ஆன்மிகம்
காவல் தெய்வம்

நாளை சந்திர கிரகணம்- தோஷம் வராமல் தடுக்கும் வழிமுறை

Published On 2019-07-16 06:11 GMT   |   Update On 2019-07-16 06:11 GMT
இந்த ஆண்டுக்கான சந்திர கிரகணம் 17.7.2019 (ஆனி 31-ந் தேதி) புதன்கிழமை அதிகாலை 1.31 மணி முதல் 4.30 மணி வரை உத்திராடம் நட்சத்திரத்தில் நிகழ்கிறது. கிரகண தோஷம் வராமல் இருக்க, கடைப்பிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.
நவக்கிரகங்கள் ஒன்பதும் ‘நவ நாயகர்கள்’ எனப்படுவர். மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகள், பன்னிரண்டு. இதில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்கும் சொந்த வீடு உண்டு. ராகு- கேதுக்கள் நிழல் கிரகம் என்பதால், அவர்களுக்கு சொந்த வீடு கிடையாது.

விண்வெளியில் சூரியனுடைய சுழற்சிப் பாதையும், சந்திரனுடைய சுழற்சிப் பாதையும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் சந்திக்கும். அப்படி வடதிசையில் ஏற்படும் சந்திப்பை ராகுவாகவும், அதே நேரத்தில் அதற்கு நேர் எதிரில் 180-வது டிகிரியில் சம சப்தமமாக ஏற்படும் தென்திசைச் சந்திப்பை கேதுவாகவும் குறிப்பிடுவார்கள். அதனால்தான் அவை நிழல் கிரகங்கள் என்று சொல்லப்படுகிறது.

சூரியனும், சந்திரனும் பன்னிரு ராசிகளை வலமாகச் சுற்றி வரும்போது, ராகு- கேது இடமாகச் சுற்றி வரும். அப்போது சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் ஒரே டிகிரியில் சந்திக்கும் போது அமாவாசை. அந்த நேரத்தில் அவர்களோடு ராகு சேரும்போது, அதற்கு ஏழாவது ராசியில் 180 டிகிரியில் கேது வரும்போது ‘சூரிய கிரகணம்’ ஏற்படும்.

அதேபோல் பவுர்ணமியன்று சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் எதிரில் 180-வது டிகிரியில் வரும்போது, சூரியனுடன் ராகுவும் சந்திரனுடன் கேதுவும் அதே டிகிரியில் சேரும்போது ‘சந்திர கிரகணம்’ ஏற்படும். அதாவது சூரியன், சந்திரன், பூமி, ராகு, கேது ஆகிய ஐந்தும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் போது கிரகணம் உண்டாகிறது.

ஒவ்வொரு வருடமும் பூமியில், சூரிய கிரகணம் 2, சந்திர கிரகணம் 2 என 4 கிரகணங்கள் சம்பவிக்கும். சில நேரங்களில் 3 கிரகணங்கள் கூட ஏற்படும். நடப்பு விகாரி வருடத்தில் 2 சூரிய கிரகணமும், ஒரு சந்திர கிரகணமும் நடக்கிறது. இதில் ஒரு சூரிய கிரகணம் கடந்த 2-ந் தேதி நடை பெற்றது. அடுத்த சூரிய கிரகணம் 26.12.2019 (மார்கழி 10-ந் தேதி) வியாழக்கிழமை காலை 8 மணி முதல் பகல் 1.35 மணி வரை மூல நட்சத்திரத்தில் நிகழ்கிறது.

இந்த ஆண்டுக்கான சந்திர கிரகணம் 17.7.2019 (ஆனி 31-ந் தேதி) புதன்கிழமை அதிகாலை 1.31 மணி முதல் 4.30 மணி வரை உத்திராடம் நட்சத்திரத்தில் நிகழ்கிறது. சந்திர கிரகணம் என்பது சந்திரன், பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது விழுவதை மறைத்து விடுவதால் ஏற்படுவதாகும். சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் ‘பூரண சந்திர கிர கணம்’ என்றும், அரைகுறையாக ஏற்பட்டால் ‘பார்ச்சுவ (பகுதி) சந்திர கிரகணம்’ என்றும் சொல்வார்கள்.

கிரகணம் நிகழும் போது சூரிய- சந்திரர்கள் ராகுவின் பிடியில் இருந்தால் ‘ராகு கிரகஸ்தம்’ என்றும், கேதுவின் பிடியில் இருந்தால் ‘கேது கிரகஸ்தம்’ என்றும் அழைக்கப்படும். வருகிற 17-ந் தேதி ஏற்படஉள்ள சந்திர கிரகணம், கேது கிரகஸ்தம் ஆகும். இந்த சந்திர கிரகணம் தோராயமாக 3 மணி நேரம் சம்பவிக்க உள்ளது.

விண்வெளியில் உள்ள அனைத்து கோள்களும் சூரியனின் ஒளியை பெற்று இயங்குவதால், சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் அகச் சிவப்பு கதிர்களே பூமிக்கு பரிபூரண இயக்கத்தை தருகிறது. இந்த சூரிய ஒளியை நிழல் கிரகங்களான ராகு - கேதுக்கள் மறைக்கும் போது, பூமிக்கு கிடைக்கும் ஒளி சக்தி திறன் குறைகிறது. அதனால் கிரகண காலத்திற்கு முன், பின் 7 நாட்கள் பூமிக்கு தோஷ காலமாகும். அப்படிப்பட்ட இந்த நேரத்தில் ஏற்படும் இயற்கையின் சக்தியை, அற் புதங்களை அளவிட முடியாது.



