ஆன்மிகம்
பித்ரு தோஷம் போக்கும் மகாளய அமாவாசை

பித்ரு தோஷம் போக்கும் மகாளய அமாவாசை

Published On 2019-09-14 08:11 GMT   |   Update On 2019-09-14 08:11 GMT
இந்த மாத இறுதியில் செப்டம்பர் 28-ந்தேதி, அதாவது புரட்டாசி 11-ந்தேதி மகாளயபட்ச அமாவாசை வருகிறது. அந்த நாள் பித்ருக்களுக்கு மிகவும் உகந்த நாளாகும்.
பித்ரு தோஷத்துக்கான பரிகாரத்துக்கு உகந்த மகாளயபட்ச அமாவாசை நெருங்கும் நேரத்தில் சரியாக நாம் அதை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். இந்த மாத இறுதியில் செப்டம்பர் 28ந்தேதி, அதாவது புரட்டாசி 11ந்தேதி மகாளயபட்ச அமாவாசை வருகிறது. அந்த நாள் பித்ருக்களுக்கு மிகவும் உகந்த நாளாகும்.

புரட்டாசி

ஆன்மீகத்தில் புரட்டாசி மாதமே பக்திக்கான மாதம் ஆகும். புரட்டாசி மாதத்துக்கும் பகவான் விஷ்ணுவுக்கும் உள்ள தொடர்பை நான் விளக்கி சொல்லவேண்டியது இல்லை. விஷ்ணுவுக்கு மிகவும் உகந்த மாதம் இந்த புரட்டாசி ஆகும். சூரியன் கன்யா ராசியில் சஞ்சரிக்கும் புண்ணியமிகு காலமான புரட்டாசி மாதத்தில் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள காலத்துக்கு பித்ரு பட்சம், மகாளயபட்ச புண்ய காலம் என்று பெயர். அதாவது பவுர்ணமி வந்த மறுநாளில் இருந்து அமாவாசை வரையிலான இருவார காலம். இந்த தேய்பிறை நாட்கள் முழுவதுமே மாபெரும் சக்தி நிறைந்தவை.

கர்ணன்

மகாபாரதப் போரில் கர்ணன் மரணம் அடைந்த பின் வானுலகம் சென்றான். அப்போது அவனுக்கு பொன்னையும், ஆபரணங்களையும் அளித்தார்கள். கர்ணன் உண்பதற்கு உணவைக் கேட்டான். அதற்கு எமதர்மன் ‘பூலோகத்தில் இருந்த போது ஏராளமான தானங்களை அளித்த நீ உன் மூதாதையர்களுக்காக அன்னதானமோ, சிரார்த்தமோ செய்யவில்லை. அதற்கு பரிகாரமாக நீ புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு முந்தைய 15 நாட்களில் பூலோகம் சென்று முன்னோர்களுக்காக அன்னதானமும், சிராத்தமும் செய்து விட்டு வந்தால் இங்கு உனக்கு உணவு கிடைக்கும்’என்றார். கர்ணனும் அதன்படி பூலோகம் வந்து அன்னதானமும், சிரார்த்தமும் செய்தார். அந்த நாட்களே மகாளயபட்ச நாட்கள் எனவும் ஒரு புராண கதை கூறுகிறது.

21 தலைமுறை

மாதம் தோறும் வரும் அமாவாசை அன்று மறைந்த மூதாதையர்களுக்கு திதி கொடுத்தால் யாரை நினைத்து திதி கொடுக்கிறோமோ அவர்கள் மட்டும் தான் வந்து திதியை பெற்றுக் கொள்வர். ஆனால் மகாளய அமாவாசை அன்று கொடுக்கும் திதி அப்படி இல்லை. அன்று திதி கொடுத்தால் நம் மூதாதையர்கள் அனைவரும் அதாவது 21 தலைமுறையை சேர்ந்த பித்ருக்கள் ஒன்றாக வந்து திதியை பெற்றுக் கொண்டு ஆசீர்வதிப்பார்கள் என்று ஆன்மீக நூல்களில் கூறப்பட்டுள்ளது. இதனால்தான் மகாளய அமாவாசை அன்று பித்ருக்களுக்கு திதி கொடுப்பது சிறப்பாக கருதப்படுகிறது. பித்ருக்கள் இறந்த திதி தெரியாதவர்கள் கூட இந்த மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யலாம்.

காருண்ய தர்ப்பணம்

பித்ரு பூஜையை புனித நீர்நிலைகளில் செய்வது சிறப்பு. புனித நதிகள், கடற்கரை ஓரங்கள், கோவில்களில் உள்ள தீர்த்த குளங்கள் ஆகியவை இந்த பூஜைக்கு ஏற்றவையாக கருதப்படுகிறது. புனிதத்தலங்களில் உள்ள நீர் நிலைகளில் புரட்டாசி அமாவாசை அன்று வேத விற்பன்னர்கள் மூலம் தர்ப்பணம் செய்யும்போது அளிக்கப்படும் எள்ளும், தண்ணீரும், பிண்டமும் மூதாதையர்களை சென்று அடைந்துவிடும். மகாளயபட்சத்தின் 15 நாட்களில் கடைசி தினமான அமாவாசை தினத்து அன்று நாம் அளிக்கும் தர்ப்பணம் நம் முன்னோர்களுக்கு மட்டும் அல்லாது தாவரங்கள், மரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் உள்பட அனைத்து உயிரினங்களுக்கும் சென்று சேரும். இந்த தர்ப்பணம் ‘காருண்ய தர்ப்பணம்’ என்று அழைக்கப்படுகிறது.

