ஆன்மிகம்
எமதர்மன், சனீஸ்வரர், அகத்தீஸ்வரர்

சகல தோஷங்களும் போக்கும் கொடியலூர் அகத்தீஸ்வரர்

Published On 2019-09-07 05:26 GMT   |   Update On 2019-09-07 05:26 GMT
திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவிலில் வழிபட்டால் கிரகங்களால் ஏற்படும் தோஷங்களும், மரண பயமும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகில் உள்ளது திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம். இக்கோவிலில் தென் புறத்தில் எமதர்மராஜனும், வடப்புறத்தில் சனி பகவானும் அமைந்திருப்பது மற்ற எந்த ஒரு கோவிலிலும் இல்லாத சிறப்பு. இருவரும் ஒருங்கே அவதரித்த தலம் என்பதால், இருவரையும் ஒரே இடத்தில் காண்பது கிடைப்பதற்கரிய காட்சி. இரு சகோதரர்களும் ஒருங்கே நின்று வருகின்ற பக்தர்களுக்கு வேண்டிய வரத்தினையும், கிரகங்களால் ஏற்படும் தோஷங்களையும், மரண பயத்தையும் நீக்கி அருள்கிறார்கள்.

இந்தக் கோவிலில் வியாழக்கிழமை தோறும் எமதர்மனுக்கும், சனிக்கிழமை தோறும் சனீஸ்வரருக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இங்குள்ள எமதர்மன், சனீஸ்வரன், பைரவர் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், இழந்த பொருட்களையும், இன்பத்தையும் திரும்ப பெறலாம் என்பது நம்பிக்கை.

ஏழரைச் சனியின் பாதிப்பால் ஏற்படும் சகல தடைகளையும் இத்தலம் களைகிறது. எனவே இங்கு வந்து இறைவனுக்கும், இறைவிக்கும் அபிஷேகம், ஆராதனை செய்தால் அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். இத்தல இறைவனை வேண்டி உஷாதேவியும் சாயாதேவியும் புத்திரபேறு பெற்ற காரணத்தால், இத்தலம் குழந்தைப்பேறு வழங்கும் சிறப்பு தலமாகவும் கருதப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு வந்து எள்ளு தீபம், நல்லெண்ணெய் விளக்கேற்றினால் அனைத்து தோஷங்களும் அகலும். 
Tags:    

Similar News