ஆன்மிகம்
மயிலாப்பூர் கோலவிழி அம்மன்

திருமண தடை, தோஷம் போக்கும் அம்மன்

Published On 2019-08-05 04:36 GMT   |   Update On 2019-08-05 04:36 GMT
மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவிலில் 7 முறை பிரதட்சிணம் செய்து அர்ச்சனை செய்தால் திருமணத் தடைகளும், தோஷங்களும் நீங்குவதாக பக்தர்கள் சொல்கிறார்கள்.
மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவில், கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு இணையான தொன்மைச் சிறப்பு வாய்ந்தது.

கோலவிழியம்மன் ஆலயத்தில் திரிசூலம் இரண்டு, பலி பீடம் இரண்டு, கருவறையில் தேவியின் திருவுருவம் இரண்டு என எல்லாமே இரண்டிரண்டாகவே உள்ளன. இதனால் தன்னை நாடி வரும் பக்தர்களின் கோரிக்கைகளை இரட்டிப்பாகவே நிறைவேற்றித் தருகிறாள் இந்த அன்னை.

கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தில்  சப்த மாதர்கள் அருள்கின்றனர். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் ராகுகால நேரங்களில் மஞ்சள் நூலில் விராலி மஞ்சளைக் கோர்த்து, கோலவிழி அம்மனின் திருவடியில் வைக்கிறார்கள். பின் அந்த விராலி மஞ்சள் மாலையை சப்தமாதர்களில் ஒருவளாக அருளும் வாராகிக்கு அணிவித்து அந்த வாராகியை 7 முறை பிரதட்சிணம் செய்து அர்ச்சனை செய்தால் திருமணத் தடைகளும், தோஷங்களும் நீங்குவதாக பக்தர்கள் சொல்கிறார்கள்.

தேவியின் வாகனமான சிங்கத்தின் முன் தேங்காயை உடைத்து நல்லெண்ணெய், இலுப்ப எண்ணெய், நெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய 5 எண்ணெய்களைக் கலந்து அந்த உடைத்த தேங்காய் மூடிகளில் ஊற்றி திரிபோட்டு விளக்கேற்றி, வாழை இலையில் அரிசியை பரப்பி அதன்மேல் அந்த விளக்கை வைத்து ஆல யத்தை வலம் வந்தால் எண்ணியதெல்லாம் கை கூடும்.

இந்த அம்மனை வழிபட்டால் எவ்வளவு கொடூரமான ராகு தோஷமும் உடனே விலகி விடும். சிலர் 27 வாரம் பிரதட்சணம் செய்வதுண்டு. 9 வாரம் பிரதட்சணம் செய்தால் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். சந்திராஷ்டமம் நேரத்தில் ஏதாவது சொன்னாலோ, பேசினாலோ இடையூறு, பிரச்சினை ஏற்படும் என்று சொல்வார்கள். எனவே சந்திராஷ்டமம் உள்ள நாட்களில் உரியவர்கள் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டு சென்றால் சந்திராஷ்டமம் தாக்குதலால் எந்த பிரச்சினையும் வராது என்கிறார்கள்.
Tags:    

Similar News