ஆன்மிகம்
அனுமன்

நினைத்த காரியம் கைகூட வழிபாடு

Published On 2020-01-20 06:06 GMT   |   Update On 2020-01-20 06:06 GMT
ஆஞ்சநேயரை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும். குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயருக்கு எந்த வழிபாடு என்ன பலனைத்தரும் என்று பார்க்கலாம்.
ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும். குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடை மாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி ஆராதிக்க வேண்டும்.

வெற்றிலை மாலை


அசோக வனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டிருந்த போது, அவரைத் தேடிப் போன அனுமன், சிம்சுகா மரத்தடியில் வீற்றிருந்த சீதையைக் கண்டார். ஸ்ரீராமரின் பெயரைச் சொல்லி, சீதையின் நம்பிக்கைக்கு பாத்திரமானார். பொதுவாக யாரேனும் பெரியவர்களை நாம் நமஸ்கரித்தால், அவர்கள் நம்மை அட்சதை தூவி ஆசீர்வதிப்பது வழக்கம். அனுமன் சேவித்தபோது சீதைக்கு அட்சதையோ, புஷ்பமோ கிடைக்கவில்லை. அதனால் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியில் இருந்து இலைகளை பறித்து, அதனை அனுமனின் தலை மீது வைத்து ‘சிரஞ்சீவி’யாக இருக்கும்படி ஆசீர்வாதம் அளித்தார். அதன் காரணமாகவே, அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுகிறது.

வெண்ணெய் சாத்துதல்

ராம - ராவண யுத்தம் நடந்தபோது, ராமரையும் லட்சுமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார் அனுமன். அப்போது ராவணன் சரமாரியாய் அம்பு தொடுக்க, அந்த சக்திமிக்க அம்பால் அனுமன் தாக்கப்பட்டார். அந்த காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக்கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது. அந்த வெண்ணெய் உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தும் பழக்கம் உள்ளது.

செந்தூரம்

ராம - ராவண யுத்தம் முடிந்த பிறகு, சீதையை பார்த்து செய்தியை கூற அனுமன் சென்றார். அப்போது சீதை நெற்றி வகிட்டில் செந்தூரம் அணிந்து இருந்ததைப் பார்த்து இது குறித்து சீதையிடம் கேட்டார் அனுமன். ராவணனுடன் யுத்தம் செய்ய செல்லும் போது, ராமருக்கு வெற்றி கிடைக்க வேண்டி செந்தூரம் அணிந்ததாக சீதை கூறினார். நெற்றியில் சிறிதளவு இட்டதற்கே இத்தனை பெரிய வெற்றி ராமனுக்கு கிடைத்ததென்றால், அதை உடல் முழுவதும் பூசிக்கொண்டால், எவ்வளவு வெற்றிகளை ராமன் பெறுவார் என்று எண்ணிய அனுமன், செந்தூரத்தை தன் உடல் முழுவதும் பூசிக்கொண்டார். அதனால்தான் அனுமனுக்கு செந்தூரம் சாத்தப்படுகிறது. அவரது சன்னிதியில் செந்தூரம் பிரசாதமாக தருகிறார்கள்.

வடை மாலை

நமது உடல் தசையால் ஆனது. தசை வளர்ச்சிக்கு உளுந்து முக்கிய காரணமாகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் இட்லி, தோசை, உளுந்து வடை சாப்பிட்டால் தசைப்பிடிப்பு ஏற்படும். ஆனால், சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமா? எனவே, பயனற்ற இந்த உடலை உனக்கே அர்ப்பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின் அடிப்படையிலேயே உளுந்து வடை மாலை அணிவிக்கிறோம். அனுமனுடைய தாய் அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடை செய்து கொடுத்ததாக ஐதீகம்.
Tags:    

Similar News