ஆன்மிகம்
பித்ரு தோஷம்

ஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது?

Published On 2019-10-02 07:27 GMT   |   Update On 2019-10-02 07:27 GMT
ஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றியும், உரிய பரிகாரங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
அமாவாசை அன்று, ஆறு, குளம், கடல் என்று புனித நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். இப்படி நம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபடாவிட்டால், நமக்கு பித்ரு தோஷம் ஏற்பட்டு, நம் வாழ்க்கையிலும் சரி, நம் சந்ததியினரின் வாழ்க்கையிலும் சரி பல வகையான பிரச்னைகள் தோன்றி வேதனைப்படுத்தும். எனவே, அமாவாசை அன்று முன்னோர்களை வழிபடுவது மிகவும் உத்தமம். அதனால் முன்னோர்களின் ஆசிகள் நமக்குக் கிடைக்கும். முன்னோர் வழிபாடு முறைப்படி செய்யாதவர்களுக்கு பித்ரு தோஷம் ஏற்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றியும், உரிய பரிகாரங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

”இந்த உலகத்தில் நாம் வந்து பிறந்து இந்த வாழ்க்கையை அனுபவிப்பதற்கு முதற் காரணம் நம்மைப் பெற்றவர்கள்தான் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த உண்மை. நம்மை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கிய அவர்களுக்கு அவர்கள் உயிரோடு இருக்கும்போதே நாம் செய்ய வேண்டிய கடமைகள் ஏராளமாக இருந்தாலும், அவற்றில் சிறிதளவாவது அவர்கள் மனம் குளிரும்படி செய்திருக்கிறோமா என்று எண்ணிப் பார்க்கவேண்டும். அதில் நாம் ஏதாவது குறையோ அல்லது தவறோ செய்து, அதற்குள் அவர்கள் அமரராகி விட்டால், அவர்களுக்கு நாம் செய்யவேண்டிய ‘பித்ரு கடன்’களை வருடா வருடம் நாம் தவறாமல் செய்யவேண்டியது நமது தலையாய கடமையாகும்.

அதாவது நமக்கு 365 நாள்கள் என்பது நமது பித்ருக்களுக்கு ஒரு நாளாகும். எனவே, அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் நாம் உணவளிக்க வேண்டும். அதாவது நமது கணக்குப்படி வருடத்துக்கு ஒரு முறை அவர்களுக்குச் செய்யவேண்டிய பித்ரு கர்மாக்களை அவர்கள் இறந்த திதியில் ஒரு புரோகிதரை அழைத்து முறைப்படி செய்து நம் முன்னோர்களுக்கு பிண்டம் (உணவு) அளிக்கவேண்டும்.

அப்படி நாம் செய்யத் தவறிவிட்டால், நம் பித்ருக்களின் மனம் வருத்தம் அடையும். அந்த வருத்தமே நமக்கு பித்ரு தோஷத்தை ஏற்படுத்துகிறது. பித்ரு தோஷம் நமக்கு மட்டுமல்லாமல், நம் சந்ததியினருக்கும் ஏற்பட்டுவிடுகிறது. நமக்குப் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகம் மூலமாக பித்ரு தோஷம் இருப்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

இதை நாம் கவனிக்காமல் இருந்து விட்டோம் என்றால் நாம் நம் வாழ்க்கையில் அநேக துன்பங்களை சந்திக்க நேரிடும். அது தொடர்கதையாக நம் வாழ்க்கையிலும் நம் குழந்தைகளின் வாழ்க்கையிலும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும்போதுதான் நாம் நம் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஒரு ஜோதிடரை நோக்கிப் போகிறோம். அது எந்த அமைப்பில் இருக்கும் என்பது பற்றியும் அதற்கு என்ன பரிகாரம் என்பது பற்றியும் இங்கு பார்ப்போம்.

பரிகார கோயில்கள்

* குருவானவர் ராகு, கேதுவின் நட்சத்திரத்தில் நின்றாலோ, அல்லது குருவானவர் ராகு, கேது சேர்க்கை பெற்று ராசியிலும், நவாம்சத்திலும் இருந்தால் தோஷம்.

* சூரியன், சந்திரன் செவ்வாயின் ராசி அல்லது செவ்வாயின் நவாம்ச வீட்டில் இருந்து அது பாதக ஸ்தானம் பெற்றால் தோஷம்.

* கடகம், சிம்மம் லக்னத்துக்கு பாதக ஸ்தானம் பெற்று, அதில் கொடிய பாவி இருந்தால் பித்ரு தோஷம் வரும்.

* சூரியன் பாதிக்கப்பட்டு கொடிய பாவியுடன் சேர்ந்தாலோ அல்லது சந்திரன் பாதிக்கப்பட்டு கொடிய பாவியுடன் சேர்ந்தாலோ பித்ரு தோஷம் தந்தை வழியிலோ, தாய் வழியிலோ ஏற்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.

* 6-ம் வீட்டுக்கு உடையவர் 9-ம் வீட்டில் இருந்தாலும் அல்லது 9-ம் வீட்டுக்கு உடையவர் 12 -ம் வீட்டில் இருந்தாலும் தந்தையும் அவரது முன்னோர்களும் மகிழ்ச்சியாக இல்லை என்பதால் பித்ரு தோஷம் ஏற்பட்டிருக்கும்.

* சந்திரன் 6-ம் வீட்டில் இருந்தாலும், அல்லது 6-ம் வீட்டுடன் தொடர்பு கொண்டாலும் தாயும் அவரது முன்னோர்களும் ஜாதகரிடத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

பரிகாரம் : அனுஷம், பூசம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம் இந்த நட்சத்திரத்தில் அமாவாசை வருமானால், அன்றைய தினம் சிராத்தம் செய்தால், பித்ரு தோஷம் நீங்கும். மஹாளய பக்ஷத்தில் வரும் பரணி நட்சத்திரத்தில் திதி கொடுத்தால் மிகவும் விசேஷமாகும். ஏனென்றால் இந்த பரணி மஹா பரணி எனப்படும். அட்சய திரிதியை வரும் நாளில் பித்ருக்களுக்கு சிராத்தம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.

மேற்கூறிய நாள்களில் சிராத்தம் செய்தாலோ, அல்லது காளஹஸ்தி சென்று அங்கு ‘பித்ரு பூஜை’ செய்தாலோ பித்ரு தோஷம் நிவர்த்தி ஆகி சகல செளபாக்யங்களும் வந்து சேரும்”.
Tags:    

Similar News