ஆன்மிகம்

சந்தனத்தால் நோய் தீர்க்கும் திருத்தலம்

Published On 2018-05-24 03:01 GMT   |   Update On 2018-05-24 03:01 GMT
உவரி சுயம்புலிங்க சுவாமியின் மேல் சந்தனத்தை பூசி ரத்தத்தை நிறுத்திய காரணத்தால் அவரை வழிபட வரும் பக்தர்களுக்கும் சந்தனத்தை மேனி எங்கும் பூசுவதற்கு கொடுக்கின்றனர்.
கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள புண்ணியத் தலம், உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில். உலகை காக்கும் பரம்பொருளான பரமேஸ்வரன் லிங்க வடிவில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார்.

முன்னொரு காலத்தில் உவரி, மணல் குன்றுகள் நிறைந்த பகுதியாக இருந்தது. கடம்பக் கொடிகள் அதிகமாக வளர்ந்து இருந்ததால் ‘கடம்பவனம்’ என்றும் அழைக்கப்பட்டது. இந்தப்பகுதியில் வாழ்ந்த ஆயர்குல பெண் ஒருவர் பால் வியாபாரத்திற்காக சென்ற போது, கடம்பக்கொடி காலில் பட்டு பால் சிந்தியது. இவ்வாறு பலநாட்கள் ஒரே இடத்தில் பால் சிந்தியது. இதை அறிந்த அந்தப்பெண்ணின் கணவர் ஆவேசப்பட்டு கடம்பக்கொடியை புதர் என நினைத்து வெட்டினார். அப்போது அதிசயமாக கடம்பக்கொடியில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது.

இதனால் செய்வதறியாது திகைத்த அவர், இதுபற்றி ஊர் பெரியவரிடம் கூறினார். இது குறித்து தகவல் அறிந்ததும் மக்கள் கூட்டம், கூட்டமாக அந்த பகுதிக்கு வந்து பார்த்தனர். அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நின்றனர். அப்போது ஊர் பெரியவர், சுவாமியின் அருளால் அருள்வாக்கு கூறினார்.

ரத்தம் வடியும் இடத்தில் சந்தனத்தை அரைத்துப் பூசினால் ரத்தம் வடிவது நின்று விடும் எனக்கூறி, அந்த வனப்பகுதியில் சந்தனமரம் இருக்கும் இடத்தின் அடையாளத்தையும் கூறினார். அவர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்ற மக்கள், அங்கு சந்தன மரம் இருப்பதை பார்த்து வியப்படைந்தனர். பின்னர் சந்தன மரத்தின் கொம்பை எடுத்து அரைத்து சந்தனத்தை ரத்தம் வந்த இடத்தில் பூசினார்கள். சந்தனத்தைப் பூசியதும் ரத்தம் நின்று விட்டது.

உவரி சுயம்புலிங்க சுவாமியின் மேல் சந்தனத்தை பூசி ரத்தத்தை நிறுத்திய காரணத்தால் அவரை வழிபட வரும் பக்தர்களுக்கும் சந்தனத்தை மேனி எங்கும் பூசுவதற்கு கொடுக்கின்றனர். சுவாமியின் திருமேனியில் தினமும் சந்தனத்தை அரைத்து பூசுகின்றனர். தீராத நோய் உள்ளவர்களும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும் சந்தனத்தை மருந்தாக்கி நலம் பெறுகின்றனர். சந்தனம், விபூதியை தண்ணீரில் கலந்து அருந்துகிறார்கள்.
Tags:    

Similar News