ஆன்மிகம்

அனைத்து தோஷங்களையும் போக்கும் வானமுட்டி பெருமாள்

Published On 2019-06-14 05:50 GMT   |   Update On 2019-06-14 05:50 GMT
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோழிகுத்தி என்ற இடத்தில் உள்ள வானமுட்டி பெருமாளை வேண்டினால், பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், சனி தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும் என்கிறார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோழிகுத்தி என்ற இடத்தில் வானமுட்டி பெருமாள் ஆலயம் இருக்கிறது. 1200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், இந்து அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கருவறையில் 14 அடி உயரத்தில் வானமுட்டி பெருமாளின் தோற்றத்தைக் கண்டு நாம் சிலிர்க்காமல் இருக்க முடியாது. பெருமாளின் வலது மார்பில் தாயார் தயாலட்சுமி உள்ளார். இடதுபுறம் பூமாதேவியின் சிலை வடிவம் உள்ளது. மிகப் பெரிய அத்திமரமே பெருமாளாக மாறி இருப்பதால், மரத்தின் வேரே திருவடிகளை தாங்கி நிற்கும் அதிசயத்தை உலகில் வேறு எங்கும் நாம் காண இயலாது.

மூலவர் அத்தி மரத்தால் ஆனவர் என்பதால், அவருக்கு எந்தவித அபிஷேகமும் கிடையாது. வெறும் சாம்பிராணி காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. இந்தப் பெருமாளை வேண்டினால், பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், சனி தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும் என்கிறார்கள்.

இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது கோழிகுத்தி கிராமம். மயிலாடுதுறையில் இருந்து செல்ல மினி பஸ், ஆட்டோ வசதி உள்ளது.
Tags:    

Similar News