ஆன்மிகம்
சித்ரகுப்தர்

கேது தோஷத்தை நிவர்த்தி செய்யும் சித்ரகுப்தர்

Published On 2019-07-05 01:38 GMT   |   Update On 2019-07-05 01:38 GMT
காஞ்சிபுரத்தில் உள்ள சித்ரகுப்தர் கோவிலில் கேது தோஷத்திற்கு சிறப்பு பரிகாரம் செய்யப்படுகிறது. இந்த பரிகாரத்தை செய்தால் கேது தோஷம் நிவர்த்தியாகும் என்பது நிச்சயம்.
பார்வதி தேவி ஒருதடவை விளையாட்டாக ஓவியம் ஒன்று வரைந்தாள். அது மிகவும் அழகாக இருந்தது. உடனே பார்வதிதேவியின் தோழியர்கள் இதற்கு உயிர் கொடுங்கள் என்று வேண்டினர். அன்னை உமையாளும் தான் வரைந்த சித்திரத்திற்கு உயிர் ஊட்டினாள்.

அது அழகான இளைஞனாக மாறியது. சித்திரத்தில் இருந்து வந்ததால் சித்ரா குப்தன் என்று பெயர் சூட்டினாள். பின் உலகைக் காக்கும் பரம்பொருளான சிவபெருமானிடம் சித்ரகுப்தனை அழைத்துச் சென்ற பார்வதிதேவி, நடந்தவற்றை விளக்கி சித்ரகுப்பனுக்கு ஏதாவது ஒரு பொறுப்பைக் கொடுக்க வேண்டும் என்று வேண்டினாள்.

அந்தச் சமயத்தில் மரணத்திற்குப் பிறகு உயிர்களின் பாவ புண்ணிய கணக்கை ஆராய்ந்து சொல்ல, தனக்கு உதவியாக ஒருவர் வேண்டும் என்று எமலோகத்தின் அதிபதியான எமதர்ம ராஜன் இறைவனிடம் வேண்டினான். உடனே இறைவனும் சித்ரா குப்தனை எமனின் உதவியாளனாக உயிர்களின் பாவ புண்ணிய கணக்கை எழுதும் பொறுப்பை ஒப்படைத்தார்.

காஞ்சீபுரம் பஸ் நிலையத்துக்கு மேற்கில் உள்ள நெல்லுக்காரன் தெரு, இரட்டை மண்டபத்திற்கு வடக்கில் சித்ரகுப்தர் கோவில் உள்ளது. சூரிய பகவானுக்கும், நிலா தேவிக்கும் தோன்றியவர் சித்ர குப்தர். சென்னி சோழர் என்ற மன்னரின் அமைச்சர் திருகணக்காரயன் அவர்களால் அமைக்கப்பட்டது இத்திருக்கோவில்.

இங்கு உள்ள மூலவர் எழுத்தாணியை வலது கையில் ஏந்தியும், இடது கையில் பனைஓலை ஏட்டையும் ஏந்தியும் உள்ளார். சித்ரா பவுர்ணமி இத்தலத்தில் மிகவும் விசேஷம் ஆகும். இந்தச் சித்ரகுப்தரைப் பரிகார வழிபாடு செய்யக் காலை 9 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் சிறந்த நேரமாகும். இந்த நேரத்தில் அர்ச்சனை செய்வது மிகுந்த நன்மை தரும்.

இங்கு உள்ள சித்ரகுப்தருக்கு கேது தோஷ நிவர்த்தியாகச் செய்யப்படும் பரிகார விவரம்:

1. கருப்பு நிறமான உடைக்கப்படாத முழு உளுந்து -200 கிராம். 2. கொள்ளு-200 கிராம். 3. பல வர்ணங்களுடன் கூடிய சீட்டித்துணி 1 மீட்டர் மேற்கண்டவற்றுடன் அர்ச்சனை பொருள்களையும் சேர்த்து இறைவனுக்குச் சஹஸ்ர நாம அர்ச்சனை செய்து, அதன்பிறகு அந்தச் சீட்டித் துணியைச் சித்திரகுப்தர் உடுத்தும் ஆடையாகக் கொடுத்து விட வேண்டும். பிறகு அர்ச்சனை செய்யப்பட்ட அந்த உளுந்தையும், கொள்ளையும் கொண்டு வந்து தண்ணீரில் ஊற வைத்து, பால் கறக்கக்கூடிய பசுவுக்கு உண்ணக்கொடுத்து விட வேண்டும்.

இந்த பரிகாரத்தை செய்வதால் கேது தோஷம் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
Tags:    

Similar News