ஆன்மிகம்

பாவம் போக்கி மோட்சம் தரும் நரசிம்மர்

Published On 2018-11-17 08:14 GMT   |   Update On 2018-11-17 08:14 GMT
சோளிங்கபுரத்தில் யோக நிலையில் அருளும் அந்த சிங்கபிரானைச் சரணடைந்தால் மோட்சம் கிட்டும். பாவங்கள் நீங்கும். துன்பங்கள் பறந்தோடும்.
நரசிம்மர் பல்வேறு வடிவங்களில் பல்வேறு தலங்களில் கோயில் கொண்டு அருள்கிறார். அவற்றில் ஒன்று, சோளிங்கர். ஒரு ஆண்டில் பதினோரு மாதங்கள் இத்தலத்தில் யோக நிலையிலேயே, கண்மூடி அமர்ந்திருக்கும் இந்த சிங்கபிரான், கார்த்திகை மாதம் மட்டும் கண் திறப்பதாக ஐதீகம். ஆகவே இத்தலத்தில் கார்த்திகை மாதம் முழுக்க திருவிழா கொண்டாடப்படுகிறது. இவருடன் அமிர்தவல்லித்தாயார், அருகிலுள்ள சிறிய மலையில் சங்கு, சக்கரபாணியாக யோக நிலையில் அனுமன் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.

திரேதாயுகத்தில் வாழ்ந்து வந்த இந்த்ரத்யும்னன் என்ற மன்னன், தன் தோள்களில் திருமாலின் சின்னங்களான சங்கு, சக்கர அடையாளங்களோடு பிறந்தவன். எப்போதும் ஹரி நாமத்தை மனதில் இருத்தி வாழ்ந்து வந்தான். தினமும் உறங்குவதற்கு முன், ஹரிநாமம் சொல்வது அவன் வழக்கம். ஒருநாள் அவனறியாமல், ‘ஹர’ என்று உச்சரித்தான்.

உடனே ஈசன் அவனுக்கு தரிசனம் தந்து, ‘‘மன்னா, நீ கூறிய ஹர நாம ஒலியில் மகிழ்ந்தே நான் உனக்குக் காட்சி தந்தேன்’’ என்று கூறினார். மன்னனுக்கோ ஆனந்தம். ஒரே ஒருமுறை ஹர என்று சொன்னதற்கே ஈசன் தனக்கு தரிசனமளித்துவிட்டாரே! உடனே மகாதேவன், ‘‘நான் வேறு, திருமால் வேறு அல்ல. உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்’’ என்று கேட்க, தனக்கு மோட்சம் அருளுமாறு இந்த்ரத்யும்னன் வேண்டினான்.

ஆனால் ஈசனோ, ‘‘நாராயணன் ஒருவனே மோட்சம் அளிக்க வல்லவன். பிரகலாதனுக்கு அருள் புரிந்த பின், உலகோர் அனைவருக்கும் அருள்புரியத் திருவுளம் கொண்டு கடிகாசலம் என்று விளங்கும் சோளிங்கபுரத்தில் நரசிம்ம மூர்த்தியாய் திருமால் வீற்றிருக்கிறார். அங்கு யோக நிலையில் அருளும் அந்த சிங்கபிரானைச் சரணடைந்தால் உனக்கு மோட்சம் கிட்டும்’’ என்று கூறினார். அதன்படியே இந்த்ரத்யும்னன் நரசிம்மரின் அருள்பெற்று உய்வடைந்தான்.

சப்த ரிஷிகளும் வாமதேவர் எனும் முனிவரும் பிரகலாதனுக்குப் பெருமாள் காட்டியருளிய நரசிம்ம திருக்கோலத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டனர். அதற்காக அவர்கள் சோளிங்கபுரம் வந்தடைந்து தவம் செய்தனர். அப்போது கும்போதரர், காலகேயர் போன்ற அரக்கர்களின் அட்டூழியங்கள் தலைவிரித்தாடின. தவம் செய்த முனிவர்களை அவர்கள் துன்புறுத்தினர்.

அவர்களிடமிருந்து முனிவர்களை காக்க நரசிம்மர், அனுமனிடம் சங்கு, சக்கரங்களைக் கொடுத்து அரக்கர்களை கொல்ல ஆணையிட்டார். அரக்கர்கள் அழிவுக்குப்பின் சப்த ரிஷிகளும் ஆஞ்சநேயரும் இத்திருத்தலத்தில் நரசிம்மமூர்த்தியின் தரிசனம் பெற்று மகிழ்ந்தனர். நரசிம்மரின் ஆணைப்படி அவர் அருள் புரியும் பெரிய மலையின் அருகே உள்ள சிறிய மலையில் சங்கு சக்கரத்துடன் அமர்ந்து அனுமன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
Tags:    

Similar News