அன்ன தானம்

மகாளயபட்ச தர்ப்பணம் செய்வதால், நமது முன்னோர்கள் ஆசியுடன் நமது வாழ்க்கையும், நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும். தர்ப்பணம் முடித்த பிறகு ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் பலன்கள் முழுமையாக கிடைக்கும். ஏழைகளுக்கு மட்டும் அல்ல பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு உணவளிப்பது நமது கடமை. அதை மகாளயபட்சத்து அன்று அளிப்பது மிகவும் சிறப்பு. எனவே மகாளய அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து முடிந்ததும் மறக்காமல் காகங்களுக்கு உணவும், பசுக்களுக்கு அகத்திக் கீரையும் அவசியம் அளிக்க வேண்டும். பகல் நேரத்தில் நமக்கு வசதியான நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் தானம் அளிக்கலாம்.

காலையில் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், புளியோதரை என்று அன்ன பிரசாதம் எதுவாக இருந்தாலும் தயார் செய்து அளிக்கலாம். நாம் எந்த அளவுக்கு ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்கிறோமோ, அந்த அளவுக்கு பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அவர்கள் மனம் குளிர்ந்து நம் சந்ததியினருக்கு ஆசிர்வாதம் அளிப்பார்கள்.

எள்ளும் தர்ப்பையும்

பித்ரு பூஜையை திருமாலே தனது ராமாவதாரம் மற்றும் கிருஷ்ணாவதார காலங்களில் செய்து தமது முன்னோர்களை வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. தர்ப்பணம் அளிக்கும் போது எள்ளும், தர்ப்பையும் அவசியம் பயன்படுத்தப்பட வேண்டும். எள் என்பது பெருமாளின் வியர்வை துளியில் இருந்து உருவான பரிசுத்தமான தானியம் ஆகும். தானம் செய்யும் போது எள்ளை தானம் செய்தால் அது அளவிட முடியாத அளவுக்கு பலன் பெற்றுத்தரும், எப்பேற்பட்ட பாவமும் நீங்கும் என்று வேதங்கள் கூறுகின்றன.

பித்ருபட்ச காலமான இரு வாரகாலமும் கூட விரதம் கடைபிடிக்கலாம். அந்த நாட்களில் சுத்தமான சைவ உணவை ஒரு பொழுது உண்ண வேண்டும். மகாளய பட்சத்தில், அனைத்து நாட்களிலும் தர்ப்பணம் செய்வது விசேஷம். இயலாதவர்கள் மகாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும், நம்பிக்கையுடனும் முன்னோர் கடனை அளிப்பது மிகுந்த பலனை தரும். இதனால் பித்ரு தோஷம் நீங்கும்.

புரட்டாசி அமாவாசை அன்று பித்ருபூஜை செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன் எமனுக்கும் மகிழ்ச்சி ஏற்படும். இறுதி காலத்தில் எம பயம் இருக்காது என்று புராணங்கள் கூறுகின்றன. ஆலயங்களுக்கு செல்ல இயலாதவர்கள், தங்கள் இல்லத்திலேயே வேதவிற்பன்னர்களை அழைத்து பித்ரு பூஜையை செய்யச் சொல்லி பலன் பெறலாம்.
 
பித்ரு தோஷ பரிகார தலங்கள்


ஸ்ரீராமன் ராவண வதம் செய்த பிறகு சிவபெருமானை நினைத்து பூஜை செய்த ராமேஸ்வரம் எனும் தலத்தில், இந்த மகாளயபட்ச அமாவாசை நாளில், தர்ப்பணங்கள் போன்ற முன்னோர் கடன்களை செய்வது, நம் வாழ்வை செழிக்க செய்யும். மேலும், மயிலாடுதுறை காவிரி படித்துறை, திருவாரூர் அருகிலுள்ள திலதர்ப்பணபுரி, திருச்சிக்கு அருகிலுள்ள முக்கொம்பு கொள்ளிடக்கரை, ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, திருநெல்வேலி அருகேயுள்ள வகுளகிரி நதிக்கரை, மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி, கன்யாகுமரி கடற்கரை, தேவிப் பட்டணம் நவபாஷாணம் உள்ள கடல்துறை, தென்காசி அருகில் உள்ள பாபநாசம் சிவாலய தீர்த்தக்கரை, குடந்தை மகாமகக் குளம், திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்தக் குளக்கரை போன்ற இடங்கள் தர்ப்பணம் அளிக்க உகந்த இடங்கள்.

மந்திரம்

தர்ப்பணம் முடிந்ததும் நிறைவாக, ‘ஏஷாம் ந மாதா ந பிதா... குசோதகை:’ என்று மந்திரம் சொல்லச் சொல்வார்கள். ‘எவரொருவருக்குத் தாயில்லையோ, தந்தையில்லையோ, பங்காளி கள் இல்லையோ, நண்பர்கள் இல்லையோ... இதுபோன்று யாருமே அற்ற அநாதை என்று சொல்லக்கூடியவர்களுக்கு, நான் அளிக்கும் இந்த எள்ளும் தண்ணீருமானது திருப்தியை அளிக்கட்டும்’ என்று, சாதி மத பேதம் அற்று உலகின் அனைத்து ஜீவராசிகளும் நன்மை அடையவேண்டும் என பிரார்த்தனை செய்ய சொல்கிறது நமது சாஸ்திரம். அவ்வாறே கடைப்பிடித்து நலம் பெறலாம்.
Tags:    

Similar News