ஆன்மிகம்

நவக்கிரக தோஷம், திருமண தடையை நீக்கும் கோவில்

Published On 2019-01-12 04:14 GMT   |   Update On 2019-01-12 04:14 GMT
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ளது வைரவன் கோவில். இந்த கோவில் பரிகாரங்கள் செய்தால் நவக்கிரகங்களின் தோஷம், திருமண தடைகள் அகலும்.
சிவபெருமானால் ஸ்தாபிதம் செய்யப்பட்ட இத்தல கால பைரவருக்கு, ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமியிலும் அர்த்த ஜாமத்தில் உலக நலன் கருதி சுவர்ண ஆகர்ஷண பைரவ மூலமந்திரம் ஜபித்து சிறப்பு ஹோமம் நடைபெறுகிறது. அத்துடன் அன்று 108 வலம்புரி சங்காபிஷேகமும் கலசாபிஷேகமும் நடக்கிறது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு அர்த்த ஜாமத்தில் காலபைரவரை வழிபட அஷ்டலட்சுமிகளின் ஆசியும், கால பைரவரின் வரங்களும் ஒருங்கே கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

இந்த கால பைரவரை அஷ்டமி திதியிலும், திருவாதிரை நட்சத்திரத்திலும் ஞாயிறு மற்றும் வியாழக் கிழமை உச்சி காலத்திலும், ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களின் ராகு காலத்திலும் வணங்குவது நல்ல பலனைத் தரும்.

நவக்கிரகங்களை தன்னுடைய சரீரத்தின் சிரம் முதல் பாதம் வரை உள்ளடக்கியவர் கால பைரவர். எனவே இவருக்கு செய்யப்படும் அனைத்து பூஜைகளும் நவக்கிரகங்களின் தோஷங்களை நிவர்த்தியாக்கும் பூஜைக்கு நிகரானதாகும்.

ராகுகால நேரத்தில் பைரவருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு, அவரை வணங்கினால் பல நன்மைகள் கிடைக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். தர வேண்டிய பணத்தை திருப்பித் தர வேண்டிய சூழ்நிலை உருவாகும். சனியின் தாக்கம் தீரும். கடுமையான கர்மவினைகள் தீர்ந்து விடும். திருமண தடைகள் விலகும். புத்திரபாக்கியம் கிட்டும். பைரவரை பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் தீரும்.

பஞ்சதீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், பசு- நெய் ஆகியவை ஆகும். இவற்றை தனித் தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம். ஒன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித்தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். மேலும் அஷ்டமி நாளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம்.

Tags:    

Similar News