மனிதனை இல்லற வாழ்விற்கு அழைத்து துன்பத்தை வழங்குபவர் ராகு பகவான். அதே நேரம் துன்பத்தில் இருந்து விடுபடும் ஞானத்தினை அள்ளி வழங்குபவர் கேது பகவான் ஆவார். தவறான எண்ணங்களை, தர்மம் இல்லாத தீங்கான செயல்களை செய்தால், ராகு- கேது ஜாதகத்தில் தோஷமாக அமர்ந்து மன வேதனையை தருகிறது. நேர்மை, நாணயத்துடன் இருப்பவர்களுக்கு யோகம் தரும் இடத்தில் அமர்ந்து சுப பலன்களை வாரி வழங்குவார்கள்.

ஆத்மகாரகன் சூரிய பகவானுடன் ராகு சேரும்போது, ஆன்மிகத்தன்மை அற்றவராகவும், சூரியனால் கிடைக்கக் கூடிய அரசாங்க யோகம், தந்தையின் ஆதரவின்மை, பூர் வீகத்தை விட்டு வெளியேறும் நிலை, முன்னேற்றமின்மை போன்றவற்றை ஏற்படுத்தும். ‘சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்’ என்ற பழ மொழிக்கு ஏற்ப, ராகு-கேதுவால் ஏற்பட்ட பிரச்சினைக்கு, அவர்களை கிரகண நேரங்களில் வழிபட்டால் நற் பலன் மிகுதியாகும்.

நியாயமான, நீண்ட நாட்களாக நிறைவேறாத கோரிக்கை இருப்பவர்கள், ஜனன கால ஜாதகத்தில் கிரகண தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கிரகண நேரத்தில் கடலில் நீராடி தியானம், ஜெபம் செய்தால் ஆன்ம பலம் கிடைக்கும். ஆன்மா சுத்தி அடையும் போது, அடைய முடியாத வெற்றியே கிடையாது.

தீராத கடன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், கிரகணம் விடும் நேரத்தில் தங்களால் முடிந்த கடன் தொகையை செலுத்தினால், வாட்டி வதைத்த கடன் பிரச்சினைகள் விரைவில் தீரும். 17-ந் தேதி ஏற்படும் சந்திர கிரகணம் நிறைவும் நேரம் காலை 4 மணியில் இருந்து 4.30 மணிக்குள். அன்றைய தினம் ஆடி மாதம் பிறப்பதற்கு முன், அதிகாலை 4 மணிக்குள் சந்திர கிரகண தர்ப்பணம் செய்ய வேண்டும். பொழுது விடிந்ததும் காலை 6 மணிக்கு மேல் சூரிய உதயத்தின் போது, தட்சிணாயன புண்ணியகால தர்ப்பணம் செய்ய வேண்டும்.

16-ந் தேதி (இன்று) செவ்வாய்க் கிழமை பகல் 3 மணிக்கு மேல் உணவு அருந்தக்கூடாது. தர்ப்பை இட்ட நீரே அருந்த வேண்டும். கர்ப்பிணி பெண்கள் வெளியே செல்லக்கூடாது. உயிர் காக்க தேவையான நிலையில் அறுவை சிகிச்சை செய்யலாம். மற்றவர்கள் ஒரு நாள் கழித்து அறுவை சிகிச்சை செய்யலாம். வெளியூர் பயணம் தவிர்ப்பது நல்லது. கிரகணம் நடந்து கொண்டிருக்கும் போது, காயத்ரி மந்திரம், ராம நாம பாராயணம், திருக்கோளாற்று பதிகம் படிக்கலாம். பூராடம், உத்திராடம், திருவோணம், கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி செய்துகொள்வது சிறப்பு. கிரகணம் முடிந்த பிறகு நீராடிவிட்டு, அருகிலுள்ள கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து புதியதாக சமைத்த உணவை உண்ணலாம்.

தோஷம் வராமல் தடுக்கும் வழிமுறை

ஒருவருக்கு கிரகண தோஷம் வராமல் இருக்க, கடைப்பிடிக்க வேண்டிய எளிய வழி முறைகள். குலதெய்வம் மற்றும் ஊரின் எல்லை, காவல் தெய்வ வழிபாட்டை முறையாக செய்ய வேண்டும். வட்டித் தொழில் செய்பவர்கள், இயலாதவரை துன்புறுத்தக்கூடாது. முன்னோர்களுக்கு முறையான திதி தர்ப்பணம் செய்ய வேண்டும். முன்னோர்களின் சொத்துக்களையோ, அவர்கள் வாழ்ந்த வீடுகளையோ நியாயமில்லாத காரணத்திற்கு விற்கவோ, அழிக்கவோ கூடாது. பொய் சாட்சி சொல்லக் கூடாது. குருவிக் கூடு, பாம்புப் புற்று இருந்தால், அவை யாருக்கும் தொந்தரவாக இல்லாத பட்சத்தில் அதை இடிக்கக் கூடாது. நிழல் தரும் மரங்களை வெட்டக்கூடாது. அரசுக்கு சொந்தமான இடத்தை, கோவில் சொத்துகளைத் தந்திரமாக கையகப்படுத்தக் கூடாது. புனித தீர்த்தங்களை, நீர்நிலைகளை மாசுபடுத்தக் கூடாது.

பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
Tags:    

Similar News