும்பச்சையாக இருப்பது ‘கிருஷ்ண துளசி’ என்றும் அழைக்கப்படுகிறது. துளசிக்கு இணையான தாவரமோ, மூலிகைகளோ வேறு எதுவும் இல்லை என்பார்கள். ஏனெனில் ‘துளசி’ என்ற சொல்லுக்கு ‘தன்னிகரற்றது’ என்ற பொருளும் உண்டு. துளசியில் நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி எனப்படும் கஞ்சாங்கோரை, திருத்துழாய் ஆகிய வகைகள் இருக்கின்றன.

வடமொழியில் துளசிக்கு பலவிதமான பெயர்கள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் காரண காரியங்களின் அடிப்படையில் அமைந்தவையாக இருக்கிறது. துளசியில் சாறு நிரம்பி இருப்பதால், ‘சரசா’ என்று பெயர். எல்லா இடங்களிலும் எளிதாக கிடைப்பதால் ‘சுலபா’ என்று பெயர். அருகருகே பூக்களைக் கொண்டு பூங்கொத்து போல காட்சி தருவதால், ‘பகுமஞ்சரி’ என்று பெயர். ‘மஞ்சரி’ என்றால் தமிழில் ‘பூங்கொத்து’ என்று அர்த்தம். அதிகமான இதழ்களைக் கொண்டிருப்பதால், ‘பகுபத்ரி’ என்றும், வயிற்றுவலியைத் தீர்த்து வைப்பதால் ‘சூலாக்கினி’ என்றும், கிருமிகளைக் கொன்று துன்பத்தை நீக்குவதால் ‘அபேராசி’ என்றும், துளசிச் செடி வளரும் அடி மண் புனிதமானது என்பதால் ‘பவானி’ என்றும் பல பெயர்களில் துளசி போற்றப்படுகிறாள்.
Tags:    

Similar News