ஆன்மிகம்

ராகு - கேது பகவானுக்குரிய தோஷ பரிகாரங்கள்

Published On 2019-02-28 05:31 GMT   |   Update On 2019-02-28 05:31 GMT
ராகு கேது தோஷம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
ராகு காலத்தில் துர்கா வழிபாடு செய்வது ராகு ஸ்தோத்திரத்தை தினசரி பாராயணம் செய்வது மிகவும் உத்தமமாக கருதப்படுகிறது. ராகு காலத்தில் பாம்புப் புற்றிக்கு முட்டை, பால் வைத்து வழிபாடு செய்வது நற்பலன்களை உண்டாக்கும்.

கோமேதகக் கல் வைத்த மோதிரம் அணியலாம். இதனால் ராகுவினால் உண்டாகும் அசுப பலன்கள் குறையும்.

நாகத் துவாஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹே
தந்நோ ராகு ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தைத் தினசரி 9 முறை கூறி வந்தால் ராகுவினால் ஏற்படும் அசுப பலன்கள் குறையும்.

ராகு பகவானுக்கு உளுந்து வடை விசேஷமாகும். அதை நெய்வேத்தியம் செய்து தானம் செய்யலாம். ராகு, கேதுகளினால் தோஷம் ஏற்பட்டு பருவமடைந்தும் நீண்ட காலம் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் அரச மரம், வேப்ப மரமும் சேர்ந்துள்ள இடத்தின் கீழுள்ள நாகசிலைக்குப் பால்விட்டு, அபிஷேகம் செய்து வர வேண்டும். செவ்வாய்க்கிழமையில் செய்வதே நல்லது. இவ்வாறு 48 நாட்கள் செய்ய வேண்டும்.

பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்தும் முட்டை வைத்தும் ஒரு மண்டலம் வழிபாடு செய்யலாம். இதனால் திருமணம் விரைவில் நடக்கக் கூடும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கும், நாகதோஷம் நீக்கி புத்திர பாக்கியம் விரைவில் கிடைக்கும். திருமணம் விரைவில் நடக்கவும் இதுபோல் வழிபாடு செய்து வர வேண்டும்.

ராகு பகவானுக்கு உளுந்து பிரதான தானியம் ஆகும். இதை நவக்கிரக சன்னதியில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ராகுவுக்கு வைத்து வலம் வந்து பூஜித்தால் தோஷம் நீங்கும். இதனால் சகல கஷ்டங்களும் நீங்கும்.

ராகுவுக்கு அதிதேவதை பத்ரகாளி ஆகும். எல்லா சிவாலயங்களிலும் வடக்குப் பார்த்த நிலையில் துர்க்கை அம்மன் இருக்கும். அந்த அம்மனுக்கும் வெள்ளிக்கிழமை தோறும் எலுமிச்சை பழத்தோலில் விளக்கேற்றி பூஜித்து வர சகலதோஷங்களும் தீரும்.

தினசரி துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களைப் படித்து வர வேண்டும்.

தினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும்.

துர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும். நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி வலம் வர வேண்டும். பிரச்சினையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.

ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லிவர வேண்டும்.

கேது பகவானுக்கு பரிகாரமாக ராமேஸ்வரம் சென்று சாந்தி செய்வது உத்தமம். காஞ்சியில் உள்ள சித்ரகுப்தன் கோவில் சென்று வழிபாடு செய்வது உத்தமம்.



வெள்ளியில் ஐந்து சிரசு நாகர் வைத்து பூஜை வழிபாடு செய்வது உத்தம பலன்கள் உண்டாகும். கேது பகவானுக்கு அதிதேவதை விநாயகர். முதற்கடவுளான விநாயகப் பெருமானை ஞாயிறு அன்று தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும்.

நாகர் தலத்தில் நாகவழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. அரச மரத்தடியில் நாகர் சிலையை வழிபட்டு, நாகருக்கு பால் ஊற்றி, மரத்தைச் சுற்றிவரும் பெண்கள் தங்கள் மணாளனுடன் ஒருமித்து வாழவும், மகப்பேறு பெற்று சக்தியின் கருணையையும், அருளையும் பெறுகிறார்கள் என்பது பலரும் அறிந்த உண்மை.

கேது பகவான் பரிகாரமாக ஷோடச கணபதி ஹோமம் செய்வது விசேஷம். மேலும் சண்டி ஹோமம் செய்வதால் கேது பகவானைத் திருப்திப்படுத்த முடியும்.

கேதுவுக்கு உரிய அதிதேவதையான விநாயகருக்குரிய ஸ்தோத்திரங்கள், கேது ஸ்தோத்திரங்கள் படித்து வர வேண்டும். தினமும் அரசு, வேம்பு, விநாயகர், நாகர் ஆகியோரை 9 தடவை அல்லது விநாயகர் ஆலயத்தை 9 தடவை வலம் வரலாம்.

கேது இருக்கும் கிராகாதிபர் கிழமைகளில் கேதுவுக்காவது, விநாயகருக்காகவது அர்ச்சனை செய்ய வேண்டும். செவ்வாய் பகவானுக்குச் செய்கின்ற பரிகாரம் கேதுவுக்கும் பொருந்தும் என்ற கருத்துண்டு.

மாத சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல்லினால் அர்ச்சனை செய்து வரவும். ஞாயிறு தோறும் ஆஞ்சநேயப் பெருமாளைத் துளசியினால் அர்ச்சித்து வரலாம்.

கேதுவுக்கு உரிய தியானம் காயத்ரி, அஷ்டோத்திர மந்திரங்களைத் தினமும் ஒருமுறை கூறி வரலாம்.
Tags:    

Similar News